” இல்லீகலா பன்ற வேலை … நேக்காதான் பண்ணனும் “பகீர் கிளப்பும் குழந்தை கடத்தல் பிசினஸ் !

0

” இல்லீகலா பன்ற வேலை … நேக்காதான் பண்ணனும் “ பகீர் கிளப்பும் குழந்தை கடத்தல் பிசினஸ் !

”அண்ணே … சொல்லு கோவிந்தராஜ் … … கொஞ்சம் பார்த்து ரெடி பண்ணினா நல்லாயிருக்கும் … இதோ பாரு இப்பவும் சொல்றேன். நீ பாட்டுக்கு உன் வேலையை பாரு. இதெல்லாம் வந்து இல்லீகலா பன்ற வேலை, சரியா? நேக்காதான் பண்ணனும். நான் தான் பண்ணித்தாரேங்கிறேன். முடியாதுன்னா நான் முடியாதுன்னுட்டு போயிடுவேன், சரியா? அதனால, நா வந்து பண்ணித்தாரேன்.” – என்பதாக நீள்கிறது அந்த தொலைபேசி உரையாடல்.

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்

https://businesstrichy.com/the-royal-mahal/

அது என்ன இல்லீகலா பன்ற வேலை? ரேஷன் அரிசி கடத்தலோ, கஞ்சா கடத்தல் விவகாரமோ அல்ல ! அப்பட்டமான ‘பிள்ளை கடத்தல்’ வியாபாரம்.
”கல்யாணம் ஆகி ஒன்பது வருஷமாச்சு. எங்களுக்கு குழந்தை இல்லை. லாரி டிரைவரா வேலைக்கு போயிட்டு இருக்கேன். எங்களுக்கு தெரிஞ்சவங்க குழந்தைகளை ஏற்பாடு செஞ்சித் தாராங்க. பணம் கொடுத்தா குழந்தை ஏற்பாடு பண்ணி தருவாங்கனு சொன்னாங்க. அதன்படி எங்க ஊரைச் சேர்ந்த சுதா, சாந்தினு ரெண்டு பேரும் கோட்டப்பாளையம் பாலகுமார் கிட்ட என்ன கூட்டிட்டு போனாங்க. அங்க அவரும் அவரது மனைவியும் 2 இலட்ச ரூபாய் கொடுத்தா குழந்தை தாரேன்னு சொன்னாங்க.

சுசீலா
சுசீலா

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

அத நம்பி பத்தாயிரம், அம்பதாயிரம்னு இதுவரைக்கும் 1.50 இலட்சம் வரைக்கும் கொடுத்துட்டேன். சொன்ன மாதிரி குழந்தைய தரலை. கேட்டதுக்கு, திருவண்ணாமலையில இருந்து கொண்டு வரனும். கொஞ்சம் பொறுனு சொல்லி சொன்னாரு. இது சரிபட்டு வராது கொடுத்த பணத்தையாவது திரும்ப கொடுங்கனு கேட்டா அதையும் கொடுக்க மாட்றாரு.”னு திருச்சி போலீசு எஸ்.பி.யிடம் புகார் கொடுத்திருக்கிறார், துறையூர் தாலுகா, உப்பிலியபுரத்தையடுத்த பி.மேட்டூரைச் சேர்ந்த கோவிந்தராஜ்.

”இல்லீகலா பன்ற வேலை. நேக்காதான் பண்ணனும்”னு கோவிந்தராஜுவுடனான ஆடியோ உரையாடலை நடத்தியது வேறுயாருமல்ல, இந்த கோட்டப்பாளையம் பாலகுமாரே தான். அவரது உரையாடலிலிருந்தும், கோவிந்தராஜிவின் போலீசு புகாரிலிருந்தும் ”பிள்ளை கடத்தல்” சம்பவம் தற்போது அம்பலத்திற்கு வந்திருக்கிறது.

