கோலாகலமாகத் துவங்கிய புத்தகத் திருவிழா!
கோலாகலமாகத் துவங்கிய
புத்தகத் திருவிழா!
மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது நூலக இயக்கம் சார்பில் தஞ்சை அரண்மனை வளாகத்தில் 6ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா இன்று (ஜுலை 14) கோலாகலமாகத் தொடங்கியது.
இம்மாதம் 24-ஆம் தேதிவரை தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும் இப் புத்தகத் திருவிழாவை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
இப் புத்தகத் திருவிழாவில் பல்வேறு பதிப்பகங்கள் சார்பில் 110 அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள், பொழுதுபோக்கு புத்தகங்கள் உள்பட இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன.
இப் புத்தகக் கண்காட்சியில் முதல் முறையாக மாவட்ட காவல்துறை சார்பில் ‘சிறைக் கைதிகளுக்கான புத்தகங்கள் தானம் செய்யும் பெட்டி’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இப் புத்தகத் திருவிழாவில் தினமும் காலை 10.30 மணிக்கு தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த படைப்பாளிகள் பங்கேற்கும் இலக்கிய அரங்கம் நடைபெறும். மாலை 4.30 மணிக்கு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
தினமும் மாலை 6 மணிக்கு தென்னகப் பண்பாட்டு மையம் மற்றும் கலைப் பண்பாட்டுத்துறை வழங்கும் கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
மாலை 6.30 மணிக்கு தமிழகத்தின் தலைசிறந்த சொற்பொழிவாளர்கள் பங்கேற்கும் நகைச்சுவை சிந்தனை அரங்கம் நடைபெறும்.
பள்ளி, கல்லூரி மாணவர்களை ஊக்குவிப்பதற்காக நாள்தோறும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும்.
பங்கேற்பாளர்களுக்கு பரிசுக் கூப்பன் வழங்கப்பட்டு குலுக்கல் முறையில் தினமும் 3 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்படும்.
தஞ்சாவூர் புத்தகத் திருவிழாவில் பொதுமக்கள் புத்தகங்களை வாங்கி அவைகளை தங்களது நண்பர்களுக்கு பரிசாக அனுப்புவதற்கு உதவுவம் வகையில் அஞ்சல்துறை மூலம் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், அரசு தலைமை கொறடா கோவி.செழியன், சட்டமன்ற உறுப்பினர்கள் துரை.சந்திரசேகரன் (திருவையாறு), டிகேஜி நீலமேகம் (தஞ்சாவூர்) , மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன், மாவட்ட ஊராட்சித் தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, மாநகராட்சி துணை மேயர்கள் டாக்டர் அஞ்சுகம் பூபதி (தஞ்சாவூர்), தமிழழகன் (கும்பகோணம்) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.