தமிழகத்தின் தனித்துவமும் இருமொழிக்கொள்கையின் வெற்றியும் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

Christophe Jaffrelo சொல்லும் கருத்துக்களில் முக்கியமான  ஒன்று, ஒரு மாநிலத்தில் குவிக்கப்படும் முதலீடு பரவலான மக்களைச் சென்றடையாவிட்டால் அந்த முதலீட்டால் பயனில்லை என்பது. இங்குதான் குஜராத்தை ஒப்பிட்டு தமிழ்நாடு மற்ற மாநிலங்களை விட முன்னணியில் இருக்கிறது என்கிறார்.

ஒரு மாநிலமாக முதலீட்டை ஈர்த்திருப்பதில் குஜராத் முன்னணியில் இருக்கிறது. ஆனால் கல்வி, சுகாதாரம், வறுமை போன்ற குறியீடுகளில் பீகாருக்கு இணையாகப் பின்தங்கியிருக்கிறது.

இனிய ரமலான் வாழ்த்துகள்

இந்த முரண் ஏன் நிகழ்கிறது என்று பார்ப்போம்.

மோடியின் ஆட்சிக்காலத்தில் மிகப்பெரிய திட்டங்கள் குஜராத்துக்கு வந்தன. எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள், துறைமுகங்கள் போன்றவை. இதைப் போன்ற மெகா திட்டங்களில் முதலீட்டுத் தொகை பல்லாயிரம் கோடிகள் இருக்கும். வருமானம் அதற்கு ஏற்றாற்போல் போல் இருக்கும். ஆனால் அதில் வருகிற பணம் அடித்தள மக்களின் கைகளில் புழங்காது. ஒரு மாநிலம் பணத்தைப் பெருக்கும். ஆனால் ஒரு சிறு மக்கள் திரளிடம் மட்டுமே அப்பணம் புழங்கிக்கொண்டிருக்கும். நலத்திட்டங்களின் வழியாக அரசு சமநிலையை உருவாக்க வேண்டியிருக்கும்.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

மகாராஷ்டிரா, பஞ்சாப், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் இது வேறுமாதிரி நடந்தது. ஆந்திரா, கர்நாடகா, கேரளாவைக் கூட நான் இந்த விஷயத்தில் ஒரு உதாரணமாக எடுத்துக்கொள்ள மாட்டேன்.

நமது மாநிலம் என்பதால் தமிழ்நாட்டை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டு இதைப் பற்றி  இங்கு விரிவாக விவாதிப்போம்.

Tunnel Boring Machine
Tunnel Boring Machine

நீங்கள் ஒரு சிக்கலான கனரக எந்திரத்தை இறக்குமதி செய்து, உதாரணத்துக்கு Tunnel Boring Machine ஆகக் கூட இருக்கலாம் (அதைப் பற்றி முந்தைய ஒரு பதிவில் பார்த்திருக்கிறோம் என்பதால் இவ்வுதாரணம்). அதை அக்கு அக்காகப் பிரித்து எடுத்து அதே மாதிரி ஒரு எந்திரத்தை நமது அம்பத்தூரில் செய்துவிட முடியும். சீனர்கள் ஜப்பானின் பல எந்திரங்களை அப்படித்தான் பிரித்து எடுத்துக் காப்பியடித்து உள்ளூரில் பல எந்திரங்களை உருவாக்கினார்கள். அதில் ஒன்றும் பெரிய தவறில்லை. அந்த எந்திரத்தைப் பாகம் பாகமாக பிரித்து, அந்த பாகங்களுக்கு வரைபடம் உருவாக்கி, என்னென்ன உலோகங்கள் இதற்குப் பயன்பட்டிருக்கின்றன என்று ஆராய்ந்து, அதே போன்ற உலோகங்களைப் பயன்படுத்தி, அந்தத் தொழில் நுட்பத்துக்கு இணையான வார்ப்புகள், இழைப்புகள் ஆகியவற்றைச் செய்து எந்திரத்தை உருவாக்கும் முறை அது.

சில குறிப்பிட்ட எந்திரங்களை SPM என்று குறிப்பிடுவார்கள். ஸ்பெஷல் பர்பஸ் மெஷின். உதாரணத்துக்கு சாக்லெட்டை பொட்டலம் கட்டும் மெஷினை எடுத்துக்கொள்வோம். நான் இந்த மாதிரி ஒரு பிராஜெக்டில் வேலை செய்திருக்கிறேன். ஒரு மெஷினை உருவாக்கினோம். ஒரு வினாடிக்கு இரண்டாயிரம் சாக்லேட்டுகளுக்கு அது பாலீதீன் பேப்பரைச் சுற்றும். சாக்லேட் பார் ஒரு துளை வழியாக வரும், பாலிதீன் பேப்பர் ஒரு துளை வழியாக வரும், சரியான எடையில் சாக்லேட் பார் கட் ஆகும், பேப்பர் அதைச் சுற்றி முறுக்கும், அதை இன்னொரு கத்தி போன்ற அமைப்பு கட் பண்ணும். பிறகு ஒரு சாக்லேட் துண்டாகி அந்தக் கூடையில் விழும்.

