ஜில்லுன்னு சினிமா – கீர்த்தி ஆண்டனி ? த்ரிஷா? த.வெ.க.வின் கொ.ப.செ.யார்?
ஆண்டனி தட்டில் என்பவரைத் திருமணம் செய்த பின் கீர்த்தி ஆண்டனி என இப்போது அழைக்கப்படுவர் கீர்த்தி சுரேஷ். 2024 டிசம்பரில் நடந்த இவரின் திருமணத்திற்கு கோவாவிற்கு தனி ஃப்ளைட்டில் த்ரிஷாவுடன் சென்று, மாப்பிள்ளைத் தோழனாக சிறப்பு சேர்த்து கீர்த்தியின் குடும்பத்திற்கு பெருமை சேர்த்தவர் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்.

பெருமைக்கு மேலும் பெருமை சேர்க்கும்விதமாக இந்த தலைப்பொங்கல் பண்டிகையை தனது கணவர் ஆண்டனியுடன் கீர்த்தி கொண்டாடிய போது சர்ப்ரைஸ் விசிட் அடித்து, புதுப்பொங்கப்பானையில் பச்சரி போட்டு, பொங்கல் கொண்டாடினார் விஜய். இதையெல்லாம் பார்த்த கீர்த்தி குடும்பமும் ஆண்டனி குடும்பமும் எவ்வளவோ அரசியல் பணிகளுக்கு மத்தியில் தங்கள் பிள்ளைகளின் தலைப் பொங்கலுக்கு வந்து விஜய் சிறப்பு சேர்த்ததை நினைத்து சிலிர்த்துப் போயுள்ளது. ”திருமணம் ஆனாலும் நீ நடிப்பதை நிறுத்தக் கூடாதுன்னு எனது கணவர் சொல்லிவிட்டார்” என்பதை மகிழ்ச்சியுடன் சொல்லியுள்ளார் கீர்த்தி ஆண்டனி.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
அடுத்து த்ரிஷா மேட்டருக்கு வருவோம். ’அஜீத்துடன் நடித்த, வரும் பிப்ரவரி 06—ஆம் தேதி ரிலீசாகவுள்ள ‘விடாமுயற்சி’, கமலுடன் நடித்து ஜூன்மாதம் ரிலீசாகவுள்ள ‘தக் லைஃப்’ படங்களுக்குப் பிறகு வேறு எந்தப் படத்திலும் த்ரிஷா கமிட்டாகவில்லை. அதனால் சினிமாவுக்கு முழுக்குப் போட்டுவிட்டு, அரசியல் குளத்தில் குதிக்கிறார் த்ரிஷா’ என கடந்த சில நாட்களில் அனைத்து டிசைனான மீடியாக்களிலும் செய்தி றெக்கை கட்டிப் பறக்கிறது. ‘அதெல்லாம் இல்ல, த்ரிஷா சினிமாவுக்கு முழுக்குப் போடுவதில் அவரது அம்மாவுக்கு விருப்பம் இல்ல’ என்ற செய்தியும் கூடவே பறக்கிறது.
அரசியல்னா அது விஜய் கட்சி தான் என்பதில் த்ரிஷாவும் உறுதியாக இருக்கிறார். சினிமாவிலும் தனக்கு ராசியான ஜோடி, ஹிட் ஜோடி என்பதால் அரசியல் ஹிட்டுக்கு த்ரிஷாவின் வருகை ஹெல்ப்பாக இருக்கும் என்ற செண்டிமெண்டும் விஜய்யின் மனதுக்குள் ஓடுகிறதாக சொல்கிறார்கள்.
திருமணத்திற்குப் பின் நடிப்பதற்கு தடை சொல்லாத கணவர் ஆண்டனி, அரசியல் எண்ட்ரிக்கு நோ சொல்லமாட்டார். அதிலும் தங்களின் குடும்பத்திற்கு பெருமை சேர்த்த விஜய்யின் கட்சி என்றால் டபுள் ரைட் சொல்வார் என கீர்த்தியின் மனசுக்குள்ளும் பாஸிட்டிவ் திங்கிங் ஓடுகிறதாம்.
இருவரில் யார் முதலில் வருகிறார்களோ அவருக்கு த.வெ.க.வின் கொ.ப.செ.பதவி, அடுத்து வருபவருக்கு அந்த நேர அரசியல் களத்தைப் பொறுத்து, கட்சியில் மாநிலப் பதவி கொடுக்கலாம் என்ற யோசனையும் விஜய்யிடம் ஓடுகிறதாம்.
நாம என்னத்த கண்டோம். நடந்தாலும் நடக்கும். ஓடுனாலும் ஓடும்.
— மதுரை மாறன்.