தலைநகர் மாற்றமும் உலகத் தமிழர் மாநாடும் !
தலைநகர் மாற்றமும் உலகத் தமிழர் மாநாடும் !
தமிழக முதல்வர் எம்.ஜி.ஆருக்கு தமிழ்நாட்டின் தலைநகரை மாற்ற வேண்டும் என்ற அரிய யோசனை வந்திருந்தது. சென்னைக்கு பதிலாக மாநிலத்தின் மையத்தில் இருக்கும் திருச்சிக்கு மாற்றிவிடலாம் என்றார் எம்.ஜி.ஆர். எதிர்பார்த்தது போலவே எதிர்கட்சியினரிடையே பலமான எதிர்ப்பு.
எது தலைநகராக இருக்க வேண்டும் என்று மக்கள் கருதுகிறார்களோ? அது தலைநகராக இருக்கும். தலைநகரம் நாட்டின் மத்திய பகுதியில் இருக்க வேண்டும். அமெரிக்காவில் முதலில் தலைநகர் எங்கிருந்தது? இப்போது எங்கு மாற்றப்பட்டிருக்கிறது? எதைச் சொன்னாலும் மக்கள் கருத்தை அறிந்தே செயல்படுத்துவோம். தலைநகர் மாறினால் பல மாடிக்கட்டிடங்கள் கட்டியிருப்பவர்களுக்கு ஆத்திரம் வரும்.

தான் கட்டியுள்ள பல மாடி கட்டிடத்தின் மதிப்பு குறைந்துவிடுமே என்று கருதுவார்கள். மாற்றத்தைப் பற்றி மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். மாற்றம் வேண்டுமா? வேண்டாமா? என்பதை மக்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்தலாம் முன்பு தமிழ்நாட்டில் உச்சநீதிமன்றத்தின் பிரிவு இருக்க வேண்டும் என்றேன். அப்போது அதை கேலி பேசினார்கள். கருத்து வேறுபாடுகள் வருவதால் சொல்லும் யோசனை, திட்டம் தவறு என்று சொல்லக்கூடாது என்று அண்ணா நாளிதழில் விளக்கம் கொடுத்தார் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். அதன் பிறகு அந்த திட்டம் முடங்கிவிட்டது.
அடுத்து மதுரையில் நடக்கவிருந்த உலகத்தமிழ் மாநாட்டின் மீது எம்.ஜி.ஆரின் கவனம் குவிந்தது. செய்தித்துறை அமைச்சராக இருந்த ஆர்.எம்.வீரப்பனிடம்தான் மாநாட்டின் முழு பொறுப்பையும் எம்.ஜி.ஆர் ஒப்படைத்தார். ஆர்.எம்.வீரப்பனும் உற்சாகமாக களத்தில் இறங்கினார். ஒத்தாசைக்கு ஔவை நடராஜன், சிலம்பொலி செல்லப்பன் ஆகியோர் வந்தனர். தடபுடலாக ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. யார் யாருக்கெல்லாம் அழைப்பிதழ் அனுப்பப்பட வேண்டும் என்ற விவாதம் நடந்தது. தமிழுக்குள் அரசியல் நுழைந்தது. எதிர்க்கட்சி தலைவரான கருணாநிதிக்கு கடிதம் மூலமாக அழைப்பு வந்தது. அதில் கருணாநிதியையும், அன்பழகனையும் மாநாட்டிற்கு நியமிக்கப்பட்ட துணைத்தலைவர்கள் பட்டியலில் இணைத்திருந்தனர்.
உடனடியாக கருணாநிதியிடமிருந்து எதிர்வினை வந்து சேர்ந்தது. உலகத்தமிழ் மாநாட்டில் தி.மு.க. கலந்து கொள்ளாது. பிரதமர் இந்திராகாந்தி அந்த உலகத்தமிழ்மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என்று எம்.ஜி.ஆர் விரும்பினார். டெல்லிக்கு தகவல் சென்றது.
முதலில் ஆர்வம் காட்டாத இந்திரா, பிறகு ஒப்புக்கொண்டார். இடைவெளியை நிரப்பிவிட்ட சந்தோஷம் எம்.ஜி.ஆர் முகத்தில் தெரிந்தது. மாநாட்டில் முக்கியமானவை கலைநிகழ்ச்சிகள். நாட்டியம், பாடல், பட்டிமன்றம் பல அரங்கேற இருந்தன. அப்போது புதிய அறிவிப்பு ஒன்று திடீரென வெளியானது. ”காவேரி தந்த கலைச்செல்வி” என்ற நாட்டிய நாடகம் உலகத்தமிழ் மாநாட்டில் இடம் பெறும். அதை நடத்த இருந்தவர் ஜெயலலிதா. திரைப்படங்களில் நடிப்பது குறைந்து போன சமயத்தில் நாட்டிய நாடகத்தில் மும்முரமாக இருந்தார் ஜெயலலிதா.
அரசியலில் தொடர்பு எல்லையிலிருந்து வெகுதூரத்திற்கு சென்றுவிட்ட ஜெயலலிதாவை மீண்டும் வெளிச்சத்திற்கு அழைத்து வந்திருந்தார் ஆர்.எம்.வீரப்பன். இத்தனைக்கும் ஆர்.எம்.வீரப்பன் ஜெயலலிதா இருவருமே எதிரும் புதிரும் ஆனவர்கள். ரிக்ஷாக்காரன், உலகம் சுற்றும் வாலிபன் போன்ற திரைப்படங்களில் ஜெயலலிதா நடிக்காமல் இருக்க பல பகீரத முயற்சிகளை செய்தார் ஆர்.எம்.வீரப்பன். அந்த முயற்சிகளின் பலனாகவே ரிக்ஷாக்காரனில் நடிகை மஞ்சுளாவும், உலகம் சுற்றும் வாலிபனில் நடிகை சந்திரகலாவும் நடித்திருந்தனர்.
ஆனாலும் இப்போது ஆர்.எம்.வீரப்பன் எல்லாவற்றையும் மறந்திருந்தார். அவருக்கு அப்போதிருந்த ஒரே இலக்கு எம்.ஜி.ஆரை சந்தோஷப்படுத்துவது. அதற்காகவே ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துப் பார்த்து செய்தார். ஜெயலலிதாவை அழைத்ததின் பின்னணியும் அதுவே. அந்த உலகத்தமிழ் மாநாட்டிற்கு பிரதமர் இந்திராகாந்தி வந்தார். மக்கள் கூட்டம் ஆர்ப்பரித்தது. மைக்கைப்பிடித்த இந்திரா, உலகத்தமிழ் மாநாட்டிற்கு வந்ததில் எந்த அரசியல் பின்னணியும் கிடையாது என்று சொல்லிவிட்டு இலக்கியம் பற்றி பேசினார்.
பேசிவிட்டு நிறைந்த மனநிறைவோடும் மகிழ்ச்சியோடும் இந்திராகாந்தி புறப்பட்டார். மாநாடு பிரமாண்டமாக நடந்து முடிந்தது. எம்.ஜி.ஆருக்கு அளப்பறிய சந்தோஷம்.அதைக்காட்டிலும் ஆர்.எம்.வீரப்பனுக்கு அதிக சந்தோஷம். இந்த இருவரைக்காட்டிலும் இன்னொருவர் கூடுதல் சந்தோஷத்தில் திளைத்தார் அவர்தான் ஜெயலலிதா.
-ஹரிகிருஷ்ணன்