கற்பனை செய்து பாருங்கள். ஒரு வினாடியில் 1000 சாக்லேட்டுகள். ஆனால் சாக்லேட்டைக் கட் பண்ணுவது அல்ல, பாலீதீன் பேப்பரைக் கட் பண்ணுவதுதான் நுட்பம். அது எளிதல்ல. Metallurgy, alloy metals என்று பெரிய ஏரியா அது.  அம்பத்துர் எஸ்டேட்டில் சிறிய லேத் பட்டறை வைத்திருக்கும் ஒரு தொழிலாளி எங்களைப்போன்ற எஞ்சினியர்கள் சொல்லும் துல்லியத்தை ஒரு உதிரி பாகத்தில் கொண்டு வருவார்கள்.

இந்த மெஷினை நீங்கள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்தால் ஐந்து கோடி ரூபாய் ஆகும். ஆனால் ஒரு கோடி ரூபாயில் நீங்கள் உள்ளூரில் உருவாக்க முடியும். ஆனால் அதற்கும் பொறியாளர்கள் வேண்டும். நுட்பமானத் தொழிலாளர்கள் வேண்டும். இதுதான் உள்ளூர் கட்டமைப்பு. தமிழ்நாடு இதில் எந்த மாநிலமும் மிஞ்ச முடியாத அளவுக்கு உச்சகட்ட சாத்தியம் கொண்ட மாநிலம்.

சாக்லேட் மெஷின்
சாக்லேட் மெஷின்

இந்த சாக்லேட் மெஷினை நான் ஒரு உதாரணமாகத்தான் சொன்னேன்.  இதைப் போன்ற பல எந்திரங்கள் இருக்கின்றன. நாமே கண்டுபிடித்து பேடண்ட் வைத்திருக்கிற எந்திரங்கள், பேடண்ட் வாங்கி உற்பத்தி செய்யும் எந்திரங்கள் என்று நிறைய உண்டு. இதைப்போன்ற சிறு அத்துமீறல்கள் வழியாகவே சிறு நிறுவனங்கள் நிலைக்கின்றன. பணமும் தொழில்நுட்பமும் கடைக்கோடியை சென்றடைகிறது. பெரிய கார்ப்பரேட்டுகளுக்கு எதிரான ஒரு மாற்று இண்டஸ்ட்ரி உருவாகிறது. (இது தனி ஏரியா. சீனாதான் இதில் நம்பர் ஒன்).

திருச்சி BHEL ல் பாய்லர்கள் தயாரிக்கிறார்கள். அதன் உதிரி பாகங்களை உற்பத்தி செய்ய நிறைய துணை ஒப்பந்தங்கள் தருவார்கள். அவற்றைச் செய்து தர ஆயிரக்கணக்கான குட்டி குட்டி கம்பெனிகள் திருச்சியில் உண்டு.

கோயம்புத்தூர் இன்னொரு உதாரணம். மோட்டார், பம்ப், casting, forging போன்றவற்றை உற்பத்தி செய்வதில் எந்த ஒரு ஐரோப்பிய நகரத்துக்கும்  இணையான தொழில் நுட்ப வலு கொண்ட நகரம் கோவை. அங்கும் இதே போல ஆயிரக்கணக்கான துணை நிறுவனங்கள், தொழிற்கூடங்கள் உண்டு.

உங்கள் விளம்பரம் இலட்சக்கணக்கான வாசகர்களை சென்றடைய....

ஓசூர் இன்னொரு நகரம். வாகன உற்பத்தியின் கேந்திரம். மதுரை என்றால் அழகர் ஆற்றில் இறங்குவதுதான் நிறைய பேருக்குத் தெரியும். ஆனால் ‘Ball Guided Press tools’ போன்ற நுட்பமான கருவிகளின் தயாரிப்பு மற்றும் பயன்பாட்டில்  அட்டகாசமான தொழில் நுட்ப ஆட்கள் கொண்ட  ஊர் அது. அங்கு கொஞ்ச நாள் வேலை செய்தபோது, அதைக் கண்ட எனக்கு ஆச்சர்யமாகவும் மலைப்பாகவும் இருந்தது. நான் சென்னையையும் கோவையையும் தான் அந்தக் கணக்கில் வைத்திருந்தேன். கும்பகோணம் கூட அப்படியான ஒரு ஊர். பித்தளை மற்றும் சில்வர் பாத்திரங்களில் அவர்கள் மாஸ்டர்கள். ஆனால் குறு உற்பத்தியாளர்கள்.