”உன்ன கல்யாணம் பண்ணி குழந்தையும் இல்லை. காசு கொடுத்து குழந்தை வாங்கவும் வழியில்லை”னு கோவிந்தராஜூவுடன் கோவித்துக்கொண்டு மனைவி சாரதா சென்றுவிட, தாயார் சுசீலா ஆதரவில் இருந்து வருகிறார், கோவிந்தராஜ்.

கோட்டப்பாளையம் பாலகுமார்
கோட்டப்பாளையம் பாலகுமார்

கோட்டப்பாளையம் பாலகுமார், அதே பகுதியில் ”அகில பாரதி” என்ற பெயரில் தனியார் பள்ளியை நடத்தி வந்தவர். கொரோனா ஊரடங்கு நெருக்கடி காலத்தில் தொடர்ந்து பள்ளியை நடத்த இயலாமல் இழுத்து மூடிவிட்டார். ஏற்கெனவே, பப்ளிக்கா பள்ளிக்கூட சிறுவனை தாக்கிய விவகாரத்தில் எஃப்.ஐ.ஆர். வரை ஆனதாகவும், காசு பணம் கொடுத்து சரிகட்டி மீண்டு வந்துவிட்டார் என்றும்; தற்போது குழந்தை கடத்தல் புகாரில் சிக்கியிருக்கிறார் என்றும் சொல்கிறார்கள்.

ஏற்கெனவே, சில ஆண்டுகளுக்கு முன்பாக திருச்சியை மையமாக வைத்தே குழந்தை கடத்தல் கும்பல்களின் நெட்ஒர்க் அம்பலமாகி, கைது நடவடிக்கைகளும் நடைபெற்றிருந்தன. மிகச்சமீபத்தில்கூட, குழந்தைகளை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு கோயில்களில் பிச்சை எடுத்த சம்பவம் வெளியாகி அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தற்போது, கோவிந்தராஜ் வழியே அம்பலமாகியிருக்கும் விவகாரம், “இதெல்லாம் சகஜமப்பா” என்று சொல்லுமளவுக்கு பெரிய மெனக்கெடல் ஏதுமின்றி மிக சர்வசாதாரணமாகவே நடைபெற்று வருவதாகவே தெரிகிறது.

குற்றச்சாட்டுக்கு ஆளான கோட்டப்பாளையம் பாலகுமாரின் கைப்பேசிக்கு தொடர்புகொண்டோம். அழைப்பை ஏற்று பேசிய அவரது மனைவியிடம் விசயத்தை சொன்னோம். கணவர் பாலகுமார் சென்னை சென்றிருப்பதாகவும், வந்தவுடன் பேச சொல்கிறேன் எனக்கூறி வைத்துவிட்டார்.
மாவட்ட எஸ்.பி. வருண்குமார் எஸ்.பி.யை தொடர்புகொள்ள முயற்சித்தோம். இணைப்பைத் துண்டித்தவர், இதுவரை மீண்டும் தொடர்புகொள்ளவில்லை. வாட்சப்பில் விளக்கம் கேட்டதற்கும் இதுவரை பதிலில்லை.

SP_வருண்
SP_வருண்

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

அதிரடிக்கு பெயர் போனவர் எஸ்.பி. வருண்குமார். சமீபத்தில், இதே துறையூர் பகுதியில் லோக்கல் போலீசுக்கே சொல்லாமல் சாராய ஊரலும் – பேரலும் கையுமாக கள்ளச்சாராய கும்பலை கொத்தாக தூக்கியவர். சென்சிட்டிவான, சீரியஸான இந்த விவகாரத்தையும் அவர் எளிதில் விடமாட்டார் என்றே நம்புகிறோம். பள்ளி நிர்வாகி என்ற பெயரில் பாலகுமார் எத்தனை ஆண்டுகளாக, இந்த பிசினஸில் ஈடுபட்டு வருகிறார்? இடைத்தரகர்களாக செயல்பட்ட சுதா, சாந்தியை போல இன்னும் எத்தனை இடைத்தரகர்கள் இருக்கிறார்கள்? இவர்கள் மூலம் இதுவரை எத்தனை குழந்தைகள் கைமாறியிருக்கிறது. குறிப்பாக, திருவண்ணாமலையிலிருந்து குழந்தை வர வேண்டும் என்று பாலகுமாரே சொல்லியிருக்கிறார். ஆக, அந்த நெட்வொர்க் பற்றிய விவரங்களை தோண்டினால் மட்டுமே இவ்விவகாரத்தின் ஆழம் வெளி உலகிற்கு தெரியவரும்.

