விஜய் கும்பல் எல்லாம் பிம்பிளாக்கி பிளாக்கி தான் !
தமிழக வெற்றிக் கழகத்தை இளைஞர்கள் ஆதரிக்கிறார்கள் என்பது உண்மைதான். இளம்பெண்கள், 40 வயதுக்குக் குறைவான பெண்களுக்கு விஜய் மீது ஒரு “Crush” எனப்படும் இயல்பான நாயகக் கவர்ச்சி இருக்கிறது.
அதாவது அவர்கள் தங்கள் ஆண் இணையை இப்படிப்பட்ட ஒரு அசாத்தியமான திறன்கள் கொண்ட, மிக மென்மையாகக் காதலிக்கிற இணையாகக் கற்பனை செய்து கொள்கிறார்கள். இது பெண்களுக்கு மட்டும் தானா என்றால் இல்லை.
ஆண்களுக்கும் உண்டு, ஆனால் அவர்கள் கற்பனை உலகில் இருந்து வெளியில் வருவதற்கான விடுதலை பெற்ற வாழ்வை வாய்ப்பாகப் பெற்றிருக்கிறார்கள், அந்த விடுதலை பெண்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை என்பதால் கூடுதலாக அவர்கள் நாயகத் தோற்றத்தை, வழிபாட்டை மற்றும் கனவுகளை அடைகாக்கிறார்கள்.
அப்படி ஒரு பாத்திரம் எங்கும் இல்லை என்பதை அவர்களால் உணர முடியாது. உணர்ந்தாலும் அதை அவர்கள் உயிர்ப்பித்துக் கொள்கிறார்கள். இந்த பிம்பம் திரைப்படங்களின் வழியாக தொடர்ந்து கட்டமைக்கப்பட்டது.
எம்.ஜி.ஆர், ரஜினிகாந்த், விஜயகாந்த் இவர்களைத் தொடர்ந்து இப்போது விஜய், மும்பையில் ஒருமுறை அக்சய் குமார் அறிமுகமான புதிதில் Worli Sea Face அருகில் முதன்முதலாக ஒரு படப்பிடிப்பைப் பார்த்தேன். ஒரு தாமரை மலர் போன்ற கட்டுமானத்தின் மீது ஏறி நாயகனும், நாயகியும் ஆட வேண்டும்.
நாயகி இலகுவாக மேலே ஏறி விட்டார், உடல் வலு இருந்தது, அக்சய் திக்குமுக்காடி அவரை நான்கைந்து பேர் சேர்ந்து தூக்கி மேலே நிறுத்தினார்கள். இதுதான் திரையுலகம். பாவம் விஜய் திரைப்படத்தில் செய்வதை எல்லாம் அரசியலில் இறங்கி தேர்தலில் வெற்றி பெற்று செய்து விடுவார் என்று நம்புகிற இளைஞர்கள் குறித்து நாம் ஆழமாக யோசிக்க வேண்டும்.
தமிழ் மக்கள் அத்தனை எளிதாக அரசியலைக் கையாள்பவர்கள் அல்ல, தங்கள் நம்பிக்கைக்குரிய கட்சி அல்லது தலைவர்களிடம் இருந்து அவர்களை அத்தனை எளிதாகப் பிரித்து விட முடியாது.
மேலும், உலகின் மிக மூத்த மொழியைப் பேசும் மக்கள், உலகின் தலைசிறந்த நாகரீகங்களில் ஒன்றாக இருப்பவர்கள். விஜய் போன்ற போலியான அரசியல்வாதியிடம் அவ்வளவு எளிதில் ஏமாந்து விடுவார்கள் என்று “பெருமாள் மணி” போன்ற திடுக்கிடும் அரசியல் விஞ்ஞானிகள் நம்புவதைப் போல நம்மால் நம்ப முடியாது.
