1995 காலகட்டம், சென்னை எழும்பூர் கன்னிமாரா நூலகம் எதிரில், பழம்பெரும் தயாரிப்பாளர், நடிகர் கே. பாலாஜி அவர்களின், திரைப்பட தயாரிப்பு நிறுவனமும், வெளிப்புற படப்பிடிப்புக்கான சுஜாதாஸ் அவுட்டோர் யூனிட்டும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த காலம். பாந்தியன் சாலையில், எப்போதும் படப்பிடிப்பிற்கு செல்லும் வாகனங்கள் பரபரப்புடனே செயல்பட்டுக் கொண்டிருக்கும். அன்றைய காலகட்டத்தில், நவீன கேமராக்கள், லென்ஸ், அக்கிலா கிரேன் இரண்டு இடத்தில் தான் இருக்கும். ஒன்று சுஜாதாஸ் என்கின்ற கே.பாலாஜி சாரின் நிறுவனம். அடுத்து பிரசாத் ப்ரொடக்ஷன்ஸ்.
இங்குதான் இந்தியாவின் மிகச்சிறந்த ஒளிப்பதிவாளர்களான ராஜூவ்மேனன், பாலு மகேந்திரா, அசோக்குமார், பி.சி. ஸ்ரீராம், தினேஷ்பாபு, இன்னும் நிறைய ஒளிப்பதிவார்கள், இந்த நிறுவனத்தின் கேமரா மூலம், தங்களை அடையாளப்படுத்திக் கொண்டிருந்தார்கள். முதன்முறையாக எடிட்டிங் துறையில், பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய, “ஸ்டீன் பேக்” என்கின்ற அதிநவீன தொழில்நுட்பம், இந்த நிறுவனத்தில் தான் வந்தது. இங்குதான் 4 ட்ராக், 8 டிராக், 16ட்ராக், பின்னணி குரல் இசை பதிவு, சவுண்ட் எஃபெக்ட், பதிவு செய்யப்பட்டது.
எங்களின் சினிமா அரிச்சுவடியும், இங்கிருந்து தொடங்கியது. அப்போது சின்ன கவுண்டர், மாப்பிள்ளை, சிவா, மற்றும் இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாள படங்கள் பரபரப்பாக தொழில்நுட்பத்தில், இயங்கிக் கொண்டிருந்த காலம். நாங்கள் ஒரு குழுவாக இருந்தோம். அடிப்படை தொழில்நுட்ப கலைஞர்கள். திருவாரூர் ரவி, கோவை ரவி ராஜன், சாரதா பிரியன், இன்னும் நிறைய நண்பர்கள், ஆரம்ப புள்ளியை,அங்கிருந்து தான் தொடங்கினோம்.
இன்றைய நிலையில், பிரியன் சின்னத்திரை இயக்குனராக, பிரபலமாக இருக்கிறார். கோவை ரவி ராஜனும், ஒரு படத்தை இயக்கி விட்டு, சின்னத்திரையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். மற்ற,மற்ற நண்பர்கள்,சிலர் தங்களின் சொந்த ஊருக்கு திரும்பி விட்டனர். சிலர் எங்கு இருக்கிறார் என்றே தெரியவில்லை. ஆனால், காலங்கள் ஒன்றே, மாற்றத்தால் மாறாதது என்பதை இன்றைய காலைப் பொழுதில், எழும்பூர் கன்னிமாரா நூல் நிலையத்தின் எதிரே, நினைவுகளாக வந்து மறைந்தது. எங்களின் நிறுவனத்திற்கு பின்னால் இருந்த அட்லாண்டிக் ஹோட்டல், வானுயர்ந்த அடுக்குமாடி கட்டிடமாக மாறிப்போனது. எங்களின் பயிற்சிப் பட்டறையான பாலாஜி கம்பெனி சிறிய கட்டிடமாக சுருங்கி போனது. காலம் தான் எவ்வளவு அழகானது. வலிமையானது. எல்லாம் கடந்து போகும் என்பார்கள். ஆனால், நினைவுகள் எப்போதும் மறந்து போகாது தொடரும்.
ராமசிவம்







Comments are closed, but trackbacks and pingbacks are open.