அங்குசம் பார்வையில் ‘அருள்வான்’
தயாரிப்பு: ’90 பிக்சர்ஸ் புரொடக்சன்ஸ்’ எஸ்.ஜி.சரவணன், இயக்குனர்: கணேஷ் விநாயகன், நடிகர் -நடிகைகள்: அருள்நிதி, ஆரவ், பேபி கிருத்திகா, ரம்யா பாண்டியன், காளி வெங்கட், ஜான் விஜய், வினோதினி வைத்தியநாதன், கவிதா பாரதி, அருள்தாஸ், விடிவி கணேஷ், ‘சித்தப்பு’ சரவணன், ஒளிப்பதிவு: எம்.சுகுமார், இசை: ஜி.வி.பிரகாஷ்குமார், எடிட்டிங்: லாரன்ஸ் கிஷோர், ஆர்ட் டைரக்டர்: லால்குடி இளையராஜா, பிஆர்ஓ: நிகில் முருகன்
தேனி மாவட்டத்தின் மலைப்பகுதிகள் தான் கதைக் களம். அங்குள்ள பூங்கொடி கிராமத்தில் மலைத்தேன் எடுத்து பிழைப்பு நடத்தும் தம்பதிகள் கந்தன் [ ஆரவ்], அமரவள்ளி[ரம்யா பாண்டியன்] தம்பதிகள். இவர்களின் மகள் குறிஞ்சி[பேபி கிருத்திகா]க்கு படிக்க வேண்டும் என்பது லட்சியம். ஆனால் அந்த சமூகத்தில் பெண் பிள்ளைகளுக்கு இருக்கும் கட்டுப்பாடுகளைச் சொல்லி பள்ளிக்கு அனுப்ப மறுக்கிறாள் தாய் அமரவள்ளி. ஆனால் அப்பா கந்தனோ, மகளின் ஆசைக்கு துணை நிற்கிறார். இங்கிருந்து 15 கி.மீ.தூரம் மலைப்பகுதியில் நடந்து போனால் தான் பள்ளிக்கூடம் என்ற காரணமும் குறிஞ்சியின் படிப்புக்குத் தடை போடுகிறது. அந்த சிறுமியின் ஊரிலேயே பள்ளிக்கூடம் வரணும்னா, கலெக்டரைப் போய் பாருன்னு யோசனை சொல்கிறார், 15 கி.மீ.தள்ளியிருக்கும் பள்ளியின் ஆசிரியை வினோதி வைத்தியநாதன்.
குறிஞ்சி, கலெக்டரைப் பார்த்தாளா? பூங்கொடி கிராமத்திற்கு பள்ளிக்கூடம் வந்ததா? வலி நிறைந்த உண்மையுடனும் அறத்துடனும் இந்த ‘அருள்வான்’ க்ளைமாக்ஸ் முடிகிறது.
அந்த மலைவாழ் பழங்குடியின மக்களின் வாழ்க்கை முறை, மின்சாரம், போக்குவரத்து வசதி இல்லாமல் அவர்கள்படும் அல்லல், சிறுமி பூப்பெய்திய மறுநாளே, அவளிடம் நான்கைந்து வண்ணங்களில் கற்களைக் கொடுத்து மாப்பிள்ளையைத் தேர்ந்தெடுக்கச் சொல்லும் பழக்கம், கல்தெய்வ வழிபாடு இவற்றையெல்லாம் ரொம்பவும் தெளிவாக, சுருக்கமாக பதிவு செய்து நம்மை ஆச்சர்யப்படுத்துகிறார் டைரக்டர் கணேஷ் விநாயகன்.
