G.S.T. பரிதாபங்கள் தொடா்-1
ஜி.எஸ்.டி. என்றாலே சர்ச்சைகளும் சிக்கல்களும்தான் போல. சமீபத்தில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடனான தொழிலதிபர்கள் சந்திப்பில், கோவையைச் சேர்ந்த அண்ணபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் ஜி.எஸ்.டி. பரிதாபங்கள் குறித்து பேசியதும் அதனை தொடர்ந்து அவர் மன்னிப்பு கோரியதாக வெளியான வீடியோவும் பேசு பொருளாக மாறியது.
பொதுவில் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பே மோசடியானது; சர்ச்சைகள் நிறைந்தது என்ற கருத்து நிலவிவரும் சூழலில், தமிழகத்தில் ஜி.எஸ்.டி. நடைமுறைப்படுத்தப்படும் விதம் சிக்கல் நிறைந்து இருப்பதாக கவலை தெரிவிக்கிறார்கள் தொழிலதிபர்கள்.
அண்ணபூர்ணா ஹோட்டல் உரிமையாளரைப் போலவே, தாங்களும் மன்னிப்பு கேட்க வேண்டிய இக்கட்டிற்கு தள்ளப்படுவோம் என்று அஞ்சினார்களோ, என்னவோ தனிப்பட்ட விவரங்களை வெளியிட வேண்டாம் என்ற வேண்டுகோளுடன் சில விசயங்களை பகிரத் தொடங்கினார்கள், இளம் தொழிலதிபர்கள் இருவர்.
தமிழகத்தை அடிப்படையாகக் கொண்டு தொழில் செய்பவர்களிடையே, அவர்கள் செய்யும் தொழிலைப் பொறுத்து சிலர் ஒன்றிய அரசின் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பின் கீழாகவும், சிலர் தமிழக அரசின் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பின் கீழாகவும் வருகின்றனர். ஒன்றிய அரசின் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறைகளில் இருந்து வருபவர்களுக்கு எந்தவித சிக்கலும் இல்லை என்கிறார்கள். ஆனால், தமிழக ஜி.எஸ்.டி.யின் கீழ் தொழில் செய்து வருபவர்கள் அன்றாடம் அதிகாரிகளுடன் மல்லுக்கட்டியே தாவு தீர்ந்துவிடுவதாக புலம்பித் தீர்க்கிறார்கள்.
ஏற்கெனவே, வாட் வரிவிதிப்பில் இருந்தவர்கள்; வணிகர்கள்; நேரடி உற்பத்தியில் ஈடுபடுபவர்கள்; மற்றும் குறிப்பிட்ட சில சேவைத்துறைகளை நிர்வகித்து வருபவர்கள் தமிழக அரசின் ஜி.எஸ்.டி. வரம்பில் வருகிறார்கள். தமிழகத்தில், மதுரை, கோவை, திருச்சி, சேலம், சென்னையில் இரண்டு என ஆறு மண்டலங்களாக ஜி.எஸ்.டி. அலுவலகங்கள் கமிஷனர்களின் கட்டுப்பாட்டின் கீழ் நிர்வாக ரீதியாக இயங்கி வருகின்றன. மாவட்ட அளவில் இணை இயக்குநர்கள் மற்றும் உதவி இயக்குநர்களின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன. இவை தவிர, மைய நிர்வாகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் Enforcement அலுவலர்கள் மாவட்ட வாரியாக செயல்பட்டு வருகிறார்கள்.
அதிலும்கூட, நிர்வாகரீதியாக மேற்கொள்ளப்படும் விவகாரங்களில் பெருமளவு சிக்கல் இல்லை என்கிறார்கள். ஏனெனில், பெரும்பாலும் அவை மென்பொருள் மயமாக்கப்பட்டிருக்கின்றன. வணிகர்களின் வர்த்தகத்தை கண்காணிப்பது தொடங்கி, எந்த வகையான விதிமீறல்களுக்கு எந்த வகையான நடவடிக்கையை மேற்கொள்வது என்று தீர்மானிப்பது தொடங்கி, அதற்கான விளக்கம் கோரும் நோட்டீசுகளை உருவாக்குவது வரையில் அனைத்து நிர்வாக பணிகளையும் அந்த தனிச்சிறப்பான மென்பொருளே நிர்வகித்துவிடுகின்றன என்கிறார்கள்.
அவ்வாறு மென்பொருள் எழுப்பும் கேள்வி எதுவாயினும், அதற்கு தகுந்தாற்போல திறமை வாய்ந்த ஆடிட்டர் ஒருவரால் உரிய பதிலை அளிக்கும்பட்சத்தில், அந்தப் பிரச்சினையும் தீர்த்து வைக்கப்படுகின்றன. விதிவிலக்கான நேர்வுகளில் மட்டுமே, சம்பந்தபட்ட உயர் அதிகாரிகளை நேரில் சந்தித்து விளக்கம் அளிக்க வேண்டியிருப்பதாக தெரிவிக்கிறார்கள்.
ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்ட பிறகு, வணிக நடவடிக்கைகள் அனைத்தும் ஆன்லைன் முறைக்கு மாற்றம் பெற்றிருக்கின்றன. ஜி.எஸ்.டி. பதிவு பெற்று தொழில் செய்யும் ஒருவர், தனக்குத் தேவையான மூலப்பொருளை அல்லது தான் விநியோகிக்கும் சரக்கை யாரிடமிருந்து எந்த பகுதியில் இருந்து வாங்குகிறார் என்பதில் தொடங்கி, அந்த சரக்கு எந்த வழியாக எப்போது சம்பந்தபட்ட தொழிலதிபருக்கு வந்து சேர்கிறது என்பது வரையில் அனைத்துமே சம்பந்தபட்ட அதிகாரிகளால் ஆன்லைனில் கண்காணித்துவிட முடியும் என்ற நிலை வந்துவிட்டது.
