போர்ஜரி கையெழுத்து … போலி ஆவணம் … வகையாக சிக்கிய வங்கி அதிகாரிகள் !
10 வகையான போலி ஆவணங்களை உருவாக்கியும், அதில் போலியான கையெழுத்தையும் போட்டதாக சர்ச்சையில் சிக்கிய சிட்டி யூனியன் வங்கியின் 6 அதிகாரிகளுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர்.-ஐ ரத்து செய்யவும்; போலீசாரின் விசாரணைக்கு தடை விதிக்கவும் மறுத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சிவகங்கை காஞ்சிரங்கால் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் கேசவ பாண்டியன், திருச்செங்கோட்டில் நேச்சர் டச் கிளாத்திங்ஸ் மற்றும் வின்னர் டெக்ஸ்ட் டிரேடிங் ஆகிய பெயரில் தான் செய்து வந்த எக்ஸ்போர்ட் தொழில் நிமித்தமாக சிட்டி யூனியன் வங்கியில் கடன் பெற்றிருந்ததாகவும்; கொரோனா காலகட்டத்தில் கடனை திருப்ப செலுத்த கால தாமதமானபோது, அவர்களாகவே போலியான ஆவணங்களை உருவாக்கி அதனை பயன்படுத்தி தனது கணக்கில் கடனை வரவு வைத்து, பழைய பாக்கிக்காக அப்படியே திரும்ப எடுத்துக் கொண்டதாகவும்; மேலும், 25 கோடி மதிப்புள்ள தமது சொத்தை வெறும் 1.5 கோடிக்கு ஏலத்தில் விற்று தன்னை நட்டப்படுத்திவிட்டதாகவும்; இதற்கு காரணமான சிட்டி யூனியன் வங்கி அதிகாரிகள் அரவிந்த், குஞ்சிதபாதம், கணேசன், மகாராஜன், சுயம்புலிங்க ராஜா, ராமன் ஆகிய ஆறு பேருக்கு எதிராக நீதிமன்றத்தின் உத்தரவின்படி கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் (74/2024) வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்.
இந்நிலையில், இந்த எஃப்.ஐ.ஆர்-இன் படி போலீசார் விசாரணையை தொடங்க முடியாத அளவுக்கு அடுத்தடுத்து வங்கி அதிகாரிகள் வழக்குகளை தொடுத்து வந்த நிலையில்தான், தற்போது சுயம்புலிங்க ராஜா என்பவர் தொடுத்த வழக்கில் அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இனி, கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் விசாரணையை தொடர தடையேதும் இல்லாத நிலையில், உடனடியாக விசாரணையை தொடர்வார்களா? ஏற்கெனவே 4 வங்கி அதிகாரிகள் நீதிமன்றத்தை நாடிவிட்ட நிலையில், எஞ்சியுள்ள 2 பேர் மீண்டும் பழையபடி வழக்கை தொடுத்து விசாரணையை முடக்கிவைப்பார்களா? என்பதெல்லாம் சினிமாவை விஞ்சிய திருப்பங்கள் நிறைந்த திகில் காட்சிகளாக மாறியிருக்கிறது.
– அங்குசம் புலனாய்வுக்குழு.





Comments are closed, but trackbacks and pingbacks are open.