அங்குசம் பார்வையில் ‘பயமறியா பிரம்மை’ பட விமர்சனம் !
அங்குசம் பார்வையில் ‘பயமறியா பிரம்மை’ பட விமர்சனம் ! தயாரிப்பு & டைரக்ஷன்:’சிக்ஸ்டீன் எம்.எம். பிலிம்’ ராகுல் கபாலி. ஆர்ட்டிஸ்ட்ஸ்: ஜேடி, குரு சோமசுந்தரம், சாய் பிரியங்கா ரூத், ஹரிஷ் உத்தமன், ஜான் விஜய், விஷ்வாந்த், ஹரிஷ் ராஜு, ஜேக் ராபின், வினோத் சாகர், ஏ.கே., திவ்யா மாறன். டெக்னீஷியன்கள்—ஒளிப்பதிவு: பிரவீன் & நந்தா, இசை: கே, எடிட்டிங்: அகில் .பி.ஆர்.ஓ.-யுவராஜ்.
25 வருடங்களில் 96 கொலைகள் (??!!) செய்துவிட்டு ஜெயிலில் இருக்கிறான் ஜெகதீஷ். ஏன் இத்தனை கொலைகள், இவ்வளவு வன்மம் என்பதைத் தெரிந்து கொண்டு, அதை கதையாக எழுத நினைக்கிறான் எழுத்தாளன் கபிலன். இதற்காக ஜெயிலில் ஜெகதீஷை சந்திக்கிறான். அவர்கள் இருவரின் ஜெயில் உரையாடல் மூலம் இந்த ‘பயமறியா பிரம்மை’யை திரையில் காட்சிப்படுத்தியிருக்கிறார் டைரக்டரும் தயாரிப்பாளருமான ராகுல் கபாலி.

படத்தின் காட்சிகள் ஆரம்பாகும் முன்பே, “இதில் கொலைகள் அதிகமாக இருக்கும். ரத்தம் அதிகமாக இருக்கும். ஏன்னா இந்தக் கதைக்கு இது தேவைப்பட்டதே தவிர, நாமாக வலிந்து திணிக்கவில்லை” என லேசான பீதியைக் கிளப்பிய டைரக்டர், அடுத்து… “தான் செய்த கொலைகளை ஜெகதீஷ் நியாயப்படுத்துதல், அழகுபடுத்துதல் [ கரெக்டாத்தான் சொல்லிருக்கோம்ணு நினைக்கிறேன் ] என்ற பார்வையில் தான் பார்க்கிறான்” எனச் சொல்லி, வாந்தி, பேதி வரும் அளவுக்கு டோட்டலாக பீதியைக் கிளப்பிவிட்டார்.
கபிலனின் எழுத்துக்களில் ஜெகதீஷின் வாழ்க்கையைப் படிக்கும் வாசகனுக்கு….. இதற்கு மேல் நமக்கு விளக்கமாகச் சொல்லும் அளவுக்கு, இந்தப் படத்தைப் புரிந்து கொள்ளும் அளவுக்கு அறிவாற்றல்னு கூட சொல்லக் கூடாது, லேசான அறிவுகூட நமக்கு கிடையாது.
இந்த மாதிரியான சினிமாக்கள் எல்லாமே செர்ர்ரியலிசம், தக்காளி ரசம், பருப்பு ரசம்னு ‘இஸம்’ பேசும் அதி நவீன கவிஞர்கள், கவிதாயினிகள், எழுத்துப் பித்தர்கள், சிலாகித்துக் கொண்டாடுவதற்கென்றே அவ்வப்போது தமிழ் சினிமாவில் வந்து கொண்டிருக்கும். ஒரு சில தியேட்டர்களில் ஒரு சில காட்சிகள் ஓடிக் கொண்டிருக்கும். அதை நாம் மேற்சொன்ன ‘இஸவாதிகள்’ பத்துப் பேர் சேர்ந்து பார்த்துவிட்டு, “இப்படி ஒரு அழகியல் குறியீடு கொண்ட சினிமா தமிழ் சினிமாவில் வந்ததேயில்லை. என்ன ஒரு நேர்த்தி, என்ன ஒரு குறியீடு அழகியல் கொண்ட படைப்பு” என தம்மடித்துக் கொண்டும் சரக்கடித்துக் கொண்டும் தம் கட்டிப் பேசுவார்கள்.

ஜாஹிர் உசேன் ஓவியங்களை ரசிக்கத் தெரியவில்லை என்றால், அதில் உள்ள கோடுகளுக்கும் வர்ணங்களுக்கும் அர்த்தம் தெரியவில்லை என்றால், அந்த இஸவாதிகள் நம்மைப் போன்ற வெகுஜனங்களை ரசனைகெட்ட ஜென்மங்கள் என்பார்கள். அதுக்காக இந்த மாதிரி சினிமாக்களையும் ஓவியங்களையும் ரசிச்சு, பாராட்டுவது என்பது நம்மால் முடியாதது. சொன்னா சொல்லிட்டுப் போறாய்ங்க சூனாபாணாக்கள்.
இந்தப் படம் பார்த்த பிரம்மையிலிருந்து இன்னும் நம்மால் மீள்முடியவில்லை. படத்தில் ஏழெட்டுக் கொலைகளை மட்டுமே காட்டியிருந்தார் டைரக்டர். நல்லவேளை ஜெகதீஷ் பண்ணிய 96 கொலைகளையும் படத்தில் காட்டவில்லை. காட்டியிருந்தால் நம்ம கதி என்னவாயிருக்கும்னு நினைச்சாலே கதி கலங்குது.
இந்த பயமறியா பிரம்மை’யில் எழுத்தாளனாக வினோத் சாகர், ஜெகதீஷாக ஐந்து பேர், இல்லல்ல ஆறு பேர் வருகிறார்கள். படம் மொத்தமே 87 நிமிடங்கள் தான். படத்தின் கதைப் போக்கு நமக்குப் புரியாவிட்டாலும் எல்லாக் காட்சிகளிலுமே கேமராக் கோணம் நமக்கு ரொம்பவே பிடித்திருந்தது. அதே போல் மியூஸிக் டைரக்டர் கே யின் பின்னணி இசையும் பல காட்சிகளில் வசப்படுத்தியிருந்தது.

உலகின் பதினேழு நாடுகளுக்கு பைக்கிலேயே சென்ற அனுபவம் உள்ளவராம் டைரக்டர் ராகுல் கபாலி. மேலும் அபாராமன ஓவியம் வரையும் ஆற்றல் உள்ளவராம்.
இதையெல்லாம் வச்சுக்கிட்டு, வெகுஜனங்களுக்கான, நல்ல ரசனையான சினிமாவை உங்க ரசனைப்படி படைக்கலாமே டைரக்டர்?
–மதுரை மாறன்