மலைவாழ் மக்களுக்கு சாலை வசதி கோரி பாஜகவினர் சாலை மறியல்
மலைவாழ் மக்களுக்கு சாலை வசதி கோரி பாஜகவினர் சாலை மறியல்
திருச்சி மாவட்டம் , உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பச்சமலை தென்புற நாடு ஊராட்சியில் உள்ள 16 மலைக்கிராமங்களில் சுமார் 10 ஆயிரம் மலைவாழ் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் அத்தியாவசிய தேவைகள் மற்றும் தங்களின் விளை பொருட்களான முந்திரி, பலா, மரவள்ளிக் கிழங்கு, மாங்காய், அரிய நெல் வகைகள் முதலானவற்றை சந்தைப்படுத்துவதற்கு மலை யிலிருந்து அடிவாரமான சோபனபுரம் வழியாக சுமார் 16 கி.மீ வரை அமைக்கப்பட்ட தார்ச்சாலையானது சுமார் 10 வருடங்களாக குண்டும், குழியுமாகவும் மிகவும் அபாயகரமானதாகவும் இருந்து வருவதால் , அதன் வழியாக அவசர கால மேல்சிகிச்சைக்குக் கூட மலைவாழ் மக்கள் தங்கள் உயிரை பணயமாக வைத்து சென்று வர வேண்டிய அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து பல்வேறு நிலையிலும் பழங்குடியின மக்கள் புதிய தார்ச்சாலை அமைத்து தர போராடி வரும் நிலையில் , பாரதீய ஜனதா கட்சியினர் மலைவாழ் மக்களின் நீண்ட கோரிக்கையான புதிய தார்ச்சாலை அமைத்து தரக்கோரி உப்பிலியபுரம் பேருந்து நிலையம் முன்பு தம்மம்பட்டி சாலையில் 200-க்கும் மேற்பட்ட பாஜகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் அஞ்சா நெஞ்சன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட பாஜகவினர் வனத்துறையின் மெத்தனப் போக்கைக் கண்டித்தும், தமிழக அரசிற்கு எதிராகக் கண்டனங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
முசிறி டிஎஸ்பி யாஸ்மின் தலைமையில், துறையூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் உள்ளிட்ட சுமார் 50 -க்கும் மேற்பட்ட போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்து , தனியார் திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். சாலை மறியல் போராட்டத்தில் மாநில துணைத் தலைவர் ராஜா சுரேந்தர் ரெட்டி, மாவட்ட செயலாளர் ராஜா, பழங்குடியின அணி மாநில பொதுச் செயலாளர் ஆவட்டி கணேசன். மாவட்ட விவசாய அணி துணைத் தலைவர் உமாபாண்டியன், மாவட்ட துணை செயலாளர் செந்தில்குமார் மகளிரணி மாவட்ட செயலாளர் கமலி , உப்பிலியபுரம் வடக்கு மண்டல் தலைவர் லோகநாதன், தெற்கு மண்டல் தலைவர் முருகேசன் , பிரச்சார பிரிவு பழனிவேல் , நகர தலைவர் சரவணன், ஒன்றிய தலைவர் சரவணக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பாஜக தொண்டர்கள் பலர் பங்கேற்றனர்.