FQL மோசடி சொல்லும் சேதி !
தமிழகத்தில் திரும்பிய பக்கமெல்லாம் FQL மோசடியில் சிக்கி பணத்தை இழந்தவர்களின் அபலக்குரல்களும்; இம்மோசடி குறித்தான அங்கலாய்ப்புகளாகவும் எதிரொலிக்கிறது.
மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், விருதுநகர் ஆகிய நான்கு மாவட்டங்களை குறிவைத்து இம்மோசடியை அரங்கேற்றியிருக்கிறார்கள். எப்படியும் 50,000-க்கும் அதிகமானோர்கள் இம்மோசடியால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கிறார்கள். மோசடியின் அளவு 1000 கோடிக்கும் குறையாது என்கிறார்கள்.
FQL நிறுவனம் எந்த நாட்டைச் சேர்ந்தது என்று யாருக்கும் தெரியாது. அதற்கு யார் உரிமையாளர் தெரியாது. அந்த நிறுவனத்துக்கு எங்கு அலுவலகம் இருக்கிறது என்று தெரியாது. இன்னும் சொல்லப்போனால், “கிரிப்டோகரன்சி” என்ற பெயரைக்கூட, முறையாக உச்சரிக்கத்தெரியாத அப்பாவி பாமர மக்களை குறிவைத்து இந்த மாபெரும் வேட்டை நடத்தப்பட்டிருக்கிறது என்பதுதான் எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. கருவேலமரங்களின் பின்னணியில் கட்டாந்தரையில் தார்ப்பாய்களை விரித்து கிராமத்து பெண்களை ஒருங்கிணைத்து ஆன்லைன் டிரேடிங் குறித்து வகுப்பு எடுத்த விவகாரம் எல்லாம் கிறுகிறுக்க வைக்கிறது.
அடுத்தடுத்து ஆறு வழக்குகள், 17 கைதுகள் என போலீசாரின் நடவடிக்கைகள் தொடர்ந்தாலும், இழந்த பணத்தை முழுமையாக மீட்டெடுக்க முடியுமா? என்பது ட்ரில்லயன் டாலர் கேள்வியாக தொக்கி நிற்கிறது.
ஆன்லைன் மோசடி புகாரில் சிக்கி சர்ச்சையான ”ஆப்”களை உருவாக்கி தந்த vx AI Lab நிறுவனம்தான் FQL நிறுவனத்துக்கான ஆப்-பை டெவலப் செய்து தந்திருக்கிறது. எங்கிருந்து எங்கு பணம் கைமாறுகிறது என்பதை சைபர் கிரைம் வல்லுநர்கள்கூட எளிதில் டிராக் செய்துவிடாத அளவுக்கு தேர்ந்த பணப்பரிமாற்ற முறைகளை கையாண்டிருக்கிறார்கள்.
FQL நிறுவனத்தின் தலைமை அதிகாரி என்பதாக காட்டப்பட்ட ”ரிச்சர்ட் சரோஸ்” என்ற பெயரே உண்மையான நபரின் பெயர் கிடையாது. அது ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட போலி பிம்பம் என்று வேறு திகில் பரப்புகிறார்கள்.
அடிப்படையில் பொருளாதாரக் குற்றம் என்பதால், தற்போது இந்த விவகாரம் பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே, ஆருத்ரா, ஐ.எஃப்.எஸ்., நியோமேக்ஸ் என பெரும் மோசடி வழக்குகளையே தீர்க்க முடியாமல் தள்ளாடிவரும் நிலையில், EOW போலீசாரின் தலையில் இந்த வழக்கு சுமத்தப்பட்டிருக்கிறது.
மோசடியின் தன்மையில் மட்டுமல்ல; மோசடியின் பரிமாணமும் ஆழமானது, சர்வதேச வலைப்பின்னல்களை கொண்டிருக்கிறது. பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசாருக்கு ஏற்கெனவே இருக்கும் பணிச்சுமை மற்றும் ஆட்பற்றாக்குறை உள்ளிட்ட அம்சங்களோடு பொருத்தி பார்க்கும்போது, இந்த வழக்கையும் அவர்களால் திறம்பட முன்நகர்த்த முடியுமா? என்ற கேள்வி எழுகிறது.
வழக்கமான வழக்குகளுக்காக வருவாய்த்துறை, பதிவுத்துறை, சைபர்கிரைம் போலீஸ் உள்ளிட்டு தமிழகத்திலேயே துறைசார்ந்த ஒத்துழைப்பு இல்லாமல், பல்வேறு நடைமுறை சிக்கல்களை எதிர்கொண்டு வரும் பின்னணியில், சிங்கம் பட பாணியில் எல்லை கடந்து சர்வதேச கிரிமினல்களை பறந்து சென்று பிடித்துவிட ஆபரேஷன்- D எல்லாம் சாத்தியமா? என்ற கேள்வியும் எழாமலில்லை.
கற்பணைகளுக்கு எட்டாதபடி, மோசடிகளின் பரிமாணங்கள் முற்றிலும் மாறிவிட்ட சூழலில், அதை தடுத்து தண்டிக்கும் இடத்தில் இருக்கும் பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசாரின் கட்டமைப்பும் அதற்கேற்ப மாற்றம் பெற வேண்டும் என்பதையே இந்த விவகாரங்கள் உணர்த்துகின்றன.
– அங்குசம் புலனாய்வுக்குழு.








Comments are closed, but trackbacks and pingbacks are open.