கனமழையால் நகருக்குள் புகுந்த வெள்ளம்… வெள்ள நீரில் தள்ளப்பட்ட குப்பைகள்.. தொற்றுநோய் பரவும் அபாயத்தில் பொதுமக்கள்..! நடவடிக்கை எடுக்குமா நகராட்சி..?
கனமழையால் நகருக்குள் புகுந்த வெள்ளம்… வெள்ள நீரில் தள்ளப்பட்ட குப்பைகள்.. தொற்றுநோய் பரவும் அபாயத்தில் பொதுமக்கள்..! நடவடிக்கை எடுக்குமா நகராட்சி..?
திருச்சி மாவட்டம், துறையூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப்புறங்களில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழைக் காரணமாக பச்சமலை அடிவாரப் பகுதிகளான காணாப் பாடி, நரசிங்கபுரம், ஒட்டம்பட்டி ,கீரம்பூர் ஆகிய பகுதிகளிலிருந்து ஒடையாற்றுவழியாக துறையூர் பெரிய ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் துறையூர் பெரிய ஏரியின் முழுக் கொள்ளளவான 285 ஏக்கர் கொள்ளளவை எட்டிய நிலையில், கடைக்கால் பகுதியில் அதிகப்படியான மழை நீர் காட்டாற்று வெள்ளம் போல் கரை புரண்டு ஓடியது. அதிகரித்த வெள்ள நீர் துறையூர் குடியிருப்பு பகுதிகளான வடக்குத் தெரு, தெப்பக்குளத்தெரு, பூங்கா நகர் ,குடில் பகுதி பின்புறம் உள்ள குடியிருப்பு பகுதி மற்றும் பேருந்து நிலையம் எதிரில் உள்ள சின்ன ஏரி நிரம்பியதாலும் திருச்சி ரோட்டிலும் வெள்ள நீர் புகுந்ததால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகினர். மேலும் பெரிய ஏரிகடைக்கால் பகுதியிலிருந்து வெள்ள நீர் வெளியேறும் இடங்களில் ஓரத்தில் தேங்கியுள்ள அளவுக்கதிகமான குப்பைகளை ஓடும் வெள்ள நீரிலேயே நகராட்சி துப்புரவு பணியாளர்கள் தள்ளி விடுகின்றனர்.
இதனால் நீரில் அடித்துச் செல்லும் குப்பைகள் அருகிலுள்ள குடியிருப்பு வீடுகளுக்குள் புகுவதால் பொதுமக்கள் தொற்றுநோய் அபாயத்தில் வீட்டினுள் முடங்க வேண்டிய அவலத்தில் உள்ளனர். கடந்த 3 நாட்களாக துறையூர்பெரிய ஏரி வழிந்தோடிய நிலையில் அதனை ஆய்வு செய்த நகராட்சி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் நகர்ப்புற பகுதிகளில் உள்ள சிறுபாலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் உள்ள குப்பைகளை முறையாக அப்புறப்படுத்த எவ்வித முயற்சியும் செய்யாததால் தற்போது வெள்ள நீரோடு குப்பைகளும் அடித்து வரப்பட்டு சின்ன ஏரிக்குள் புகுந்து ஒரே குப்பை மயமாக, மாசு படிந்து நீரில் மிதந்து காட்சியளிப்பதால், சின்ன ஏரியும் நிரம்பி வழிந்து திருச்சி ரோட்டில் உட்புகுந்த நிலையில் உள்ளதால் நீரில் மிதக்கும் குப்பைகளால் விரைவில் தொற்றுநோய் ஏற்படக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் கடைக்கால் பகுதி முதல் சின்ன ஏரி வரை உள்ள சிறு பாலங்கள் பழுது ஏற்பட்டுள்ளதாலும் அதனை உடனடியாக சீரமைக்க வேண்டும் எனவும் ,துறையூர் நகராட்சி நிர்வாகம் மக்களிடம் ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்கும் விதமாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .