குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா (1922 – 1989) தமிழ் குழந்தை இலக்கிய உலகின் பிதாமகர் என்று போற்றப்படுபவர். ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களையும், 55-திற்கும் மேற்பட்ட நூல்களையும் எழுதியுள்ளார். தம்முடைய எழுத்துத் திறமை அனைத்தையும் குழந்தை இலக்கியம் படைப்பதிலேயே செலவிட்டார். பல குழந்தை எழுத்தாளர்கள் உருவாகவும், வளரவும் முக்கிய காரணமாக இருந்தார். குழந்தைகளுக்கு எழுதுபவர்களை ஒன்று சேர்த்து 1950ஆம் ஆண்டு குழந்தை எழுத்தாளர் சங்கம் நிறுவினார். 16 ஆண்டுகளுக்கு மேலாக 5 சிறுவர் பத்திரிகைகளின் பொறுப்பாசிரியராக இருந்தார்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இராயவரம் என்னும் சிற்றூரில் 1922-ஆம் ஆண்டு பிறந்தார். இவருடைய பெற்றோர் அழகப்ப செட்டியார் – உமையாள் ஆச்சி. உள்ளூரில் சு.கதி. காந்தி ஆரம்பப் பாடசாலையில் ஐந்தாம் வகுப்பு வரையில் பயின்றார். பிறகு ராமச்சந்திரபுரத்திலுள்ள ஸ்ரீ பூமீஸ்வரசுவாமி உயர்நிலைப் பள்ளியில் 11வது வகுப்பு வரையில் படித்தார்.

பின்னர் பேராசிரியர்கள் கு.மதுரை முதலியார், இளவழகனார், டாக்டர் இராசமாணிக்கனார் ஆகியோரிடம் சில காலம் தமிழ் பயின்றார். அவரது 13 – ஆம் வயதில் கவிதை எழுதத் தொடங்கினார்.
1940 ஆம் ஆண்டில் ‘சக்தி’ அலுவலகத்தில் பொருளாளராகச் சேர்ந்தார்.
1941 – 1982 வரை இந்தியன் வங்கியில் பணியாற்றி காரைக்குடி வட்டார மேலாளராக ஒய்வு பெற்றார்.
இந்தியன் வங்கியின் அனுமதியோடு Ford Foundation நிறுவிய தென்மொழிப் புத்தக டிரஸ்டின் குழந்தைப் புத்தக சிறப்பு அலுவலராக 1957 – 1962 வரை பணிபுரிந்தார்.
பொறுப்பாசிரியராக இருந்த பத்திரிகைகள்
1944 – 1951 புதுக்கோட்டையிலிருந்து வெளிவந்த ‘பாலர்மலர்’, ‘டமாரம்’, ‘சங்கு’
1951 முதல் 1954 ‘பூஞ்சோலை’
1983 முதல் 1989 கல்கி நிறுவனத்தின் சிறுவர் மாத இதழான ‘கோகுலம்
தமிழ்நாட்டுப் பாடநூல்களிலும், கேரளம், கர்நாடகம், இலங்கை, தென்னாப்பிரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், மொரீஷியஸ் போன்றநாடுகளில் வெளியான நூல்களிலும் இவரது பாடல்கள் இடம் பெற்றுள்ளன.
இந்தியா, இலங்கை, சிங்கப்பூர் வானொலிகளிலும் தொலைக்காட்சிகளிலும் இவரது பாடல்களும், நாடகங்களும் இடம் பெறுகின்றன.
இவருடைய வாரிசுகளில் ஒருவரான சாகித்ய அகாடமியின் பால புரஸ்கார் விருதாளர் எழுத்தாளர் முனைவர் தேவி நாச்சியப்பன் அவர்கள் சிறார் இலக்கியத்தில் தொடர்ந்து தடம் பதித்து வருகிறார்.
— கார்த்திகா கவின்குமார், எழுத்தாளா், கதைசொல்லி







Comments are closed, but trackbacks and pingbacks are open.