பாசிசமா அல்லது சனநாயகமா? – இந்தத் தேர்தலில் நமது வாக்கு யாருக்கு?
பெரியாரிய இயக்க சிந்தனையில் வளர்ந்த, மேநிலை வகுப்பை நிறைவு செய்து கல்லூரியில் காலெடுத்து வைக்க காத்திருக்கும், முதல் முறையாக ஓட்டுப்போடப் போகும் மாணவி ஒருவரின் பார்வையில் எழுதப்பட்ட கட்டுரை இது.
தேர்தல் நெருங்கும் வேளையில், “யாருக்கு வாக்களிக்க வேண்டும்?” என்ற கேள்வி நம் எல்லோருடைய மனதிலும் இருக்கிறது. வெறும் உணர்ச்சிவசப்பட்டு வாக்களிக்காமல், ஒரு தெளிவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய தருணம் இது. என்னுடைய பார்வையில், இந்தத் தேர்தலில் நாம் எப்படிச் சிந்திக்க வேண்டும் என்பதை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
நாம் ஏன் சிலரை நிராகரிக்க வேண்டும்?
முதலில், நாம் எத்தகைய அரசியலைத் தவிர்க்க வேண்டும் என்பதில் தெளிவாக இருப்போம். அறிவியல் மனப்பான்மைக்கும், மதச்சார்பின்மைக்கும் (Secularism) எவர் எதிராக இருக்கிறார்களோ, அவர்களை நாம் தயக்கமின்றிப் புறக்கணிக்க வேண்டும். மதம் என்பது தனிமனித விருப்பம், அதை அரசியலில் கலந்து நாட்டைப் பின்னோக்கி இழுக்கும் எந்தச் சமூகமும் உருப்பட்டதாகச் வரலாறு இல்லை.
பாஜக (BJP): இவர்கள் முன்னெடுக்கும் அரசியல் என்பது இந்து அடிப்படைவாதத்தைச் சார்ந்தது. சாதிய அடுக்குமுறைகள், பெண் ஒடுக்குமுறை மற்றும் மூடநம்பிக்கைகளைத் தூக்கிப் பிடிக்கும் ஒரு சித்தாந்தம் ஜனநாயகத்திற்கு ஆபத்தானது. எனவே, வன்முறை கலந்த இந்த அடிப்படைவாத அரசியலை இந்தியாவிலிருந்தே அகற்ற வேண்டும்.
நாம் தமிழர் கட்சி (NTK): ஒரு ‘முரட்டு முட்டாள்தனமான’ இனவாத பாசிச அரசியலை முன்னெடுக்கும் ஒரு கூட்டம் இது. இவர்களிடம் தெளிவான தொலைநோக்குப்பார்வை கிடையாது.
தவெக (TVK): நடிகர் விஜய்யின் அரசியல் தரைமட்ட யதார்த்தப் பிரச்சினைகளில் (சமூகப் பிரச்சினைகள், மக்கள் போராட்டங்கள்) அவர் காட்டும் மௌனம், வெறும் ‘பாயாசம்’ போன்ற இனிப்புப் பேச்சுகளால் ‘பாசிசத்தை’ மழுப்ப முயல்வதும் சோர்வையும் ஏமாற்றத்தையே தருகிறது. வெறும் ரசிகர் கூட்டத்தை வைத்துக்கொண்டு அரசியல் செய்ய நினைப்பது முதிர்ச்சியற்றத் தனம். அடிப்படை கட்டமைப்பு குளறுபடிகள் நிறைந்த கட்சி
அதிமுகவின் நிலை என்ன?
அதிமுக அழியக்கூடாது, ஒரு பலமான எதிர்க்கட்சியாக இருக்க வேண்டும் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால், அவர்கள் பாஜகவுடன் கைகோர்த்தபோதே தங்கள் அடையாளத்தை இழக்கத் தொடங்கிவிட்டனர். பாஜக எந்த மாநிலக் கட்சியுடன் கூட்டணி வைத்தாலும், மெல்ல மெல்ல அந்த கூட்டணி கட்சியை விழுங்கிவிடுவதுதான வரலாறு உள்ளது. திமுகவுக்கு மாற்றாக ஒரு வலிமையான கட்சி வேண்டும் என்பது உண்மையே. அதிமுக இல்லாமல் போனால் தமிழக அரசியல் சமநிலை இழக்கும். இந்த கவலை புரிகிறது.
ஆனால், அதிமுக இன்று பாஜகவோடு கூட்டணி சேர்ந்திருக்கிறது. வேறு மாநிலங்களில் என்ன நடந்தது பாருங்கள்: பாஜக கூட்டணியில் சேர்ந்த மாநிலக் கட்சிகள் காலப்போக்கில் பலவீனமாகி, இருந்த இடம் தெரியாமல் ஆக்கப்படும் சூழல் உருவாகி விடுகிறது. அந்த இடத்தில் பாசகவே வந்து விடுகிறது. அதுவே தமிழ்நாட்டிலும் நடக்கலாம். மேலும், அதிமுகவுக்கு வாக்களிப்பது பாஜகவுக்கே வாக்களிப்பதாகும்.
ஏன் திமுக (DMK)?
நிச்சயமாக திமுகவிடம் குறைகளே இல்லை என்று சொல்ல மாட்டேன். தலித் மக்களின் பாதுகாப்பு, ஆணவக் கொலைகளுக்கு எதிரான சட்டம், தொழிலாளர், ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் சிக்கல்கள் மற்றும் விமர்சகர்களைக் கையாளுவதில் இருக்கும் சில குளறுபடிகள் என விமர்சிக்க நிறைய இருக்கிறது.
ஆனாலும், ஏன் திமுகவை ஆதரிக்க வேண்டும்?
- நிர்வாகமும் வளர்ச்சியும்: கடந்த சில ஆண்டுகளில் கல்வி, மகளிர் மேம்பாடு, மற்றும் தொழில் வளர்ச்சியில் தமிழகம் இந்தியாவின் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது. நூலகங்கள், அருங்காட்சியகங்கள் என அறிவுசார்ந்த கட்டுமானங்களில் அவர்கள் காட்டிய வேகம் பாராட்டுக்குரியது.
- அறிவியல் பார்வை: சமூக நல்லிணக்கத்தையும், நவீன அறிவியல் சிந்தனையையும் முன்னெடுக்கும் ஒரு சூழலைத் தமிழகத்தில் தக்க வைத்துள்ளனர்.
- பாசிச எதிர்ப்பு: மிக முக்கியமாக, இந்தியாவிலேயே பாஜகவின் ‘இந்துத்துவ’ அரசியலைத் துணிச்சலாகவும், கொள்கை ரீதியாகவும் எதிர்க்கும் முதன்மையான கட்சியாக திமுக இருக்கிறது.
இறுதியாக
இந்தியாவை மதவாத வன்முறையிலிருந்தும், பாசிசத்திலிருந்தும் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். அதற்குத் தேசிய அளவில் ஒரு வலுவான மதச்சார்பற்ற கூட்டணி தேவை. அந்தச் சங்கிலியில் ஒரு பலமான கட்சியாக திமுக இருக்கிறது.
எனவே, அறிவியல் வளர்ச்சி, சமூக நீதி மற்றும் மதச்சார்பின்மை மீது நம்பிக்கை கொண்டவர்கள், குறைகளைத் தாண்டி – ஒரு பெரிய ஆபத்தைத் தடுப்பதற்காக – இந்தத் தேர்தலில் திமுகவிற்கு வாக்களிக்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.
— செ.து.நிறைமொழி








Comments are closed, but trackbacks and pingbacks are open.