எவ்வளவு ரூபாயை ஜி.எஸ்.டி. வரியாக அந்த தொழிலதிபர் செலுத்துகிறாரோ, அந்த ரூபாயில் ஒரு ரூபாய் குறை வைக்காமல் வாடிக்கையாளரின் தலையில் கட்டிவிடும் முறையும், இதனை வேறு வழியே இல்லை இந்த சுமையையும் வாடிக்கையாளர் ஏற்றுத்தான் ஆகவேண்டும் என்ற நிலையும் வந்து வருடங்கள் பல ஆகிவிட்டது. இந்த மாற்றமும் ஆன்லைன் கண்காணிப்பு முறைகளும் 99% தொழிலில் தில்லுமுல்லுகள் செய்வதற்கான வாய்ப்புகள் இல்லை என்ற நிலையை உருவாக்கிவிட்டது என்கிறார்கள்.
ஆனாலும், Enforcement அலுவலர்களைப் பொறுத்தவரையில், தமிழகத்தில் தொழில் செய்யும் எல்லோரையுமே திருடனாகவே பார்த்து பழகியிருக்கிறாரகள். அவர்களுக்கு தொழிலைப்பற்றிய அடிப்படை புரிதல் கூட இருப்பதில்லை. சொல்லும் விளக்கத்தை கேட்பதற்கும் அவர்கள் தயாராக இருப்பதில்லை. வெறுமனே, தங்களது அதிகாரத்தையும் ஆதிக்கத்தையும் வணிகர்களிடம், தொழிலதிபர்களிடம் செலுத்துகிறார்கள் என்கிறார்கள்.
தமிழகத்தின் ஒவ்வொரு சுங்கச்சாவடிகளிலும், அல்லது எதிர்பாராத அதிரடி வாகன சோதனைகளில் ஈடுபடும் Enforcement அலுவலர்களால்தான் பெரும்பாலும் சிக்கலை சந்திக்க நேர்வதாகவும் குறிப்பிடுகிறார்கள். போக்குவரத்து காவலர்களை காட்டிலும் மிகவும் மோசமான முறையில் வாகன தணிக்கையில் அவர்கள் ஈடுபடுகிறார்கள் என்றும் வாகன ஓட்டுநர்களை மிகவும் தரக்குறைவாகவும் நடத்துகிறார்கள் என்றும் குற்றஞ்சாட்டுகிறார்கள்.
மாதத்திற்கு 5 கோடி ரூபாய்க்கும் அதிகமான டர்ன்ஓவர்களை கொண்டவர்கள் கட்டாயம் ஆன்லைன் வழியே பதிவு செய்த இ-வே பில் கட்டாயம். உதாரணத்திற்கு சாலை அமைப்பதற்கு ரெடிமேட் தார்க்கலவைகளை தயாரித்து வழங்கும் நிறுவனத்தை நடத்திவரும் தொழிலதிபர் ஒருவர், தனது தொழிலுக்கு தேவையான மூலப்பொருளான தாரை யாரிடமிருந்து எவ்வளவு அளவுகளில் வாங்குகிறார் என்பதை ஆன்லைனில் கண்டிப்பாக பதிவு செய்தாக வேண்டும்.
அவரது ஜி.எஸ்.டி. பதிவு அலுவலகம் திருச்சியில் இயங்கிவருகிறது என்று எடுத்துக்கொள்வோம். ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து முறையான இ-வே பில் பதிவு செய்யப்பட்டு சரக்கு வாகனமும் வந்து கொண்டிருக்கிறது. ஆனால், வரும் வழியிலேயே ஒரு குறிப்பிட்ட ஊரில்தான் அவருக்கு அந்த தாரின் பயன்பாடு இருக்கிறது. ஆகவே, வரும் வழியிலேயே கோயம்புத்தூரிலோ, அல்லது திருப்பூரிலோ நிறுத்தி அந்தத்தாரை இறக்குகிறார் என்றால், அது எப்படி? என்று Enforcement அலுவலர்கள் வந்து நிற்கிறார்களாம்.
ஆன்லைனிலே, லைன் சேல்ஸ், ரெகுலர் சேல்ஸ், காம்பினேஷன் 2, 3 என சில வகைப்பாடுகள் இருக்கின்றனவாம். இதனை தேர்வு செய்து, அவ்வாறு ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும் சரக்கை வரும் வழியிலேயே இறக்கிக்கொள்ளவே இந்த வகைப்பாடுகள் இருக்கின்றன என்கிறார்கள் ஆடிட்டர்கள். ஆனாலும், Enforcement அலுவலர்களுக்கு புரிவதில்லை. சொன்னாலும் ஏற்பதில்லை. 200% மடங்கு வரி விதிக்கிறேன் என்கிறார்கள்.
வாகனத்தை யார்டுக்கு ஓட்டிச் செல்கிறார்கள். இன்னும் சில இடங்களில் லாரி சாவியை பிடுங்கி வைத்துக்கொண்டு டிரைவருடன் சண்டையிடுகிறார்கள். சட்டையைப் பிடித்து அடிக்கவும் செய்திருக்கிறார்கள். ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு குறித்த போதுமான புரிதலும் பக்குவமும் இல்லாதவர்களே Enforcement அலுவலர்களாக வலம் வருகிறார்கள், என்கிறார்கள்.
(ஜி.எஸ்.டி. பரிதாபங்கள் தொடரும்…)
— ஆதிரன்.