தலைமுடிக்குப் பின்னால் இருக்கும் மாஃபியாக்கள்! ‘பிளாக் கோல்டு’ பட சீக்ரெட்!
‘எம்.எம்.ஸ்டுடியோஸ்’ எம்.மூர்த்தி தயாரித்து நவ.13-ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகிறது ‘பிளாக் கோல்டு’ படம். தீரன் அருண்குமார் டைரக்ட் பண்ணியிருக்கும் இப்படத்தின் ஹீரோவாக வெற்றி, ஹீரோயினாக பிரியாலயா, மற்ற கேரக்டர்களில் லிவிங்ஸ்டன், அபிராமி வெங்கடாசலம், அருள் டி.சங்கர், டைரக்டர் ஏ.வெங்கடேஷ், சபீதா ராய், ஜப்பான்குமார், டெலிபோன்ராஜ் உட்பட பலர் நடித்துள்ளனர். படத்தின் ஒளிப்பதிவு : சந்தோஷ்குமார் வீராசாமி, இசை : கவாஸ்கர் அவினாஷ், எடிட்டிங்: தினேஷ்குமார், பாடல்கள் : மோகன் ராஜன், பி.ஆர்.ஓ. : சதீஷ்[எய்ம்].
நவ.13-ல் ‘பிளாக் கோல்டு’ ரிலீசாவதால், படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, நவ.02-ஆம் தேதி சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது. ஹீரோயின் பிரியாலயாவுக்கு உடல்நிலை சரியில்லாததால் விழாவுக்கு வரவில்லை. மற்றபடி நிகழ்ச்சியில் பேசியவர்கள்….
தயாரிப்பாளர் மூர்த்தி, “நடிகனாக வேண்டும் என்ற கனவுடன் சினிமாவுக்கு வந்த நான் இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராகியுள்ளேன். அத்துடன் இதில் சின்ன கேரக்டரிலும் நடித்துள்ளேன். இக்கதையை டைரக்டர் தீரன் பல தயாரிப்பாளர்களிடம் சொல்லி எதுவும் நடக்காததால் என்னிடம் வந்து கதையைச் சொன்னார். நான் எனது மனைவியிடமும் மகளிடமும் சொன்னேன். அவர்கள் ஓகே சொன்ன பிறகு படத்தின் வேலையை ஆரம்பித்தேன். இந்திய சினிமாவில் இதுவரை யாரும் சொல்லாத கதை என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்”.

மியூசிக் டைரக்டர் கவாஸ்கர் அவினாஷ் இழு இழுன்னு இருபத்தைந்து நிமிடம் பேசி, அனைவரையும் நெளிய வைத்தார். ஆனால் பாடலாசிரியர் மோகன் ராஜன் இந்தக் கதை பெரிய அளவில் ஹாட் டாபிக்காக மாறும் என்பதை அழுத்தமாகச் சொன்னார். அபிராமி வெங்கடாசலம், “ஒரு அறிவியல் ஆசிரியர் பாடம் நடத்துவது போல ரொம்பவும் டீடெய்லாக கதை சொன்னார் டைரக்டர் தீரன். நான் நடிக்கும் போலீஸ் அதிகாரி கேரக்டரையும் பக்காவாகச் சொன்னார். இது ஒருவகையான பொலிடிக்கல் க்ரைம் தான்”.

ஹீரோ வெற்றி, “பிளாக் கோல்டுன்னா கச்சா எண்ணெய், நிலக்கரி, மிளகுன்னு நினைப்போம். ஆனால் இதில் நம்மோட தலைமுடிக்குப் பின்னால் இருக்கும் வணிகம், அதில் இருக்கும் மாஃபியாக்களின் நெட் ஒர்க்கை மிக நுட்பமாக சொல்லியுள்ளார் டைரக்டர். இத்துடன் அப்பா—மகனுக்கிடையிலான செண்டிமெண்டையும் மிக்ஸ் பண்ணி கச்சிதமாக ஸ்கிரீன் ப்ளே எழுதியுள்ளார்”.
டைரக்டர் தீரன் அருண்குமார், “இதில் நடித்த ஆர்ட்டிஸ்டுகள், டெக்னீஷியன்கள் அனைவருமே எங்களால் முடிந்த அளவு உழைப்பைக் கொட்டி இப்படத்தை உருவாக்கியிருக்கிறோம். இந்த பிளாக் கோல்டு வெற்றியைத் தீர்மானிப்பது மக்களும் மீடியாக்களாகிய நீங்களும் தான். உங்களின் கைகளில் படத்தை ஒப்படைக்கிறோம். எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்று நானும் தயாரிப்பாளர் மூர்த்தி சாரும் நம்புகிறோம்”.
— ஆண்டவர்






Comments are closed, but trackbacks and pingbacks are open.