மிக முக்கியமாக, போலீசு எஸ்.பி.யிடம் புகார் வரை சென்றுவிட்ட இந்த விவகாரத்தை “கைமாற்றாக – பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான பிரச்சினை” என்பதாக உள்ளூர் அளவில் முடித்துவைப்பதற்கான வேலைகளில் சில கட்சி பிரமுகர்கள் ஈடுபட்டிருப்பதாகவும் தகவல்கள் கிட்டியிருக்கின்றன. கண்டிப்பாக, மாவட்ட எஸ்.பி. இதற்கு இடம் கொடுக்க மாட்டார் என்றே எதிர்பார்க்கிறோம். அவரது அதிரடி நடவடிக்கைக்காகவே காத்திருக்கிறோம்.

போலீசு நடவடிக்கை ஒருபுறமிருக்க, குழந்தைகளை தத்தெடுப்பதில் உள்ள சட்ட சிக்கல் மற்றும் நடைமுறை சிக்கல்கள்தான் இவைபோன்ற சட்டவிரோத தத்தெடுப்பு வழிமுறைக்கு தள்ளிவிடுகிறதா? என்ற கேள்விகளோடு, குழந்தைகள் தத்தெடுப்பு தொடர்பான விவகாரங்களை கையாண்டுவரும், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் முத்துமாணிக்கம் அவர்களை அங்குசம் சார்பில் தொடர்புகொண்டோம்.

குழந்தை தத்தெடுப்பு
குழந்தை தத்தெடுப்பு

தத்தெடுப்பு முறை

”எந்தவித சிரமமும் இல்லாமல், எளிதில் குழந்தை கிடைத்துவிட வேண்டும் என்றே பெரும்பாலான தம்பதிகள் எதிர்பார்க்கிறார்கள். தத்தெடுப்பு தொடர்பான விவகாரம் என்பதால் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய சட்ட வழிமுறைகள் இருக்கத்தான் செய்கின்றன. தத்தெடுப்பு முறை குறித்த போதுமான விழிப்புணர்வு இல்லாததால், இடைத்தரகர்களின் ஆசை வார்த்தைக்கு மயங்கி இதுபோன்ற குறுக்கு வழிகளில் குழந்தைகளை பெற முயற்சிக்கிறார்கள்” என்கிறார், அவர்.

மேலும், “தத்தெடுப்புக்கென்றே பிரத்தேயகமான CARA இணையதளத்தில் போதுமான முதற்கட்ட ஆவணங்களோடு முதலில் பதிவு செய்ய வேண்டும். பின்னர், சம்பந்தபட்ட மாவட்டத்தில் இயங்கும் தத்தெடுப்பு ஏஜென்சி வழியாக ”இல்ல ஆய்வறிக்கை” சமர்பிக்கப்படும். இல்ல ஆய்வறிக்கையில், குழந்தை கோரும் தம்பதியினர் தகுதியானவர்கள்தான் என்பது உறுதிபடுத்தப்பட்டால், வரிசைகிரம அடிப்படையில் அவர்களது பெயர் பதிவு செய்யப்பட்டு விடும்.

