களைகட்டும் மதுரை சித்திரை திருவிழா 2025 !
உலகப் பிரசித்திபெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழாவானது மிகவும் பிரசித்தி பெற்றதாகும். 15 நாட்கள் திருவிழாவான சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம், தேரோட்டம் ஆகிய நிகழ்ச்சிகளில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள். இந்நிலையில் இந்த ஆண்டு சித்திரை திருவிழாவிற்கான பணிகள் தொடங்கும் வகையில் மீனாட்சியம்மன் கோவில் சார்பில் கீழமாசி வீதியில் உள்ள தேரடியில் கொட்டகை முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி வெகுவிமர்சையாக நடைபெற்றது.

முன்னதாக, மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து யானை முன்செல்ல முகூர்த்தக்கால் ஊர்வலமாக எடுத்து தேரடிக்கு கொண்டுவரப்பட்டுஅங்கு மீனாட்சி அம்மன் கோவில் சிவாச்சாரியார்களால் சிறப்பு பூஜை செய்யப்பட்டு முகூர்த்தகால் நடப்பட்டது. இதனை தொடர்ந்து கோவில் வளாத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்திலும் முகூர்த்தக்கால் நடப்பட்டது. இதில் கோவில் இணை ஆணையர் கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இதனைத்தொடர்ந்து, சித்திரை திருவிழாவானது ஏப்ரல் 29 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மே 6 ஆம் தேதி மீனாட்சியம்மன் பட்டாபிஷேகமும், மே 7-ம் தேதி திக்குவிஜயமும், மே 8 ஆம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும், மே 9 ஆம் தேதி திருத்தேரோட்டமும் நடைபெறவுள்ளது. மே மாதம் 12 ஆம் தேதி அதிகாலை கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வானது நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
— ஷாகுல், படங்கள் : ஆனந்தன்.