விவரமறியாத குழந்தைகள், அரசியலைச் பற்றிய சிந்தனை ஊட்டி வளர்க்கப்படாத அதற்கு வாய்ப்பு இல்லாத இளம் தலைமுறை திரைக்கவர்ச்சியை நம்பி அவர் பின்னால் போவது இயல்பானதுதான். ஆனால், அதை முறைப்படுத்தி
“பார் தம்பி, பார் மகளே, பாருங்கள் குழந்தைகளே, கூட்டத்தைக் கட்டுப்படுத்தி பரப்புரை செய்கிற அளவுக்குக் கூட முதிர்ச்சி இல்லாத ஒரு அரசியல் முட்டாள் பின்னே சென்றதில் இதுவரை 50 உயிர்கள் பரிதாபமாக உயிரிழந்தது தானே மிச்சம்.” என்று புரியும்படி சொன்னால் கேட்டுக் கொள்வார்கள்.
தமிழக ஊடகங்கள் (சன் தொலைக்காட்சி உட்பட) விஜய்க்காக ஆடிய ஆட்டம்தான் இருப்பதிலேயே மகா மட்டமானது. ஒரு 10 % வாக்கு விகிதத்தோடு முடிந்து போகவிருந்த தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சியைப் பிடித்து விட்டது போல கூப்பாடு போட்டு இன்னொரு 5 % வாக்குகளை ஏற்றி வைத்திருக்கிறார்கள். அதற்காக அவர்கள் Paid செய்யப்பட்டிருக்கலாம்.
ஆனால், விஜயை பல்வேறு தரப்பட்ட ஊடகங்களில் யாரெல்லாம் ஆதரித்தார்கள் என்று ஆழமாகப் பார்த்தால் அந்தப் பட்டியல் பெரும்பாலும் பாரம்பரிய சங்கிகளின் நீண்ட பட்டியலாக இருக்கும். (பாரம்பரிய சங்கிகள் என்பதை பிராமணர்கள் அல்லது பிராமணர்களுக்குக் காவடி தூக்கி அவர்கள் இடத்தை அடைந்து விட முடியாதா? என்று கனவு காண்கிற இரண்டாம் நிலைச்சாதியினர் என்றும் பொருள் கொள்ளலாம்)
அவர்களது நீண்ட காலக் கனவான திமுகவை எப்படியாவது அழித்து தாங்கள் தமிழகத்தில் இழந்த பெருமையான “சாமி” என்கிற மதிப்பீட்டை மீண்டும் அடைந்து விட வேண்டும் என்பதற்காக அவர்கள் சிங்கம்புலி, தவக்களை (நான் நிஜமான சிங்கம்புலி மற்றும் குளத் தவக்களையைத் தான் சொல்கிறேன்) கூட அடுத்த முதல்வர், செல்வாக்கு மிக்க தலைவர், அடுத்த எம்ஜிஆர் என்றெல்லாம் கட்டமைக்கத் தயங்க மாட்டார்கள்.
ஆனால், எழுதி வைத்துக் கொள்ளுங்கள், விஜய் இரண்டு தொகுதியிலும் வெற்றி பெற முடியாது. அவருடைய வாக்கு விகிதமும் 12 க்கு மேல் செல்வது கடினம். திமுகவும், அதிமுகவும் தங்கள் வாக்குகளை அவ்வளவு எளிதில் விட்டு விடுவதற்கான வாய்ப்பில்லை. ஆனால், எனக்குத் தெரிந்த ஒரு பார்ப்பனீயத் தந்திரம் இருக்கிறது.
NDA கூட்டணி மறைமுகமாக சில இடங்களில் விஜயை ஆதரிக்கலாம், அதன் மூலம் திமுகவையும் வீழ்த்தி அதிமுகவையும் நீர்த்துப் போகச் செய்யலாம் என்கிற மாதிரி ஒரு சித்து விளையாட்டை ஆடுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஆனாலும், இதையெல்லாம் முறியடிக்கும் அளவுக்கு திராவிட முன்னேற்றக் கழகம் களமாடி இருக்கிறது.
