சிறைக் காவலர்களுக்கு எதிராகத் துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதற்கும், தண்டனை வழங்குவதற்கும் காட்டும் தீவிரத்தை, அவர்களின் அடிப்படை நலனுக்கும் உரிமைக்கும் ஏன் காட்ட மறுக்கிறார்கள் என்ற கேள்வியை முன்வைக்கிறார்கள்.
தற்போது, சிறைத்துறையில் சனிக்கிழமைகள் தோறும் குறைதீர் நாளாக கடைபிடித்தாலும்; கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொள்கிறார்களே தவிர, அதற்குரிய முக்கியத்துவம் வழங்கி தீர்வு காண்பதில்லை. கள நிலவரங்கள் அந்தந்த சிறைக்கண்காணிப்பாளர்களைத் தாண்டி உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு செல்வதில்லை. இதனை ஒரு சடங்காகவே மாற்றிவிட்டதாக வேதனை தெரிவிக்கிறார்கள்.
இந்த பின்புலத்தில், சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகளின் துறைத்தலைமை இயக்குநர் டாக்டர்.சந்தீப் ராய் ரத்தோர்.இ.கா.ப தலைமையில், அக்டோபர் – 07 அன்று நடைபெற்ற இணைய வழி கலந்தாய்வு கூட்டம் கவனத்தை பெற்றுள்ளது. இக்கூட்டத்தில், சிறைத்துறை துணைத் தலைவர்கள் மற்றும் சிறைக் கண்காணிப்பாளர்கள் பங்கேற்றிருக்கிறார்கள்.
மத்திய சிறை மற்றும் கட்டுப்பாட்டு சிறைகளில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களையும் ஊக்கப்படுத்தும் வகையிலும் அவர்களின் முழு மேம்பாட்டிற்காகவும் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் சிறை பணியாளர்களுக்கான கலந்தாய்வுக்கூட்டங்களை நடத்துவது என்றும் இந்தக் கூட்டத்தில் தீர்மானித்திருக்கிறார்கள்.
மத்திய சிறையில் இரண்டாம் நிலைக் காவலர்கள் மற்றும் முதல்நிலை காவலர்களுக்கு சிறை அலுவலர் கலந்தாய்வுக்கூட்டங்கள் மேற்கொள்ளவும்; கட்டுப்பாட்டு சிறைகளில் கட்டுப்பாட்டு சிறைக்கண்காணிப்பாளர்களால் அந்தந்த சிறை பணியாளர்களுக்கு கலந்தாய்வு கூட்டங்கள் நடக்க வேண்டும் என்றும் முன்மொழிந்திருக்கிறார்கள். இதேபோல, முதல் தலைமைக்காவலர்கள் முதல் கூடுதல் கண்காணிப்பாளர்கள் வரை சிறைக்கண்காணிப்பாளர் தலைமையில் கலந்தாய்வு கூட்டங்கள் நடத்தப்படும் என்பதாகவும் அறிவித்திருக்கிறார்கள்.
இந்த கலந்தாய்வு கூட்டமும் அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளும் சிறை பணியாளர்கள் மத்தியில் நம்பிக்கையை விதைத்துள்ளது. அதேசமயம், இது வெறுமனே அறிவிப்போடு நின்றுவிடாமல் அதன் முழுமையான பொருளில் நடைமுறைக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறார்கள். மேலும், தற்போது வாரந்தோறும் நடத்தப்படும் குறைதீர் கூட்டங்களை நடத்துவது போல, இதையும் ஒரு சடங்காக மாற்றிவிடாமல், கலந்தாய்வு கூட்டங்களில் முன்மொழியப்படும் குறைகளை அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கும் பொருத்தமான ஏற்பாட்டை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கிறார்கள்.
இது ஒன்றுதான், சிறை பணியாளர்களிடையே ஒரு ஆரோக்யமான உறவை மேம்படுத்தவும்; பணியாளர்களின் மன உறுதியை உயர்த்தவும்; மிக முக்கியமாக சிறை பணியாளர்களிடையே நல்லிணக்கமும் ஆரோக்கியமான பணிச்சூழலும் உருவாகும் என்பதை சுட்டிக்காட்டுகிறார்கள்.
சிறைக்கைதிகளைப் போலவே, சிறை பணியாளர்களின் குரலும் நான்கு சுவர்களுக்குள் முடங்கிவிடாமல், கோட்டையில் எதிரொலிக்க வேண்டும். உரிய தீர்வு காணப்பட வேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பாக அமைந்திருக்கிறது.
— அங்குசம் புலனாய்வுக்குழு.






Comments are closed, but trackbacks and pingbacks are open.