அண்ணாவும் கலைஞரும் வளர்த்த கட்சியை அம்போனு விட்டுடாதீங்க தலைவரே ! ஆதங்கப்படும் பிரபல கவிஞர் !
தமிழகத்தில் டீக்கடை பெஞ்ச் அரசியலை சாமானியனிடத்திலும் கொண்டு சென்ற அரசியல் கட்சி என்றால் அது தி.மு.க. என்பார்கள். அது, தினசரிகளின் காலமாகவும் இருந்தது. அந்த தினசரிகளின் வழியே, இலக்கிய தடத்தில் கவிதை தளத்தில் தொடர்ந்து சமூக உரையாடலை தொடர்ந்து நடத்திவந்தவர்களுள் குறிப்பிடத்தக்கவர் திருச்சி இலால்குடியை சேர்ந்த ஆங்கரை பைரவி.
தற்போதைய அரசியல் சூழல் குறித்து உருக்கமான கடிதம் ஒன்றை முதல்வருக்கு எழுதியிருக்கிறார், அவர். அந்த கடிதத்தின் முழுமையான பகுதி இதோ:
என் அன்பான முன்னாள் முதல்வர் மு க ஸ்டாலின் ஐயா அவர்களுக்கு வணக்கம்!
அந்த காலத்தில் இருந்தே, கத்திக்கிட்டு எழுதிக்கிட்டு கிடக்கிறோம். நீங்க பக்கத்துல இருக்குறவனையும் ஜால்ரா போடுறவனையும் நம்பிகிட்டு அவன் சொன்னதுதான் வேதம் என்று இருந்தீங்க. இப்ப அனுபவிக்கிறீங்க.
கொஞ்சம் இந்த பக்கமும் திரும்பி பாருங்க. கட்சிக்காரன்னு சொல்லிகிட்டு சுரண்டி பிழைச்சவன்லாம் இல்ல. கட்டையில போயிட்டான். கட்சி மட்டும் இன்னும் உயிரோட இருக்குன்னா, அதுக்கு பெரியவங்க போட்ட அஸ்திவாரம் தான். அதை உடைத்து விடாதீங்க!
தேர்தலில் நிற்கிறாயா? நிதியா எவ்வளவு கொடுப்ப அப்படின்னு கட்சிக்கு போஸ்டர் ஒட்டுறவனை கேட்டா அவன் என்னத்த கொடுப்பான்? இந்தாங்க கொஞ்சம் பசை தான் இருக்குன்னு தான் கொடுப்பான்.

கட்சிக்காகவே கொடி பிடிச்சவன், போஸ்டர் ஒட்டுனவன், ஆட்டோவுல வேன்ல தொண்டைக்கிழிய பிரச்சாரம் பண்றவனு குறைந்தபட்சம் மாவட்டத்திற்கு ரெண்டு பேரா கட்சி நிதி வாங்காமல் நிறுத்தி பாருங்க .திமுகவை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது.
தொண்டர்கிட்ட உழைப்பையும் வாங்கிகிட்டு நிதியும் கேட்டா அவன் எங்கே இருந்து கொடுப்பான்? இந்தக் கொள்கை திமுகவுக்கு மட்டுமல்ல. எல்லா கட்சிக்கும் பொருந்தும் முடிஞ்சா முயற்சி பண்ணி பாருங்க.
பல்லாக்குல ஏறி உக்காந்துகிட்டு நானே ராஜா நானே மந்திரி தூக்குடான்னா எவன் வந்து தூக்குவான்? நடுத்தெருவில் தான் பல்லாக்கு நிக்கும். இப்ப நாம நிக்கிற மாதிரி. புரிஞ்சுகிட்டு பொழைக்க பாருங்கள்.
கட்சி பொறந்த காலத்துல ஆரஞ்சு மிட்டாய். அதுக்குப் பிறகு ஒரு போண்டா இல்லைனா வடை ஒரு டீ. அப்புறம் நாலு இட்லி ஒரு காபி. இப்போது.. குவாட்டர் பிரியாணி 200 ரூபாய் பணம். கட்சி தொண்டனுக்கு வளர்ச்சி இப்படியாதான் இருக்கே தவிர தொண்டன் வளர்ந்த மாதிரியே தெரியல.
இதையெல்லாம் வாங்காமலே, இன்றைய தேதிக்கு வரைக்கும் கட்சிக்காக உழைக்கிற, எழுதற என்னைப் போன்ற ஆட்கள் உங்கள் கண்ணுக்கு படவே இல்லையா? இல்ல யாரும் வந்து உங்க கிட்ட சொல்லலையா? புத்தகத் திருவிழாவுல வெளியூர் எழுத்தாளர்களுக்கு எல்லாம் பணம் கொடுத்தீங்களே, உள்ளூர் எழுத்தாளர்களுக்கு என்ன கொடுத்தீங்க? ஒரு துண்டும் கேடயம் மட்டும் தானே.
12 கிலோ ரேஷன் அரிசி இலவசத்தை தவிர எந்த இலவசத்தையும் எதிர்பார்க்காமல் இன்னைக்கும் திமுக குறித்தும் திராவிடம் குறித்தும் எழுதிக் கொண்டிருக்கிற என்னை போன்ற ஆட்களை உங்களுக்கு அடையாளம் காட்டாமல் போனது உங்களை உடனிருந்து கெடுக்கும் சூழ்ச்சி தானே இது உங்களுக்கு புரியவே இல்லையா?
ஊருக்கு ஊரு இளைஞர் அணி. தொண்டர் அணி. புண்ணாக்கு அணி. புடலங்கா அணின்னு வச்சோமே? அந்த அணி எல்லாம் மாதம் ஒரு தடவையாவது கூடுச்சா? கூட்டம் நடந்துச்சா? இல்ல கொடி பிடிச்சுச்சா? எதுவுமே செய்யல? அப்புறம் அந்த அணி எல்லாம் என்ன பண்ணுச்சு? இதை எல்லாம் ஆளு போட்டு கவனிச்சீங்களா?
இலக்கிய அணின்னு ஒன்னு இருந்துச்சே திமுகவுல அது இருக்கா செத்துப் போச்சா? நீங்க ஆட்சிக்கு வந்த பிறகு அந்த இலக்கிய அணி எத்தனை கூட்டத்தை நடத்துச்சு? கட்சி கொள்கையை, கட்சி வளர்த்தவங்கள கட்சிக்காக எழுதினவங்கள பத்தி எத்தனை கூட்டத்தில் பேசியது? சட்டையில் இருக்கிற பையில காத்து மட்டுமே இருக்கிற தொண்டர்களை காலம் பூரா அப்படியே வைத்திருப்பது சரியா?
அது இனிமே ஒத்து வராது. அதுக்கு புதுசா யாரையாவது பாருங்க. அண்ணாவும் கலைஞரும் வளர்த்த கட்சியை அம்போனு விட்டுடாதீங்க தலைவரே!
நன்றி! வணக்கம்.
– கவிஞர் ஆங்கரை பைரவி”
என்பதாக, யதார்த்தமான கேள்விகளால் துளைத்தெடுத்திருக்கிறார், கவிஞர் ஆங்கரை பைரவி. இதுபோல, களத்திலிருந்து எழும் ஆதங்கங்களை, அடிப்படை உண்மைகளை இனியாவது செவி மடுக்குமா, திமுக தலைமை? என்ற கேள்வியே சாமானிய திமுக தொண்டர்களிடம் தொக்கி நிற்கிறது. பார்ப்போம், என்ன நடக்கிறதென்று?
– அங்குசம் செய்திப்பிரிவு.








Comments are closed, but trackbacks and pingbacks are open.