இதய வால்வு மாற்று அறுவைச் சிகிச்சைக்காக பெங்களூர் நாராயணமிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கவிஞர் நந்நலாலா அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தும், நுரையீரல் தொற்றின் காரணமாக உடல் முன்னேற்றம் அடையமால் நீடித்து வந்த நிலையில் கடந்த மார்ச்சு 4ஆம் நாள் காலை உயிர் பிரிந்தது. 5ஆம் நாள் அதிகாலை நந்தலாலாவின் உடல் திருச்சி திண்டுக்கல் சாலையில் உள்ள கருமண்டபம் விஸ்வாஸ் நகரில் உள்ள அவரது ‘காணி நிலம்’ இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை திருச்சி களம் இலக்கிய அமைப்பின் கே.துளசிதாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர். காலை முதல் பொதுமக்கள், பல்வேறு அரசியல் இயக்கம் சார்ந்தோர் அஞ்சலி செலுத்திய வண்ணம் இருந்தனர்.
தோழர் நந்தலாலா – புகழஞ்சலி இறுதி பயணம் !
நந்தலாலா தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்க மாநிலத் துணைத்தவைர் பொறுப்பில் இருந்து வந்தார். இதனால் தமிழ்நாடு முழுவதும் உள்ள தமுஎசக பொறுப்பாளர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்., பாரதிதாசன் பல்கலைக்கழகப் பெரியார் விருதாளர்கள் திருச்சி தி.அன்பழகன், பேராசிரியர் தி.நெடுஞ்செழியன், பேராசிரியர் கி.சதீஷ்குமாரான் ஆகியோர் நந்தலாலாவின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். புதுக்கோட்டையைச் சார்ந்த முத்துநிலவன், கவிஞர் தங்கம் மூர்த்தி, செங்கற்பட்டு மாவட்ட பொறுப்பாளர் பேராசிரியர் சு.மாதவன் மற்றும் பொறுப்பாளர்களும் அஞ்சலி செலுத்தினர். திருச்சி பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் தலைவர் செந்தமிழ்செல்வன், செயலாளர் சார்லஸ் உள்ளிட்டநிர்வாகிகள், அங்குசம் ஜெடிஆர் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.

அமெரிக்காவிலிருந்து நந்தலாலாவின் பெரியமகள் பாரதி 5ஆம் தேதி வந்து தந்தைக்கு அஞ்சலி செலுத்தினார். இரவு 7 மணியளவில் தமிழ்நாடு அரசின் சார்பில் மாண்புமிகு துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் மாலை வளையம் வைத்து மரியாதை செய்தார். அப்போது அமைச்சர் கே.என்.நேரு, அமைச்சர் வீ.மெய்யநாதன் ஆகியோர் உடனிருந்தனர். தொடர்ந்து காலையில் எம்.பிகள் அ.ராசா, திருச்சி சிவா, அருண்நேரு, திருச்சி மேயர் அன்பழகனும் நந்தலாலாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இலக்கிய வானில் நிலவாய் நந்தலாலா – காணொளி தொகுப்பு :
6ஆம் தேதி காலை 10 மணியளவில் நந்தலாலா இல்லத்தில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இரங்கல் கூட்டத்தை தமுஎசக மாநில தலைவர் ஆதவன் தீட்சண்யா ஒருங்கிணைத்தார். இரங்கல் கூட்டத்தில் பேராசிரியர் அருணன், திருச்சி ஸ்ரீதர், தமிழ்ச்செல்வன், எழுத்தாளர் சுதீர் உள்ளிட்ட பலர் மறைந்த நந்தலாலாவின் சமூக செயல்பாடுகளை எடுத்துக்காட்டி புகழ் அஞ்சலி செலுத்தினர். 11.30 மணிக்கு நந்தலாலாவின் உடல் காவிரி கரையில் ஓயாமாரி நவீன மின் தகன மேடைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பாடகர் லதா அவர்கள்,“வீரவணக்கம்… செவ்வணக்கம்…. தோழர் நந்தலாலாவிற்கு வீரவணக்கம்…. செவ்வணக்கம்…” என்று எழுப்பிய முழக்கத்தோடு இறுதி ஊர்வலம் புறப்பட்டது.
இறுதி ஊர்வலம் சென்னை புறவழிச்சாலை வழியாகச் சென்றது. நூற்றுக்கணக்கான தோழர்கள் வாகனங்களில் பின்தொடர பகல் 12.00 மணிக்கு ஓயாமாரி மின்தகன மேடையை அடைந்தது. நந்தலாலாவின் உடலுக்கு அங்கேயும் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. நந்தலாலாவின் மகள்கள் பாரதி மற்றும் நிவேதிதா இருவரும் தந்தையின் உடலை வணங்கி வீரவணக்கம் செலுத்தினர். மதச் சடங்ககுள் எதுவும் நந்தலாலா உடலுக்குச் செய்யப்படவில்லை. தந்தை பெரியாரின் சுயமரியாதை சிந்தனையோடு அவருக்கு இறுதி மரியாதை மட்டும் செலுத்தப்பட்டது.

