கலைமகள் சபா : என்னதான் சிக்கல்?
தமிழகத்தில் கலைமகள் சபா வழக்கில் சிக்கியது 1999 – ஆம் ஆண்டில். தற்போது, ஏறத்தாழ 26 ஆண்டுகளை கடந்த நிலையிலும் கூட தீர்வை காண முடியாமல் சட்ட சிக்கலுக்குள் சிக்கித்தவிக்கிறது.
மற்ற மோசடி நிறுவனங்களை போல, கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து கணிசமான கோடிகளை சுருட்டிக்கொண்டு தலைமறைவாகிவிடவில்லை. கலைமகள் சபாவிற்காக, அதன் நிர்வாகத்தை முன்னின்று கவனித்து வந்த மேலாளர் ஜான் என்பவர், கலைமகள் சபாவிற்காக நிலங்களை வாங்கிய வகையில், முறைகேடுகளில் ஈடுபட்டார் என்பதுதான் வழக்கில் சிக்கியதற்கான முதன்மையான குற்றச்சாட்டாக இருக்கிறது.
அடுத்து, இவர்களது வணிக முயற்சிகள் முறையான சட்டப்பூர்வமான வழிமுறைகளை கையாளாமல், வரி ஏய்ப்பு நடைமுறையை கொண்டிருந்தது என்பது மற்றொரு சிக்கல். இன்னும் சொல்லப்போனால் இந்த விவகாரத்தில் முதல் முதலில் விசாரணையை தொடங்கியது வணிக வரித்துறையினர்தான்.
குற்றஞ்சாட்டப்பட்ட மேலாளர் ஜான் கைது செய்யப்பட்டார். சிறைக்கு சென்றார். பிணையில் வந்தார். வழக்கை எதிர்கொண்டார். தண்டனை பெற்றார். இதற்கிடையில் அவர் மரணித்தும் விட்டார். ஆனால், கலைமகள் சபாவை நம்பி முதலீடு செய்த முதலீட்டாளர்கள்தான், தீர்வு எப்போது கிடைக்கும் என்ற விடை தெரியாத எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வாழ்நாள் வேதனையில் உழன்று வருகிறார்கள்.
எப்படியும் 5 இலட்சத்திற்கும் குறைவில்லாத உறுப்பினர்களை கொண்டிருக்கும் கலைமகள் சபாவில், தற்போது வரையில் அதிகாரப்பூர்வமாக 6000 பேர்தான் தங்களை உறுப்பினர்களாகவே பதிவு செய்திருக்கிறார்கள். சமீபத்தில் திருச்சியில் நடைபெற்ற மண்டல அளவிலான கலந்தாய்வு கூட்டத்திலும்கூட, ஆயிரம் பேருக்குள்ளாகவே பங்கு பெற்றார்கள். இவையெல்லாம், ”இத்தனை வருஷமாச்சு. கட்டியது அவ்வளவுதான். திரும்பக் கிடைக்காது” என்ற மனநிலையில் பலரும் தொடர் முயற்சிகளை கைவிட்டு விட்டார்கள் என்ற யதார்த்தத்தைதான் எதிரொலிக்கிறது.
கோவையை சேர்ந்த கருப்பணன் போன்றோர்தான், இன்றளவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து கலைமகள் சபா விவகாரத்தை உயிர்ப்போடு இன்றளவும் வைத்திருக்கிறார்கள்.
5 இலட்சத்துக்கும் அதிகமான உறுப்பினர்களை அடையாளம் காண்பது ஒருபுறமிருக்கட்டும். இதுவரையில் அடையாளம் காணப்பட்ட உறுப்பினர்கள் மத்தியிலும்கூட, ஒத்த கருத்து, ஒத்த புரிதல், ஒருங்கிணைப்பு இன்றி மாறுபட்ட கருத்துகளோடு அவரவர்களுக்கு உகந்த வழிகளில் முட்டி மோதுவது என்ற வழிமுறையைத்தான் கையாண்டு வருகிறார்கள். இந்த விவகாரம் ஒரு தீர்வை எட்ட முடியாமல் சிக்கித்தவிப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்துவிட்டது என்பதுதான் சோகம்.
முதலில், இதுவரையிலான கலைமகள் சபா விவகாரத்தில் என்னதான் நடந்திருக்கிறது? நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் சட்டப்போராட்டங்களின் நிலை என்ன? நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் நியமிக்கப்பட்டிருக்கும் ஓய்வு பெற்ற நீதியரசர் எஸ்.எஸ்.சுந்தர் தலைமையில் இயங்கும் ஒரு நபர் ஆணையம் என்னதான் செய்து கொண்டிருக்கிறது? கலைமகள் சபாவின் சிறப்பு அலுவலராக கடந்த இரண்டு ஆண்டுகளாக பணிகளை மேற்கொண்டு வரும் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஐ.ஏ.எஸ். தலைமையிலான தற்போதைய கலைமகள் சபா நிர்வாகம் அன்றாடம் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? என்பது உள்ளிட்ட எந்தவிதமான தகவல்களும் கலைமகள் சபா உறுப்பினர்களின் கவனத்திற்கு சென்று சேராமல் இருப்பதுதான் இங்கே மையமான சிக்கலாக நீடிக்கிறது. மேலும், தற்போதைய கலைமகள் சபா நிர்வாகத்தினரை வசைபாடுவதில் கொண்டுபோய் அவர்களை நிறுத்தியுமிருக்கிறது.
வழக்கு கடந்து வந்த கால் நூற்றாண்டு பாதையை அடுத்தடுத்த தொடர்களில் பேசுவோம்.
(தொடரும்)






Comments are closed, but trackbacks and pingbacks are open.