. நூறாண்டு வாழ
நம் வீட்டில் உள்ள குழந்தைகள் நாம் சொல்வதை கேட்பதை விட, நாம் என்ன செய்கிறோம் என்பதை கவனித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
பக்கவாத நோயிலிருந்து நம்மைகாத்துக்கொள்ளும் வாழ்வியல் முறைகளில் பிராணனைப் பாதுகாக்கும் பயிற்சி பற்றி இந்த வாரம் பார்ப்போம்.
பிராணன் என்றால் என்ன? என்றுதானே யோசிக்கிறீர்கள்!…
நம் வீட்டில் உள்ளவர்கள் நமது பேச்சை கேட்காமல் தொல்லை செய்தார்கள் என்றால் நாம் என்னசொல்வோம்!….“என் பிராணனை வாங்காதே”…என்று தானே சொல்வோம்.
பிராணன் என்பது நமது உயிர் சக்தி. உடல் இப்புவியில் இருந்தாலும் பிராண சக்தி நம்மை விட்டு நீங்குமே என்றால் மனித உடலானது வெறும்பிணமாக மாறுகிறது. இப்போது தெரிகிறதா பிராண சக்தியை பாதுகாப்பது எவ்வளவு முக்கியமானது என்று.
மனித உடலானது பஞ்ச பூதங்களால் உருவாகிறது. பஞ்ச பூதங்களினால் வளர்க்கப்படுகிறது. பஞ்ச பூதங்களில் நிலமானது நாசியிலும், தீயானதுகண்களிலும், நீரானது நாவிலும்,ஆகாயமானது காதிலும், வாயுவானது உடல் முழுவதும் பரவி உள்ளது.
நமது பிராண சக்தியை முறைப்படி இயக்கினோம் என்றால் நாம் 100 வயது வரை சர்வ சாதாரணமாக வாழ முடியும். ஒருநிமிடத்திற்கு நாம் எத்தனை முறை சுவாசிக்கிறோம் என்பதை பொருத்தே நமது ஆயுட்காலம் அமையும். இதை நீங்கள் புரிந்துகொள்ள ஒரு உண்மையை தெளிவுப்படுத்த விரும்புகிறேன்.
ஆமையானது ஒரு நிமிடத்திற்கு 4 முதல் 6 முறை சுவாசிக்கிறது. அதன் ஆயுட்காலம் 150 வருடங்களாகும். அணிலானது ஒருநிமிடத்திற்கு 40 முதல் 50 முறை சுவாசிக்கிறது. அதன் ஆயுட்காலம் 6 முதல் 10 வருடங்களாகும். மனிதர்களாகிய நாம் ஒருநிமிடத்திற்கு 12 முதல் 18 முறை சுவாசிக்கிறோம், எனவே நாம் 100 வருடங்கள் சர்வ சாதாரணமாக வாழலாம் என்னும் உண்மை இப்பொழுது உங்களுக்கு புரிந்திருக்கும்.
ஆனால் இந்தியாவில் வாழும் நமது சராசரி ஆயுட்காலம் 64 மட்டுமே ஏன்? நம் முன்னோர்கள் பலர் 100 வயதை எட்டியிருக்கிறார்கள். மருத்துவ வசதிகள் பன்மடங்கு அதிகமாக இருக்கும் இந்தக் காலத்திலும் நம்மால் இயல்பான வாழ்க்கை வாழ முடியாமைக்கு என்ன காரணம்?
வீட்டுக்கு வீடு சர்க்கரை வியாதி, இரத்த அழுத்த வியாதி, மாரடைப்பு வியாதி மற்றும் பக்கவாதம் இப்படி வியாதிகள் கணக்கிலடங்கா!… ஏன் இத்தனை வியாதிகள் மனிதகுலத்திற்கு?
நாம் நம் உடலையும், பிராணனையும் மற்றும் மனதையும் சரியாக முறைப்படுத்தாததே இதற்குக் காரணம். நோய் வந்தவுடன் மருத்துவமனைக்கு நடையாய் நடக்கும் நாம், நோய் வராமல் காக்க என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்கிறோமா?
“இல்லையே சித்தி இதைப்போல் எளிதாக
பல்லுயிர் நாளெல்லாம் பார்த்தாலுங்கிட்டாது”
என்று மூச்சுப் பயிற்சியின் பெருமையைக் குறிப்பிட்டுள்ளார் திருமூலர். சுவாசத்தின் அளவு அதிகமாக இருக்கும் போது ஒருவரின்ஆயுட்காலம் குறையும். சுவாசத்தின் அளவை குறைத்து சீரான சுவாசம் இருக்கும்போது ஒருவரது ஆயுட்காலம் அதிகரிக்கும் என்பதை உணர்வோம்.
Dr. அ.வேணி MD., DM (NEURO)
மூளை நரம்பியல் நிபுணர்.
எனவே, பிராணாயாமம் என்ற சுவாசப் பயிற்சியை முறையாக எப்படி செய்ய வேண்டும் என்பதை கற்று தினமும் 20 நிமிடங்கள் நம் மனதையும், உடலையும், உயிர் சக்தியையும் ஒன்றாக இணைத்துப் பயிற்சி செய்தோம் என்றால் 100 ஆண்டுகள்வரை ஆரோக்கியமாக வாழலாம் என்பதில் துளியும் சந்தேகமில்லை.
நம் வீட்டில் உள்ள குழந்தைகள் நாம் சொல்வதை கேட்பதை விட, நாம் என்ன செய்கிறோம்!…என்பதை கவனித்துக்கொண்டு இருக்கிறார்கள். எனவே, நாம் செய்யும் இந்த பயிற்சியினை நம் குழந்தைகள் பார்த்து உடலையும்,பிராணனையும் பாதுகாக்க உடற்பயிற்சி முக்கியம் என்பதை உணர்ந்து அவர்களும் செய்வார்களேயானால் ஆரோக்கியமான எதிர் காலத்தை அவர்களுக்கு அளிப்போம் என்பது உறுதி.
நாம் சம்பாதித்து வைத்திருக்கும் சொத்துக்களை விட, பன்மடங்கு அதிகமான சொத்து நாம் அவர்கள் மனதில் விதைக்கும் பிராணாயாமம் என்ற விதை நாளை விருக்ஷமாகி நமது சந்ததிகள்ஆரோக்கியமான வாழ்க்கையை பெறவழிவகுக்கும்.