பகல் 12.15 மணிக்கு கூடியிருந்த தோழர்கள் “வீரவணக்கம்…. வீரவணக்கம்…. கவிஞர் நந்தலாலாவிற்கு வீரவணக்கம்” என்று முழக்கம் எழுப்பி கொண்டிருந்தனர். நந்தலாலாவின் உடல் எரிவாயு தகன மேடைக்கு உள்ளே வைக்கப்பட்டது. நந்தலாலாவின் உடல் காற்றில் கலந்துகொண்டிருந்தது. நந்தலாலா மண்ணைவிட்டு பிரிந்து காற்றில் கரைந்து வானத்தில் கலந்துகொண்டிருந்தார்.
நல்லதொரு சமூக செயல்பாட்டாளரைத் திருச்சி இழந்துவிட்டது என்ற மனஉணர்வோடு நந்தலாலாவிற்கு விடை கொடுக்க…. அவர் நம்மிடருந்து நிந்தரமாக விடைபெற்றுவிட்டார் என்றாலும் செயல்களால் நம் நெஞ்சங்களில் என்றும் வாழ்ந்துகொண்டுதான் இருப்பார். நந்தலாவின் புகழ் ஓங்க அவர் விட்டு சென்ற பணிகளைத் தொடர்வது ஒன்றே நம் அவருக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும் என்ற உணர்வே மேலிட்டது.
மணியம்மையை பற்றி பேசியவனை பெரியார் என்ன செய்தார்? கவிஞர் நந்தலாலா
பெரியார் பெயரை சொன்னாலே கைத்தட்டல் வரும் ! கவிஞர் நந்தலாலா
தமுஎசக மாநிலப் பொறுப்பாளர் பெரியாரியச் சிந்தனையாளர் பேராசிரியர் சுந்தரவள்ளி அவர்கள் மறைந்த நந்தலாலாவிற்கு அஞ்சலி செலுத்த சென்னையிலிருந்து புறப்பட்டு நந்தலாலா இல்லம் சென்றபோது, உடல் ஓயாமாரிக்கு எடுத்துச் செல்லப்பட்டது என்பதை அறிந்து, ஓயாமாரிக்கு பேராசிரியர் சுந்தரவள்ளி வந்தபோது, நந்தலாலாவின் உடல் தனக மேடைக்குள் வைக்கப்பட்டுவிட்டது. “தோழரின் உடலைப் பார்க்கமுடியவில்லையே” என்று அவர் கண்ணீர் விட்டு கதறி அழுதது கூடியிருந்தவர்களின் கண்களையும் மனங்களையும் கலங்கச் செய்வதாக இருந்தது.
– தொகுப்பு ஆதவன்
நந்தலாலா மறைவையொட்டி அங்குசம் இணையத்தில் பதிவான செய்திகள் :
* ஓய்வறியாது உழைத்த திருச்சியின் முகமாகத் திகழ்ந்த நந்தலாலா !
* நாவுக்கரசர் நந்தலாலா நாடித்துடிப்பை நிறுத்திக் கொண்டார்.
* தலைவர் கலைஞர் குடும்பத்தின் உறவினர் நந்தலாலா என்பது பலர் அறியாத ஒன்று…
* மானுடராய் வாழ்ந்து மறைந்த பேச்சுக்கலைஞன் நந்தலாலா !
* இலக்கிய வானில் தூரத்து நிலவாய் நந்தலாலா ! கவிஞர் நந்தலாலா புகழஞ்சலி
 
			 
											
நன்றி
இதழோரம் சிறிய புன்னகை-நகைச்சுவை கலந்த பேச்சு-முற்போக்கு பார்வை-பலகாலம் நினைவு கூறப்படுவார்-
த.மோகன்