திருச்சியில் இவர்களிடம் தீபாவளி பண்ட் ஏலச்சீட்டு கட்டி ஏமாந்தவர்களா நீங்கள் ? புகார் கொடுக்க மீண்டும் ஒரு வாய்ப்பு !
திருச்சியில் தீபாவளி பண்ட் மற்றும் ஏலச்சீட்டு நடத்தி பலரை ஏமாற்றியதாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து, திருச்சி ரெங்கா நகரை சேர்ந்த மீனா பார்வதி மற்றும் அவரது மகள் விசாலாட்சி ஆகியோருக்கு எதிராக திருச்சி கே.கே.நகரை சேர்ந்த டெய்லி லில்லி என்பவர் அளித்த புகாரின் பேரில், திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு (குற்ற எண்.11/2024) விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த விவகாரம் குறித்து பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார் தெரிவிக்கையில், “மீனா பார்வதி மற்றும் அவருடைய மகள் விசாலாட்சி ஆகிய இருவரும் சேர்ந்து கடந்த 10 வருடங்களாக தீபாவளி பண்டு, ஸ்கூல் பண்டு மற்றும் ரூ. 50,000/- 1,00,000/- 2,00,000/- 5,00,000/- ஏலச்சீட்டுகளை நடத்தி வந்திருக்கிறார்கள். மாதா மாதாம் ரூ.10,000/- கட்டினால் ஒரு வருடம் கழித்து ரூ.1,20,000/-த்துடன் சேர்ந்து முதிர்வு தொகையாக ரூ.1.50,000/- தருவதாகவும், Fixed Deposit-60 சேர்ந்தால் ரூ.1,00,000/- கட்டினால் 12மாதங்கள் கழித்து முதிர்வுதொகையாக ரூ.1,40,000/- தருவதாகவும் மேற்படி திட்டங்களில் சேர்ந்து முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தைகளை அள்ளி விட்டிருக்கிறார்கள்.

இவர்களின் பேச்சை நம்பி பலரும் பல்வேறு திட்டங்களில் சேர்ந்திருக்கிறார்கள். இந்த வழக்கின் புகார்தாராரான டெய்லி லில்லி மட்டும் சுமார் ரூ. 9,40,000/- வரை கட்டியிருக்கிறார். தான் கட்டிய பணத்தை மீனாபார்வதியிடம் கேட்டபோது தீபாவளிக்கு மறுநாள் தருவதாக கூறியதாகவும் அதன் பிறகும் பணத்தை திருப்பி தராமல் இருந்து வந்ததாலும் தன்னை போல் பலரிடமும் ஏலச்சீட்டு மற்றும் தீபாவளிபண்ட், Fixed Deposit-லும் அதிக லாபம் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றிய மீனாபார்வதி மற்றும் அவரது மகள் விசாலாட்சி ஆகிய இருவர் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்ததையடுத்தே, வழக்கு பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இதுவரையில் பத்துக்கும் அதிகமானோர்களிடமிருந்து புகார் வந்திருப்பதாகவும்; மோசடியின் மதிப்பு சுமார் 50 முதல் 60 இலட்சம் வரையில் இருக்கும் என்பதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கிறார்கள். புகார் பதியப்பட்டதிலிருந்து, மேற்படி இருவரும் தலைமறைவாகவே இருந்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இந்நிலையில், இந்த வழக்கில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்யும் பொருட்டு, மேற்படி நபர்கள் மீனா பார்வதி மற்றும் அவரது மகள் விசாலாட்சியிடம் பணம் கட்டி ஏமாந்தவர்கள் யாரேனும் இருந்தால், திருச்சி மன்னார்புரம் எண்.10 அப்துல்சலாம் தெருவில் முதல் தளத்தில் இயங்கி வரும் திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சுகந்தியிடம் புகார் தெரிவிக்கலாம் என்பதாக போலீசார் தெரிவித்திருக்கிறார்கள்.
– அங்குசம் செய்திப்பிரிவு.