தமிழகத்தின் எல்லா சிறு நகரங்களிலும் இத்தகைய சிறிய சிறிய தொழிற்பேட்டைகள் உண்டு. உதிரியான தொழிற்கூடங்கள் உண்டு .  காங்கிரஸ், அதிமுக, திமுக  மூன்று கட்சிகளுக்கும் இதன் உருவாக்கத்தில் பங்கிருக்கிறது. திமுகவுக்குக் கொஞ்சம் கூடுதல் பங்குண்டு.

இப்போது நாம் பிரதான விவாதத்துக்குத் திரும்புவோம்.

BHEL க்கு ஐந்து பாய்லர்கள் செய்வதற்கான ஒப்பந்தங்கள் கிடைக்கிறது என்று வையுங்கள். அதைச்  சார்ந்து இயங்குகிற ஆயிரக்கணக்கான உதிரி பாக உற்பத்தி நிறுவனங்களுக்கு வேலை கிடைக்கும் . அந்த நிறுவனங்களில் பணியாற்றுகின்ற பத்தாயிரம் தொழிலாளர்கள் இதில் உழைப்பார்கள். அவர்கள் கைக்கு காசு போகும். அவர்கள் பெரும்பாலும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் வகைமைக்குள் வருவார்கள். பின்னலாடை நிறுவனங்கள் இந்த வகையில் மற்றொரு  உதாரணம் .

இரண்டு சக்கர, நான்கு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்கள் இங்கு வந்தபோது இப்படித்தான் நிறைய துணை நிறுவனங்கள் உருவாயின. மதுரை, நாகர்கோவில், தூத்துக்குடி போன்ற ஊர்களில் கூட இத்தகைய சிறிய சிறிய தொழிற்கூடங்கள் உதிரி பாகங்கள் தயாரித்து பெரிய நிறுவனங்களுக்கு வழங்கின.

ஆக, ஒரு பெரிய நிறுவனம் வந்து இங்கு தனது உற்பத்தியைத் தொடங்கத் திட்டமிடுகிறது என்றால், இத்தகையத் சிறு நிறுவனங்களைக் கணக்கில் கொண்டுதான் வருகிறது. சிறு நிறுவனம் என்றால் ஒரு திண்ணையில் சாக்கு மறைவில் லேத்து மெஷினை வைத்துக் இரும்பைக் கடைபவனும் சேர்ந்துதான். அப்படியானால் இந்தத் தொழிலாளர் திறனையும் அடிப்படையாகக் கொண்டுதான் நிறுவனங்கள் வருகின்றன.

இந்தத் தொழிலாளர் திறன் எங்ஙனம் சாத்தியப்பட்டது.

முதலில் கல்வி. பள்ளிக் கல்வியை குழந்தைகளுக்குத் தரவேண்டும் என்பதைத் தமிழக ஆட்சியாளர்கள் முதல் இலக்காகக் கொண்டார்கள். அடுத்த கட்டம் தொழிற்கல்வி. சில அடிப்படைகளை சொல்லித்தர வேண்டும் என்பதை நிபந்தனையாக்கினார்கள். கல்வியின் மீது ரொமாண்டிஸத்தை ஏற்படுத்தினார்கள். அது ஒரு சமூகத்தையே கல்வியின் மீது ஆர்வம் கொள்ள வைத்தது.

கல்வியின் வழியாக ஒரு குறைந்த பட்ச வசதியை அடைய முடியும் என்பதை நம் மக்கள் கண்கூடாகக் கண்டார்கள். கல்விக்கு ஏற்பு வந்தது. நிறைய பேர் இதற்குள் வந்தார்கள். ITI, DIPLOMA போன்றவைகள் பெருகின. சமூக ரீதியாவும் பொருளியல் ரீதியாகவும் ஒருவித ஒருங்கிணைப்பு ஏற்பட்டது. இதற்கு இணையாக கல்வி, மருத்துவம், பெண்கள் முன்னேற்றம், பாலியல் சமத்துவம், சுய மரியாதை, பொருளாதார முன்னேற்றம் போன்ற சொல்லாடல்கள் அரசியல் தளத்தில் உரையாடலாக முன்வைக்கப்பட்டன, விவாதிக்கப்பட்டன. இவை ஒன்றின் மீது ஒன்று நேரடியாக ஆதிக்கம் செலுத்தின.

