பெண்ணியம், கல்வி, சிறார் இலக்கிய எழுத்தாளா் ”சாலை செல்வம்”
சிறார் இலக்கியம் -15 - ஆசிரியா் அறிமுகம்
பெண்ணியலாளர், கல்வியாளர், எழுத்தாளர் என அறியப்படுபவர். புதுக்கோட்டைமாவட்டத்தில் உள்ள மெய்வழி சாலையில் பிறந்து வளர்ந்தவர். கல்லூரி காலத்திலிருந்தே தன்னை பொதுவாழ்வில் ஈடுபதுத்திக் கொண்டவர். கல்வி, பெண்கள், குழந்தைகள் சார்ந்து தொடர்ந்து எழுதி வருபவர். சாதி மதம் கடந்த செயல்பாடுகளில் தன்னை இணைத்துக் கொள்பவர். அம்பெத்கர், பெரியார், மார்க்ஸ், வள்ளலார் போன்றோரின் கோட்பாடுகளை நம்பிக்கையோடு முன்னெடுத்து செல்பவர். தமிழக அரசின் கல்விக் கொள்கை உருவாக்கம், பாடநூல் குழு, புத்தகப் பூங்கொத்து, இளந்தளிர் இலக்கியத்திட்டம், சிறார் வாசிப்பு முயற்சிகள் என தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.
தமிழகப் பெண்கள் ஒருங்கிணைப்பு, ‘கூடு’ பெண்கள் வாசிப்பரங்கம், சாவித்திரிபாய் பெண்கள் பயணக்குழு போன்ற பெண்களுக்கான அமைப்புச் செயல்பாடுகளை முன்னெடுத்தவர்.
தமிழக மாற்றுக்கல்விக்கான கூட்டமைப்பு, கூழாங்கல் குழந்தைகள் நூலகம் ஆகியவற்றின் உருவாக்கம் மற்றும் செயல்பாடுகளில் இவரது பங்கு குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளராக உள்ளார். மலையேற்றத்திலும் பயணங்களிலும் ஈடுபாடுடையவர்.
சிறார் எழுத்தாளருக்கான பேராசிரியர் முனைவர் சித்ரா முருகுபாண்டியன் – நினைவு விருது,
அம்மாவின் சேட்டைகள் நூலுக்காக – படைப்புச்சங்கமம் விருது
எழுத்துக்களுக்காக – குயிலைப்பள்ளியின் காமராசர் விருது
சிறார் இலக்கியத்திற்கான தமிழ் விருது 2026 – எஸ் ஆர் வி பள்ளிக் குழுமத்தின் விருது
புற்றிலிருந்து உயிர்த்தல், வாழ்வியலாகும் கல்வி, அம்மாவின் சேட்டைகள், பேசும்பொற்சித்திரமே, கற்றலும் கற்பித்தலும்… இவரது முக்கியமான புத்தகங்கள். சிறார் வாசிப்பிற்காக 85க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியும் மொழி பெயர்த்தும் உள்ளார். பாண்டிச்சேரியில் ஆசிரியர் பயிற்றுநராக 12 ஆண்டுகள் பணியாற்றினார்.

எழுத்தாளர் சாலை செல்வம் பெண்ணியம் கல்வி சிறார் இலக்கியம் என பல துறைகளில் சிறந்து விளங்குகிறீர்கள் அதைப்பற்றி கூற முடியுமா?
இம்மூன்று துறைகளையும் தனித்தனியாகவும் பார்க்கலாம். இணைத்தும் பார்க்கலாம். பெண்கள் சார்ந்து பணி செய்து கொண்டிருக்கும் பொழுது கல்வி, சிறார்களையும் அதனோடு இணைந்து இருக்கின்றனர். கல்வி சார்ந்து பணியாற்றும் பொழுது பெண்கள் சார்ந்த விஷயங்கள் அதனோடு பின்னிப்பிணைந்து இருக்கிறது. கல்வியும் குழந்தைகளும் பெண்களும் இலக்கியமும் ஒன்றோடு ஒன்று இணைந்த செயல்பாட்டை முன் வைக்கிறது என்றுதான் நான் பார்க்கிறேன்.
1991இல் நாங்கள் பெண்களாய் இணைந்து தமிழகப் பெண்கள் ஒருங்கிணைப்பு என்ற பெயரில் செயல்படத்துவங்கினோம். பெண்களிடையே அரசியல் மற்றும் பகுத்தறிவு சார்ந்த உரையாடலை முன்னெடுத்தோம்.
2006 ஆம் ஆண்டு குழந்தைகளுக்கான கூழாங்கல் என்னும் நூலகம் துவங்கி அதோடு கூழாங்கல் என்னும் பத்திரிக்கையையும் துவங்கினோம் நூலகத்தின் மூலம் குழந்தைகளிடையே விதவிதமான வாசிப்பை முன்னெடுத்தோம். அதோடு கதை சொல்லல் எழுதுதல் வரைதல் போன்ற நுட்பமான விதவிதமான செயல்பாடுகளையும் எடுத்துச் செல்ல கூழாங்கல் உதவியது.
