திருமா சந்திப்பு – ஏப்.14 அதிரடிக்கு அச்சாரம் போட்ட நடிகை காயத்திரி

0

“வருணதர்மம் எரிக்கப்பட வேண்டும், அது பிறப்பில் வேற்றுமை பாராட்டுவது மட்டுமல்லாது பெண்களையும் இழிவுபடுத்துகின்றது. பெண்களை இழிவு செய்கின்ற வருணதர்மம்  நமக்குத் தேவையில்லை” என்று ஆக்ரோஷம் பொங்க விசிக தலைவர் திருமா உரையாற்றினார்.

“மிஸ்டர் திருமா……”

2 dhanalakshmi joseph

அதற்கு எதிர்வினையாகப் பாஜகவின் கலாச்சாரப் பிரிவு செயலாளர், முன்னாள் நடிகை காயத்திரி ரகுராம் பெண்கள் கலந்து கொண்ட ஓர் ஆர்ப்பாட்டத்தில் பேசியபோது,“வருணதர்மம் பெண்களை இழிவுபடுத்துகின்றது என்ற தகவலை விசிக தலைவர் திருமா திரித்துக் கூறிவருகின்றார். மிஸ்டர் திருமா….. நாக்கை அடக்கிப் பேசுங்கள். காலில் இருப்பது கைக்கு வந்துவிடும். ஜாக்கிரதை” என்று ஆணவமாகத் திருமாவை எச்சரித்தார்.

இரசித்த பாஜக

- Advertisement -

- Advertisement -

பாஜகவில் யாரும் சொல்லமுடியாத, சொல்ல விரும்பாத எச்சரிக்கையைக் காயத்திரி சொல்லிப் பெருமையைப் பெற்றுக்கொண்டார். பாஜகவில் காயத்திரியின் ஆணவமான எச்சரிக்கை தேவையற்றது என்று யாரும் கூறவில்லை. குறைந்தபட்சம் பாஜக தரப்பில் வருத்தம் கூடத் தெரிவிக்கவில்லை. இரசித்தார்கள் என்றே பொருள்கொள்ளவேண்டும்.

திருமா
திருமா

கல்லெறிகிறார்கள்…. பூக்களையும் வீசுவார்கள்

விசிக தொண்டர்கள் தரப்பில் சமூக ஊடகங்களில் நடிகை காயத்திரியைப் பற்றி அவதூறுகள் பரப்பப்பட்டன. பிரபுதேவாவுடன் ஆடியவள், துபாய் கிளப்களில் நடனம் ஆடியவள் என்று காயத்திரி மீது கடுமையான தாக்குதல்கள் நடைபெற்றன. அப்போது விசிக தலைவர் திருமா தொண்டர்களிடம்,“நடிகை காயத்திரியைச் சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனம் செய்யவேண்டாம். என்மீது கோபம் கொண்டு வன்மம் கொண்டு, கருத்தைக் கருத்தால் வெல்லமுடியாதவர்கள் என் மீது கல்லெறிகிறார்கள். எறியட்டும். ஒருநாள் அவர்களே என்மீது பூக்களையும் வீசும் காலம் வரும். அதுவரை அமைதியாக இருப்போம்” என்று கூறி, தொண்டர்களை அமைதிப்படுத்தினார்.

பாஜகவிலிருந்து காயத்திரி நீக்கம்

காலம் உருண்டு ஓடியது. பாஜகவில் சூர்யா – டெய்சி தொலைபேசி உரையாடலைக் காயத்திரி வெளியிட்டார். இது கட்சியைக் களங்கப்படுத்தும் செயல் என்று பாஜக தலைவர் அண்ணாமலை காயத்திரியை 6 மாதக் காலத்திற்குக் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். காயத்திரி மீண்டும் கட்சியில் இணைய டெல்லி வரை சென்று தலைவர்களைப் பார்த்து வந்தார். எதுவும் பலனளிக்காத நிலையில், காயத்திரி பாஜகவிலிருந்து விலகினார். தொடர்ந்து அண்ணாமலையைக் கடுமையாகச் சாடிவந்தார். ஒரு காலத்தில் காயத்திரியின் ஆணவப் பேச்சை இரசித்த பாஜகதான், அவரைக் கட்சியிலிருந்தும் வெளியேற்றியது.

