சத்துணவு தந்த சரித்திர நாயகன் எம்.ஜி.ஆர்
தனது ஆட்சி காலத்தில் சிவகாசியில் நடந்த ஒரு விபத்தைப் பற்றி அறிய காரில் போகிறார் எம்.ஜி.ஆர். தூத்துக்குடி அருகே அவரை பார்க்க தாய்மார்கள் பலர் திரண்டிருந்தனர்.
அவர்களது இடுப்பில் குழந்தைகள். காரில் இருந்து இறங்கிய எம்.ஜி.ஆர் அவர்களை பார்த்து காலையில் சாப்பிட்டீர்களா? இல்லை? என்ற பதில். குழந்தைகளெல்லாம் சாப்பிட்டார்களா? இல்லை என தாய்மார்களிடமிருந்து பதில். எங்களுக்கு காலையில் சமைக்க நேரமில்லை. வேலையை முடித்துக்கொண்டு மாலையில் கூலியை வாங்கிப்போனால்தான் அனைவருக்கும் சாப்பாடு என்று தாய்மார்களின் பதில்.
இனி வேலைக்கு போகும் தாய்மார்கள் குழந்தைகளை தங்களுடன் அழைத்துச்சென்று பட்டினி போட தேவையில்லை. அவரவர்கள் ஊரில் அமைக்கப்பட்டிருக்கும் குழந்தைகள் நல நிலையங்களுக்கு அனுப்பிவிட்டு நிம்மதியாக வேலைக்கு போகலாம். எனது மகன்களும், மகள்களும் சுவையான சத்தான உணவு கிடைக்க, பசியாறி இருப்பார்கள் என தாய்மார்கள் மகிழ்ச்சியுடன் இருக்கலாம்.
18.7.1982 அன்று திருச்சியில் (காட்டூரில்) சத்துணவு திட்டத்தை மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தொடங்கி வைத்து பேசிய பேச்சின் ஒரு பகுதியே மேலே கூறியது. ஆட்சிக்கு வந்ததிலிருந்து எத்தனையோ சிக்கல்கள், எத்தனையோ நெருக்கடிகள், எத்தனையோ சவால்கள் எல்லாவற்றையும் தூக்கி சாப்பிடுவதுபோல் ஏதேனும் ஒன்றை நாம் செய்ய வேண்டும். அதை காலம் முழுவதும் நமது பேரை சொல்ல வேண்டும். இப்படி அனுதினமும் சிந்திக்க தொடங்கினார் எம்.ஜி.ஆர். அப்போது உதித்த அருமையான திட்டம்தான் சத்துணவு திட்டம்.
கிட்டத்தட்ட 70 லட்சம் பள்ளிக்குழந்தைகள் சத்துணவு திட்டத்தில் சேர்ந்து சாப்பிட்டனர். 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சத்துணவு மையங்கள் திறக்கப்பட்டன. வயதுக்கேற்ற வகையில் சத்துணவில் மாற்றங்கள் 2 வயது முதல் 5 வயது வரை வயதுக்கேற்ற வகையில் சத்துணவு விரிவாக்கம் இதுபோக சத்துணவு சமைப்பதற்கு ஆயாக்கள், பொறுப்பாளர்கள், அமைப்பாளர்கள் என பலருக்கும் வேலைவாய்ப்பு. சத்துணவு திட்டத்தை வானொலி, மேடைகளில், தொலைக்காட்சி என்பனவற்றில் விரிவான விளக்கங்களை அளித்து பேசினார் எம்.ஜி.ஆர். அதுவே பின்னாட்களில் சத்துணவு தந்த சரித்திர நாயகன் என்று இன்றளவும் பேசப்படுகிறது.
-ஹரிகிருஷ்ணன்