இத்தகைய துணை அலகுகளால் பணம் எல்லாத் தளத்திலும் புழங்குவது சாத்தியப்பட்டது. இப்படி ஒன்று குஜராத்தில் நடக்கவில்லை. ஆயிரம் கோடியைக் கொண்டு வந்து கொட்டி நீங்கள் துறைமுகம் திறக்கலாம். ஆயிரம் பேருக்கு வேலை கொடுக்கலாம். ஆனால் ஒரு கார் கம்பெனியோ, பாய்லர் கம்பெனியோ கொண்டு வந்தால் அதற்கான துணை நிறுவனங்களின் கட்டமைப்பு வேண்டும். அதை சாத்தியப்படுத்துகிற சமூகக் கட்டமைப்பு வேண்டும். அது குஜராத்தில் இல்லை, பீகாரில் இல்லை, உத்தர பிரதேசத்தில் இல்லை. அப்படியானால் அங்கு இதைப் போன்ற நிறுவனங்களே இல்லையா என்று கேட்கலாம். இருக்கின்றன. வெகு சொற்பம். அந்த மக்கள் தொகையை ஒப்பிட ரொம்பவும் குறைவு.

இதற்கு அடுத்ததாக நம் சூழலில் ஒரு தலைமுறை வளர்ந்து, ஓரளவு பொருளாதார தற்சார்பை எட்டியபிறகு, மேல் படிப்பு என்பது உறுதியானது. பெரும்பாலும் அரசு வேலையில் இருந்தவர்கள், ஓரளவு பரம்பரை சொத்து கொண்டவர்கள், (கருணாநிதி அரசிலும் அதற்குப் பிறகும் ஆசிரியர்கள் ) தங்கள் குழந்தைகளை மேற்படிப்பு படிக்க வைத்தார்கள்.

இதுதான் service industry க்கான வாசலைத் திறந்துவிட்டது. IT, MEDICAL, ENGINEERING போன்ற படிப்புகளைத் தேர்ந்தெடுத்து தங்கள் குழந்தைகள் மீது முதலீடு செய்யும் அளவுக்கு மத்திய தர வர்க்கம் விரிவடைந்தது. புதிய பொருளாதாரக் கொள்கையின் வாய்ப்புகளை அது உடனே பயன்படுத்திக்கொண்டது. அதற்கான அடித்தளம் அடிப்படைக் கல்வியை ஊக்குவித்த அரசின் தொலை நோக்குப் பார்வையில் இருந்தது. (மத்தியதர வர்க்கத்தின் அற்பத்தனமும் இதற்கு இணையாக விரிவடைந்தது – அதை இன்னொரு சந்தர்ப்பத்தில் காண்போம்)

குஜராத்தில் இதுவும் நடக்கவில்லை. குஜராத்தில் IT இண்டஸ்ட்ரி ஏன் இல்லை என்று Christophe Jaffrelo கேட்கிறார் அல்லவா? அதற்கு இதுவும் ஒரு காரணம்.

இங்குதான் தமிழகத்தின் இருமொழிக்கொள்கையின் வெற்றி இருக்கிறது. ஆங்கில மொழி, தொழில்நுட்பம் மற்றும் மருத்துவத் துறையில் பெரும் சாளரத்தைத் திறந்துவிட்டது. கிராமப் பின்புலத்தில் இருந்து வந்தவர்கள் கூட புதிய வாய்ப்புகளைப் பெற்றார்கள். ஏற்கனவே அறிமுகமாகியிருந்த தொழில் நுட்ப வாய்ப்பின் வழியாக ஓரளவு சொகுசை அடைந்திருந்த மத்திய தர வர்க்கம் வெளிநாடுகளுக்கு குழந்தைகளை அனுப்பும் ஆர்வம் கொண்டது.

இங்கு ஏற்கனவே establish ஆகியிருந்த பொதுத் துறை நிறுவனங்களில் வேலை செய்தவர்களின் குழந்தைகள் அரசு வேலைகளில் இருந்தவர்களின் குழந்தைகளுக்கு நிகரான வாய்ப்பைப் பெற்றார்கள். அங்கு வேலை செய்த டெக்னீஷியன்கள் கூட தங்கள் குழந்தைகளை மேற்படிப்பு படிக்க வைத்தார்கள். இதன் மூலம் ஒருவித கூட்டு சமூக உந்துதல் ஏற்பட்டது. கனவும், சுதந்திரமும் ஒன்றுக்கொன்று உதவிக்கொண்டன. இது எல்லாம் கலந்ததுதான் தமிழ்ச் சமூகமும் அரசியலும்.

இந்தப் பின்புலத்தில் வைத்துப் புரிந்துகொண்டால்தான் ஒரு சமூகமாக நமது சாதனைகள் மீது பெருமிதம் வரும். போதாமைகள் மீது அக்கறை வரும்!

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

Leave A Reply

Your email address will not be published.