வ.உ.சி. பாராட்டிய பத்திரிகை! தேசிய கல்லூரிக்கு பெருமை சேர்த்த தமிழறிஞர்!!
பாரம்பரியப் பெருமைகள் மிகுந்த திருச்சிராப்பள்ளி தேசியக் கல்லூரியின் முதல் தமிழ்த்துறைத் தலைவர் பண்டித ம. கோபாலகிருஷ்ணய்யர் அறக்கட்டளைச் சொற்பொழிவு ஆகஸ்ட் 10 அன்று இராஜாஜி குளிர்மை அரங்கில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மூத்த பத்திரிகையாளரும், எழுத்தாளருமான பன்முகக் கவிஞர் பத்மன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
“தேசியமும் தமிழும் வளர்த்த மாமனிதர் ம.கோ.” என்ற தலைப்பில் அவர் ஆற்றிய சிறப்புரையில், “பண்டித ம. கோபாலகிருஷ்ணய்யர் தேசியக் கல்லூரியின் முதல் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றி தமிழுக்கும், தேசத்திற்கும் ஆற்றிய தொண்டுகள் அளப்பரியவை என்று குறிப்பிட்டார். விவேகானந்தர் சிகாகோ சென்று திரும்பியபோது, பாம்பனில் அவருக்கு வரவேற்புரை ஆற்றியதும் இவரே என்பதையும் வரலாற்றுச் சான்றுகளோடு எடுத்துரைத்தார்.

மேலும், மதுரையில் இவர் நிறுவிய ‘மாணவர் செந்தமிழ்ச் சங்கம்’, புகழ்பெற்ற நான்காம் தமிழ்ச் சங்கத்திற்கு முன்னோடியாகத் திகழ்ந்தது என்றார். உரையாசிரியர் நச்சினார்க்கினியர் மீது இவர் கொண்டிருந்த தீராப்பற்றின் காரணமாக, நச்சினார்க்கினியர் பெயரில் விருது, நூலகம் மற்றும் பத்திரிகை ஆகியவற்றை உருவாக்கினார். 1916-ஆம் ஆண்டில் இவர் நடத்திய ‘விவேகோதயம்’ பத்திரிகை தான் விரும்பிப் படிக்கும் இதழாக கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. அவர்களால் பாராட்டப்பட்டது. அன்னார் மாணவர்களிடையே தமிழ் உணர்வையும், தேசியத்தையும் ஒருங்கே விதைத்த பெருமைக்குரியவர் என்பதையும், அவரது வாழ்க்கை நெறிகளை இன்றைய இளைய தலைமுறையினர் பின்பற்றி நடக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.
இந்நிகழ்வில் முன்னதாக, கல்லூரியின் முதல்வர் முனைவர் து. பிரசன்னபாலாஜி தலைமை ஏற்க, அறக்கட்டளை நிறுவனர் முனைவர் உஷா மகாதேவன் முன்னிலை வகிக்க, பண்டித ம. கோபாலகிருஷ்ணய்யர் அவர்களின் பெயரன் (சென்னை) சுந்தரராஜன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். தமிழாய்வுத்துறைத் தலைவரும் இணைப்பேராசிரியருமான முனைவர் இரா. இரவிச்சந்திரன் அவர்கள் வரவேற்க, நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளரும் இணைப்பேராசிரியருமான முனைவர் ஆ. முருகானந்தம் நன்றி கூறினார். மாணவர்களும் தமிழாய்வுத்துறைப் பேராசிரியர்களும் தமிழ் ஆர்வலர்களும் திரளாகக் கலந்து கொண்ட இந்த நிகழ்வு, பண்டித ம. கோபாலகிருஷ்ணய்யர் அவர்களின் பெருமைகளை வருங்காலத் தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும் வகையில் சிறப்பாக நடந்தேறியது.
— அங்குசம் செய்திப் பிரிவு.







Comments are closed, but trackbacks and pingbacks are open.