கல்வி, சிறார் சார்ந்து நீங்கள் ஆற்றிய பணி பற்றி சொல்லுங்கள்
12 ஆண்டுகள் புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் பயிற்றுநராக பணியாற்றி இருக்கிறேன். பாடங்களோடு குழந்தைகளையும் குழந்தைகளின் கற்றலையும் குழந்தைகளின் சமூகப் பின்னணியையும் இணைத்து கல்வியை முன்னெடுத்துச் செல்லக்கூடிய ஒரு பணியாக அது இருந்தது
டெல்லியில் உள்ள நிரந்தர் அமைப்பிற்காக என் தோழி வ.கீதாவுடன் இணைந்து தமிழக அரசின் பாட புத்தகங்களை ஆராய்ச்சி செய்யும் பணியில் ஈடுபட்டோம். பாடப்புத்தகத்தில் சாதி மத பொருளாதார பாலியல் கருத்துக்களை பாடப்புத்தகம் கையாண்டுள்ளதைப் பற்றியது அது. பாடப்புத்தகம் பிற்போக்கான பல கருத்துக்களைத் தாங்கியிருப்பதை பார்க்க முடிந்தது.
தமிழக அரசின் பாட புத்தக குழுவில் பங்கெடுத்து செயல்படும் வாய்ப்பு கிடைத்தது.
எஸ் எஸ் ஏ உடன் இணைந்து சிறார் வாசிப்பிற்கான நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகப் பூங்கொத்து வரிசை புத்தகங்களைத் தயாரிக்கும் பணியை மேற்கொண்டோம். ஆசிரியர்களைக் கொண்டு உருவாக்க்கப்பட்ட இப்புத்தகங்கள் அரசுப்பள்ளியில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்தது.
கொரோனாவிற்கு பிந்தைய காலத்தில் வாசிப்பு இயக்கப் புத்தகங்களை அரசு கொண்டு வந்த பொழுது பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் சார்பாக நானும் கலந்து கொண்டு பங்காற்றினேன்.
பாடநூல் கழகம் வெளியிட்ட இளந்தளிர் இலக்கியத் திட்டத்தின் மூலம் வெளியிடும் சிறார் இலக்கிய நூல்களை உருவாக்கும் குழுவில் பங்கெடுத்து பணியாற்ற முடிந்தது.
மாநில கல்விக்கொள்கை உருவாக்கும் குழுவின் கல்விக்கான துணைக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக இருந்தேன்.
தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளராகச் செயல்பட்டு வருகிறேன்.
எனக்கு வாய்ப்புக் கிடைத்தவற்றில் என் பங்களிப்பை செலுத்திவருகிறேன்.
சிறார் இலக்கியத்தில் தங்களின் ஈடுபாடு எப்படி உருவானது என்பதைப் பற்றி கூற முடியுமா?
குறிப்பிட்டகாரணம் என்று எதுவும் இல்லை. சிறுவர்களுக்கான கதைகள் சிறுவர்களால் படிக்கமுடியாமல் இருப்பது காரணமாக இருக்கலாம். நன்னடத்தைக் கதைகள் மூலம் வலிந்து சொல்லப்பட்ட கருத்துகளால் யாருடைய வழ்வும் மாறவில்லை என்பதும் கூட காரணமாக இருக்கக்கூடும். குழந்தைகளின் மகிழ்ச்சியான உலகத்திற்கும் அவர்களுக்கான எழுத்துக்களுக்கும் தொடர்பற்று இருப்பது…இப்படி பல காரணங்கள் சொல்லிக் கொண்டே போகலாம். சிறார்களுக்கு நெருக்கத்தை ஏற்படுத்தக் கூடிய கதைகள் கிடைக்க வேண்டும் என்பதுதான். நவீன சிறார் கதைகளை எழுதியும் மொழி பெயர்த்தும் வருகிறேன். கல்வியில் ஈடுபட்டு வருவதால் மொழி கற்றலுக்குக் குறிப்பாக வாசிக்க, எழுத கதைகள் பேருதவியாக இருக்கின்றன என்பதை பல பரிசோதனைகளில் கண்டடைய முடிந்ததாலும்…
உங்கள் கதையின் தலைப்புகள் வித்தியாசமானவையாக இருக்கின்றன அதைப்பற்றி சொல்லுங்களேன்
என் கதைகள் வித்தியாசமாக இருப்பதால் தலைப்புகளும் வித்தியாசமாக இருக்கின்றன. கதைகள் குழந்தைகளுடன் பேசுபவயாக, குழந்தைகளுக்கு அருகில் நடக்கும் விஷயங்களை சொல்லுபவையாக, குழந்தை தானே அக்கதைக்குள் தன்னைப் பொருத்திக் கொள்ளும்படியாக எழுதப்பட்டவை.