ஆரவ்-ரம்யா பாண்டியன் இணையரின் எதார்த்த நடிப்பு ரொம்பவே ஈர்ப்பு. குறிப்பாக மனைவியிடம் மகளின் படிப்பு ஆசைக்கு எதிராகப் பேசிவிட்டு, பின்பு மகளிடம் மன்னிப்புக் கேட்கும் சீனில் ஆரவ் அபாரம். “நீ படி தாயீ…கல்விக்காகப் போராடும் நீயும் ஒரு போராளி தான்”[வசனம் அண்ணன் யுகபாரதி] என ஆரவ் பேசும் வசனம் பெண் குழந்தைகளுக்கு தன்னம்பிக்கை டானிக்.
அதே போல் தமது இன மக்களுக்கு எதிராக சதி செய்து, பத்திரத்தில் தன்னிடம் கைநாட்டு வாங்கி ஃபாரஸ்ட் ரேஞ்சர் ஜான்விஜய் சீட்டிங் பண்ணியது தெரிந்து, சொந்த மக்களுக்கே துரோகம் செய்துவிட்டதாக மனம் குமைந்து கைநாட்டு வைத்த கட்டைவிரலை வெட்டிக் கொண்டு சாகும் அந்த இனத்தலைவரின் தியாகம், சாகப்போகும் அந்த இரவில் கூட தனது பேத்தி குறிஞ்சியிடம், “நீ படிச்சு நாம இழந்ததையெல்லாம் மீட்கணும் தாயீ…” என உருகுவது தான் இந்த ‘அருள்வானின்’ அடிநாதம்.
இடைவேளைக்குப் பின்பு கலெக்டர் முத்துவேலாக எண்ட்ரியாகிறார் நம்ம அருள்நிதி. சிறுமி குறிஞ்சியின் [பேபி கிருத்திகா] நடிப்பும் அதற்குப் பிறகு தான் விஸ்வரூபம் எடுக்கிறது. இந்த இருவரும் தான் படத்தின் ஆதாரசுருதி. மலையிலிருந்து கிளம்பி தனி ஆளாக நகரத்திற்குள் வந்த பின் அந்த சமூக மக்கள் பேசும் காடர் மொழியில் கிருத்திகா பேசும் போது அவளின் முகபாவனைகள், தளர்நடை, கலெக்டரைப் பார்க்க முடியாதோ என்ற ஏக்கம், அதற்கு முன்பு, பஸ் ஸ்டாண்டில் கஞ்சா காமமிருகம், அதன்பின் தனியார் மருத்துவமனையின் காம டாக்டர் ஒருவன் ஆகியோரிடமிருந்து தப்பிய மிரட்சியில் அரசு மருத்துவமனையில் இருக்கும் போது, கலெக்டர் அருள்நிதி தன் தோள் தொட்டு ஆறுதல் சொல்லும் போது சிந்தும் நம்பிக்கைக் கண்ணீர் என சீனுக்கு சீன் நம்மை சிலிரிக்க வைத்துவிட்டார் பேபி கிருத்திகா.
மிகமிக இயல்பான, அளவான, நிறைவான நடிப்பை வழங்கி நம் மனதில் நீக்கமற நிறைந்துவிட்டார் அருள்நிதி. சிறுமிக்கு நேர்ந்த கதியை இன்ஸ்பெக்டர் கவிதா பாரதி சொன்னதும் “ஒருத்தனையுடம் விடாதீங்க, தூக்கி உள்ளே வைங்க. ரெக்கமெண்டேஷனுக்கு வர்றவனையும் தூக்கி உள்ளே வைங்க” என உணர்ச்சிப் பொங்க பேசுவது, அங்கே உள்ள பள்ளியில் கிருத்திகாவைச் சேர்ப்பது, பின்னர் அவளின் ஆசைப்படியே பூங்கொடி கிராமத்திற்கு அரசு அதிகாரிகளுடன் போய் அந்த மக்களைச் சந்தித்து, “இது உங்க காடு. இங்கே எவனாவது அத்துமீறி உள்ளே வந்தா என்னிடம் சொல்லுங்க. நான் உங்களுக்காக வந்து நிற்பேன்” என அந்த மக்களின் நம்பிக்கை நாயகனாக ஜொலிக்கிறார் அருள்நிதி.