அதே கீறல் விழுந்த கிராமபோன் சத்தம் தொடர்ந்து கேட்கிறது…
1) போதை புழக்கம் அதிகமாகி விட்டது.
2) பெண்களுக்குப் பாதுகாப்பில்லை.
3) விலைவாசி உயர்ந்து விட்டது.
முதல் குற்றச்சாட்டுக்குப் பதில் – Ministry of Social Justice Surveys, State Narcotics Department புள்ளி விவரங்கள் பதிலளிக்கின்றன. தேசிய சராசரியை விட மிகக் குறைந்த அளவிலான போதைப்பொருள் புழக்கமே தமிழகத்தில் இருக்கிறது.
இரண்டாம் குற்றச்சாட்டுக்கு NCRB Matrics மற்றும் தேசிய மகளிர் நலத்துறை அமைச்சகம் வழங்கும் தரவுகள் தான் பதில். தமிழகம் இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்ற விகிதத்தில் தேசிய சராசரியை விடப் பன்மடங்கு கீழே இருக்கிறது. அதாவது பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலங்களில் தமிழகம் முதல் மூன்று இடங்களில் இருக்கிறது.
சென்னை மற்றும் கோவை இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பாக வாழும் டாப் 10 நகரங்களில் இடம் பிடிக்கிறது. (சென்னை இரண்டாவது நகரம்.)
மூன்றாம் குற்றச்சாட்டு : விலைவாசி உயர்வுக்கும் தமிழக அரசுக்கும் ஒரு தொடர்பும் இல்லை. குறிப்பாக 56 இஞ்சியார் ஒருகாலத்தில் சொன்னதை நினைத்துப் பாருங்கள், “மித்ரோன், பாய், பெஹனோ…சிலிண்டர் விலையை 500 ரூபாய்க்குக் குறைக்காமல் விடமாட்டேன்.”
முடியாது, 56 இஞ்சியார் மட்டுமில்லை, அதை விட நான்கைந்து இஞ்சி அதிகமுள்ள பூண்டார் வந்தாலும் பன்னாட்டு சந்தை நிலை, எரிபொருட்கள் சந்தை, போர்ச்சூழல் என்று விலைவாசி உயர்வுக்குப் பல்வேறு காரணிகள் இருக்கிறது.
ஈரான் – அமெரிக்க மோதல் காரணமாக இந்தியா முழுவதும் வணிக LPG சிலிண்டர் விலை 6000 வரை கருப்புச் சந்தையில் விற்கப்பட்டதே? 56 இஞ்சியார் என்ன செய்தார்? என்ன செய்ய முடியும்?
இந்தியா முழுவதும் வணிக LPG சந்தையைப் பெரும்பாலும் சங்கிகள் தான் கட்டுப்படுத்துகிறார்கள் என்பது விஜ்ய்ணாவுக்காவது தெரியுமா?
விவரமறியாத நமது இளம் குழந்தைகள் மற்றும் நாயகத் தோற்றத்தைக் கனவு காண்கிற பெண்கள் தவிர பெரும்பான்மையான முதிர்ச்சி அடைந்த தமிழக வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் விஜய் மற்றும் அவரது ஊடக விசில்களுக்கும், சங்கிகளுக்கும் சம்மட்டி அடி கொடுப்பார்கள்.
என்னுடைய கணிப்பில் மீண்டும் ஒரு Complete Sweep க்கான வாய்ப்புத் தெரிகிறது. அதாவது 234 / 234. கண்ணுக்கெட்டிய தொலைவில் சில மாற்றான் தோட்டத்து மல்லிகைகள் மட்டும் மணம் வீசுகிறது. மற்றபடி விஜய் கும்பல் எல்லாம் பிம்பிளாக்கி பிளாக்கி தான். தமிழகம் போராடும், தமிழகம் வெல்லும்.
— கை.அறிவழகன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.