அதே நேரத்தில் தின வாழ்வில் இருந்து வேறுபட்டும் இருக்கக்கூடியவை. அம்மா அப்பா என்னும் என் கதையில் ஒரே புத்தகத்தில் இரு புறமும் தலைப்பிட்டு இருவேறு கதையாக இருக்கும் ஒரு ஒருபுறம் அம்மா என்ற கதை இருக்கும் இன்னொரு புறத்தில் அப்பா என்ற தலைப்பில் இருக்கும்.
அம்மா தன் மகளுக்கு மருந்து கொடுத்து, உணவு கொடுத்து, சைக்கிள் கற்றுக் கொடுத்து… என்று கதை நகரும். அதேபோல்
அப்பா தன் மகளுக்கு மருந்து கொடுத்து, உணவு கொடுத்து, சைக்கிள் கற்றுக் கொடுத்து… என்பதுபோல் நகரும். அம்மா செய்யக்கூடிய அனைத்து வேலைகளையும் அப்பா செய்வார். அப்பா செய்யக்கூடிய அனைத்து வேலைகளையும் அம்மா செய்வார்.
‘தங்கச்சி பாப்பா பொறந்துட்டா’ என்ற கதையில் குடும்பத்தில் எல்லோருக்குமே ஆண் பிள்ளை பிறக்க இருக்க வேண்டும் என்று இருக்கும். ஆனால் அக்காவாகிய குட்டி பெண்ணிற்கு மட்டும் தனக்கு தங்கச்சி வேண்டும் என்று இருக்கும். பிரசவத்தன்று பெண் குழந்தை பிறக்கும்.
‘கலா பாட்டியும் நிலா பேத்தியும்’ என்ற கதையில் கலா பாட்டி குழந்தைகளுக்காக நீங்கள் எழுதிய கையேடுகள் மிகவும் முக்கியமானவை அவை பற்றி சொல்லுங்கள்
உடல் வழி(லி)ப் பயணம், ஆண் குழந்தை பதின்மப் பயணம், பெண் வளர்கிறேன் ஆண் வளர்கிறேன், கனவும் நனவும் …போன்றவை
வளரும் பொழுது தன் உடலை அறிவியல் பூர்வமாகவும் அதை ஒட்டிய கலாச்சார விஷயங்களையும் புரிந்து, விடுதலை பெற்ற மனுஷிகளாக மனுஷன்களாக வளர்வதற்கானது.
பெற்றோரியம் குறித்து தங்கள் கருத்து?
பேசும் பொற்சித்திரமே – குழந்தை மையப் பெற்றோராயிருத்தல் என்ற புத்தகம். ஒரு நவீன சிந்தனை நோக்கிய பயணமாகவும் இல்லாமல் இருக்கிறது. தன் குழந்தைக்காக எதை வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கும் பெற்றோர்களால் தான் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தேடி கண்டடைய முடிவதில்லை. ஒரு வியாபார கலாச்சாரங்கள் முன்வைக்கும் கல்வி, போட்டித் தேர்வு, பொருள் வாங்குதல் என்பதாகவே உள்ளது. கல்வியாளராகவும் இலக்கியவாதியாகவும் பெண்ணிய செயல்பாட்டாளராகவும் இருக்கும் நான் பெற்றோரியம் குறித்து எழுதுவதும் உரையாடுவதும் கடமை என்று உணர்கிறேன்.
குழந்தைகள் வாசிப்பதற்கு என்ன செய்ய வேண்டும்
குழந்தைகள் வாசிப்பதற்கு பல்வேறு முயற்சிகள் எடுக்கவேண்டும் பள்ளியில், வகுப்பறையில், நூலகத்தில், சமூகத்தில், குடும்பத்தில் என ஒவ்வொரு இடத்திலும் மேற்கொள்ள வேண்டியுள்ளது.
வாசிப்பு மரபை ஒவ்வொரு குடும்பத்திலும் உருவாக்க வேண்டும்.
குழந்தைகள் வாசிப்பதற்கான விதவிதமான புத்தகங்கள் வாங்க வேண்டும். அவை நவீன சிறார் இலக்கியமாக இருக்க வேண்டும்.
நம் குழந்தைகளின் வாசிப்பு நிலை, விருப்பம் அறிந்து… புத்தகங்கள் வாங்கிக் கொடுத்தல்
இளம் வயதிலேயே நூலக பழக்கத்தை குழந்தைகளுக்கு உருவாக்க வேண்டும்.
வாசித்த கதைகள் பற்றி பேசுதல், கதை சொல்ல சொல்லிக் கேட்டல், படித்த விஷயங்கள் பற்றி விவாதித்தல்…
நல்ல புத்தகங்களோடு சேர்ந்து கலை செயல்பாடுகளில் குழந்தைகளை ஈடுபட வைத்தல் ஓவியம் வரைதல் அடித்தல் நல்ல சினிமாக்களை விரும்பிப் பார்க்க வைத்தல் குழந்தையின் நிகழ்வில் பங்கெடுக்க வைத்தல். என அடுக்கிக் கொண்டே போகலாம்






Comments are closed, but trackbacks and pingbacks are open.