நடிகை காயத்திரி - திருமா சந்திப்பு
நடிகை காயத்திரி – திருமா சந்திப்பு
4 bismi svs

பெண்கள் பங்கேற்கும் சக்தி யாத்திரை

அண்ணாமலை ஈரோடு சட்டமன்றக் கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டால் எதிர்த்துப் போட்டியிடுவேன் என்று காயத்திரி அறிக்கை வெளியிட்டு அரசியல் களத்தின் கவனத்தை ஈர்த்தார். வரும் ஏப்.14 கன்னியாகுமரியிலிருந்து பாஜக தலைவர் அண்ணாமலை ஒருவருடம் தமிழ்நாடு முழுவதும் நடைப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அதற்குப் போட்டியாகக் காயத்திரி அதே ஏப்.14இல் சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கு “சக்தி யாத்திரை” என்னும் நடைப்பயணத்தை மேற்கொள்கிறார். இந்த நடைப்பயணத்தில் பெண்கள் மட்டுமே பங்குபெறுவார்கள் என்பது சிறப்பான செய்தியாகும்.

இந்நிலையில், 21.02.2023ஆம் நாள் நடிகை காயத்திரி சென்னையில் உள்ள விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைமையகமான அம்பேத்கர் திடல் சென்று விசிக தலைவர் திருமாவை மரியாதை நிமித்தம் சந்தித்தார். அப்போது திருமா காயத்திரிக்குப் பொன்னாடை போர்த்தி, உலக வரலாற்றில் பெண்கள் என்னும் நூலினைப் பரிசாக வழங்கினார். பதிலுக்குக் காயத்திரி திருமாவிற்குப் பொன்னாடை வழங்கி அன்பினை வெளிப்படுத்தினார். இந்த நிகழ்வையொட்டி, காயத்திரி விசிகவில் இணைகிறார் என்ற தகவல் ஊடகங்களில் பரப்பப்பட்டது.

டாக்டர் ஷர்மிளா
டாக்டர் ஷர்மிளா

காயத்திரிக்கு விசிக வரவேற்பு

விசிகவின் டாக்டர் ஷர்மிளா பேசும்போது, “காயத்திரி தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்தே தலைவரைச் சந்தித்திருக்கிறார். மறப்போம். மன்னிப்போம் என்ற வகையில் அவரின் வருகை வரவேற்கிறேன்” என்று கூறினார். கடலூர் மாநகராட்சி விசிக உறுப்பினர் புஷ்பலதா பேசும்போது, “தலைவர் மீது கல்லெறிந்தவர் இப்போது பூக்களைத் தூவுகிறார். தலைவரின் தாயுள்ளம் காயத்திரியை மன்னித்துள்ளது என்றே புரிந்துகொள்கிறோம்” என்று கூறினார். காயத்திரி செய்தியாளர்களைச் சந்தித்தபோது,“அண்ணன் திருமாவை மரியாதை நிமித்தம் சந்தித்தேன். அவரைச் சந்தித்தது என் மனதிற்கு மகிழ்ச்சியையும் ஆறுதலையும் தந்தது” என்று நெகிழ்ச்சியாகக் கூறினார்.

புஷ்பலதா
புஷ்பலதா

விசிகவில் காயத்திரி ?

காயத்திரி விசிகவில் இணைத்துக்கொள்ளப்படுவாரா ? என்ற கேள்விக்கு விசிகவின் உயர்மட்டத் தலைவர் நம்மோடு பேசும் போது,“இப்போதைக்கு அந்தப் பேச்சுக்கு இடமில்லை. தலைவரை நடிகை காயத்திரி சந்தித்துள்ளார். வரும் ஏப்.14ஆம் நாள் காயத்திரி சக்தி யாத்திரை நடத்துகிறார். அது சித்திரை முதல் நாள் மட்டுமல்ல, அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளும் கூட. அந்த நாளில் யாத்திரை சென்னையில் தொடங்குவதால் தலைவர் திருமா அந்த நடைப்பயணத்தைத் தொடங்கி வைக்கக் காயத்திரி அழைத்திருப்பார் என்றே எண்ணுகிறேன். காயத்திரியைக் கட்சியில் சேர்ப்பது என்பது தலைவர் எடுக்கவேண்டிய முடிவு” என்று முடித்துக்கொண்டார்.

அரசியலுக்கு ஆதரவு கரம்

நடிகை காயத்திரி அரசியல் செய்ய வேண்டும் என்றால் ஓர் ஆதரவு சக்திகள் அருகே இருக்கவேண்டும். அண்ணாமலையை எதிர்த்து அரசியல் செய்யும் காயத்திரிக்கு விசிக தற்போதைக்கு ஆதரவு கரம் நீட்டியுள்ளது என்பது உண்மை என்றாலும் காயத்திரி விசிகவில் இணைவாரா? என்ற கேள்விக்கு எதிர்காலம் தான் பதில் சொல்லும்.

– ஆதவன்

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.