அந்த இன மக்களின் துயரங்களை அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லும் பத்திரிகையாளர் தர்மராஜாக காளிவெங்கட்டுக்கு நான்கு காட்சிகளே என்றாலும் எல்லாமே மனதில் நிற்கும் காட்சிகள். குறிப்பாக குறிஞ்சியிடம் காடர் மொழியில் பேசிவிட்டு, “காட்டு மிருகங்களைப் பார்த்துக் கூட பயந்ததில்லை. ஆனா நாட்டுக்குள்ள மனிதர்களைப் பார்து பயமா இருக்குன்னு சொல்றா சார்” என அருள்நிதியிடம் கதறும் சீனில் சபாஷ் காளிவெங்கட் சகோதரா.
வனத்துறை ரேஞ்சராக ஜான்விஜய். வழக்கம் போல் சைக்கோத்தனமாக பேசி கடுப்பைக் கிளப்புகிறார். மாவட்ட வன அதிகாரியாக சித்தப்பு சரவணன், அரசு மருத்துவராக நிரோஷா, ஆசிரியையாக வினோதி வைத்தியநாதன், பழங்குடியின மக்களின் தலைவராக அருள்தாஸ், என அனைவருமே அருள்வானில் மின்னுகிறார்கள்.
கேமராமேன் எம்.சுகுமாருக்கு மட்டும் எப்படித்தான் இப்படிப்பட்ட ஆபத்தான லொக்கேஷன்கள் வசப்படுகிறதோ? மனுஷனின் உழைப்பைச் சொல்ல வார்த்தைகளே இல்லை. அதிலும் மலைகளுக்கு நடுவே விழும் அருவியைக் காட்ட அவர்பட்ட கஷ்டங்களை நினைத்தாலே உடம்பெல்லாம் சிலிர்க்கிறது. ஜி.வி.பிரகாஷின் பாடலும் பின்னணி இசையும் இந்த அருள்வானுக்கு ஜீவனாக இருக்கிறது. இடைவேளை வரை டாக்குமெண்ட்ரித்தனம் லேசாக தெரிந்தாலும் அதன் பின்பு படத்தை க்ரிப்பாக கொண்டு போக உதவியுள்ளார் எடிட்டர் லாரன்ஸ் கிஷோர். மலையில் ஆரவ் வீடு மற்றும் சில குடிசைகளில் ஆர்ட் டைரக்டர் லால்குடி இளையராஜாவின் கிரியேட்டிவிட்டி தெரிகிறது.
இந்த ‘அருள்வானின்’ ஆகப்பெரிய பலம் அண்ணன் யுகபாரதியின் சாட்டையடி வசனம் தான். க்ளைமாக்ஸில் குறிஞ்சி கலெக்டராகிய பின்பு “இதற்கெல்லாம் காரணம் எங்கள் ஐயா தான்” எனப் பேசும் போது அருள்நிதியைக் காட்டுகிறது கேமரா. [ அவர் சொல்லும் ஐயா யார்னு நல்லோர்கள் எல்லோருக்கும் தெரியும்]. அதே போல் சங்க இலக்கியப் பாடலில் கல்வி குறித்த ஒரு பாடலை கலெக்டர் குறிஞ்சி மேற்கோள்காட்டுவது யுகபாரதியின் அறம், நேர்மைத்திறம்.
கல்வியின் அவசியத்தை, குறிப்பாக பெண் குழந்தைகள் கல்வியின் மகத்துவத்தை இந்த ‘அருள்வான்’ என்கிற மிகச்சிறந்த படைப்பு மூலம் தந்த இயக்குனர் கணேஷ் விநாயகனுக்கும் இதை தயாரிக்க முன்வந்த எஸ்.ஜி.சரவணனுக்கும் எமது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.
அங்குசம் பார்வையில் ‘அருள்வான்’ 80/100
— ஆண்டவர்







Comments are closed, but trackbacks and pingbacks are open.