பின்னர், அவர்களது மின்னஞ்சல் வழியாகவே பொருத்தமான குழந்தைகள் குறித்த விவரங்கள் அனுப்பி வைக்கப்படும். அவர்களுக்கு விருப்பம் இருந்தால் அக்குழந்தையை தக்க வைத்துக் கொள்ளலாம். இல்லையெனில், அடுத்து ஒரு வாய்ப்பு வழங்கப்படும். அதிகபட்சம் இரண்டு வாய்ப்புகள். அதன்பிறகு, குழந்தைகள் நலக்குழுவினர் முன்னிலையில் சட்டப்பூர்வமான வழிமுறைகளின் படி தத்துப்பெற்றோர்களிடம் குழந்தை ஒப்படைக்கப்படும். இந்த நடைமுறைகள் முழுமையாக பூர்த்தியாக குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் ஆகலாம்.” என்கிறார்.

இந்த நடைமுறையில் உள்ள சிக்கல்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த முத்துமாணிக்கம், “ஆதரவற்ற நிலையில் கைவிடப்படும் குழந்தைகள் மற்றும் பெற்றோர்களால் வளர்க்க முடியாமல் ஒப்படைக்கப்படும் குழந்தைகள் ஆகிய இரண்டு வழிமுறைகளில் மட்டுமே குழந்தைகள் வரப்பெறுகிறார்கள். முதலில் ஆதரவற்று நிலையில் கைப்பற்றப்படும் குழந்தைகள் குறித்து முறையாக பத்திரிகையில் விளம்பரம் கொடுத்து அக்குழந்தைக்கு யாரேனும் உரிமை கோரி வருகிறார்களா? என்பதை உறுதி செய்த பிறகே LEGAL FREE ADOPTION சான்றளிக்கப்படும்.

பெற்றோர்களால் ஒப்படைக்கப்படும் குழந்தைகளை பொறுத்தவரையில், அவர்கள் குழந்தையை ஒப்படைத்த நாளிலிருந்து அதிகபட்சம் 60 நாட்கள் வரையில் பொறுத்திருப்போம். அதற்குள் அக்குழந்தையின் பெற்றோர்கள் மனம்மாறி மீண்டும் குழந்தையை கேட்டு வருகிறார்களா? என பார்த்த பிறகே அக்குழந்தைக்கும் LEGAL FREE ADOPTION சான்றளிக்கப்படும். இதன்பிறகு, சுழற்சி அடிப்படையில் அதாவது திருச்சியில் கண்டெடுக்கபட்ட குழந்தை திருச்சியில் குழந்தை இல்லாத தம்பதியினருக்குத்தான் வழங்க வேண்டும் என்றில்லாமல், அண்டை மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கும் சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யப்படும்.

மிக முக்கியமாக, தம்பதியினரின் வயதின் கூட்டுத்தொகை 85-க்குள்ளாக இருந்தால் மட்டுமே 0-2 வயது வரையிலான குழந்தைகளை ஒப்படைப்பார்கள். 90-க்கும் மேல் கூட்டுத்தொகை வரும்பட்சத்தில் 2 வயதுக்கு மேலான குழந்தைகள்தான் ஒதுக்கீடு செய்யப்படும். பொதுவில் 4 வயதுக்குள்ளான குழந்தைகளை தத்தெடுப்பதையே பெரும்பாலானோர் விரும்புகிறார்கள். இதன் காரணமாகவும் அவர்கள் குறுக்கு வழியில் இடைத்தரகர்களை நாடுகிறார்கள்” என்கிறார்.

”குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண் 1098 அல்லது, திருச்சியில் இயங்கி வரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக எண் 0431 – 2413055 என்ற தொடர்பு எண்களில் குழந்தையை தத்தெடுக்க விரும்பும் பெற்றோர்கள் தொடர்புகொள்ளலாம். அவர்களுக்கு தேவையான வழிமுறைகள் மட்டுமின்றி அவசியமான கவுன்சிலிங்கும் வழங்க தயாராகவே இருக்கிறோம்” என்கிறார், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் முத்துமாணிக்கம்.

– வே.தினகரன், ஜோஸ்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.