ஈ.டி.யின் அடுத்த இடி ரோமியோ பிக்சர்ஸ்!
2025 மே.01—15 தேதியிட்ட நமது அங்குசம் இதழில் ’டப்பா டான்ஸ் ஆடும் டான் பிக்சர்ஸ்’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். ஒரே நேரத்தில் நான்கு படங்கள் தயாரிப்பு, 400 கோடிக்கும் மேல் பட்ஜெட், இதன் பின்னணியில் ரெட்ஜெயண்ட் என்பதையும் தெளிவாக எழுதியிருந்தோம். நமது இதழ் வெளியான மறுவாரமே ஆகாஷ் பாஸ்கரனின் டான் பிக்சர்ஸ் அலுவலகம், அவரது வீடு உட்பட பல இடங்களில் அதிரடி ரெய்டில் இறங்கியது ஈ.டி[ அமலாக்கத்துறை ].

சோதனையில் பல கோடி பணபரிமாற்ற ஆவணம் சிக்கியது, ரொக்கம் சிக்கியது’ என வழக்கம் போல செய்திகளைப் பரப்பியது ஈ.டி.. ஆனால் இதற்கெல்லாம் ஆகாஷ் பாஸ்கரன் அசந்தமாதிரி தெரியவில்லை. ”இதெல்லாம் எங்களுக்குத் தெரியாமலாய்யா நாங்க இந்த ஃபீல்டிக்குள்ள வந்துருக்கோம். என்ன முக்குமுக்கினாலும் எங்ககிட்ட ஒண்ணும் நடக்காது” என அசால்டாக லெஃப்ட் ஹேண்டில் டீல் பண்ணுகிறாராம் ஆகாஷ் பாஸ்கரன். ஈடி.யின் இரண்டு நாள் கூத்தும் அத்தோடு முடிந்தது.
அடுத்த அக்கப்போரை யாரிடம் ஆரம்பிக்கலாம், துணைமுதல்வர் உதயநிதிக்கு உதறல் எடுத்துக்கிட்டே இருக்கணுமே என மண்டை காய்ந்த ஈ.டி.காரர்களின் மூளைக்குள் ‘ரோமியோ பிக்சர்ஸ்’ ஓனர் ராகுலின் சினிமா பிஸ்னஸ் ரெக்கார்ட் பளிச்சுனு பத்திக்கிருச்சு.

அமைச்சர் அன்பில் மகேஸின் கல்லூரிக் காலத்து நண்பர்களில் இந்த ராகுல் மிகவும் நெருக்கமானவராம். கடந்த ஐந்தாண்டுகளில் சினிமா உலகில் இவரின் பணப்புழக்கம், பலரின் மனப்புழுக்கத்தை அதிகரித்துள்ளது. விஜய்யின் ‘கோட்’, அஜீத்தின் ‘வலிமை’, ‘துணிவு’, லேட்டஸ்டாக ரிலீசான ‘விடாமுயற்சி’ என மெகா பட்ஜெட் படங்களின் தமிழ்நாடு & கர்நாடக வினியோக உரிமையை வாங்கினார்.

வரும் ஜூன் மாதம் ரிலீசாகப் போகும் தனுஷின் ‘குபேரா’, ஏ.ஆர்.ரகுமானின் லேபிளில் ‘பிஹைண்ட் வுட்ஸ்’ யூடியூப் சேனலின் பணத்தின் தயாராகியுள்ள, பிரபுதேவா நடிக்கும் ‘மூன்வாக்’, ஆகஸ்ட் மாதம் ரிலீசாகப் போகும் ரஜினி & சன்பிக்சர்ஸ் காம்போவின் ‘கூலி’ [ தமிழ்நாட்டின் சில ஏரியாக்கள் மட்டும் ], செப்டம்பரில் ரிலீசாகும் கார்த்தியின் ‘வா வாத்தியார்’, அக்டோபரில் ரீலிசாகும் சூர்யா படம், 2026 பொங்கலுக்கு ரிலீசாகப் போகும் விஜய்யின் கடைசிப்படமான ‘ஜனநாயகன்’ என பெரிய ஸ்டார்களின் படங்களின் வினியோக உரிமைக்காக பல நூறு கோடிகளை கோலிவுட்டில் இறக்கியுள்ளாராம் ராகுல்.
அப்படின்னா ‘ஈ.டி.’யின் அடுத்த இடி ’ரோமியோ பிக்சர்ஸ்’ ராகுலின் தலையில் தான் என்பது கன்ஃபார்ம்.
— மதுரை மாறன்.