நடுக்குவாத நோயாளிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்
நடுக்குவாத நோயாளிகள் வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் என்ன? என்பது பற்றி இந்த வாரம் பார்ப்போம்.
நல்ல ஆரோக்கியமான உடல் கொண்டவரையே, பரபரப்பான இந்த உலகம் பாடாய் படுத்தும் போது, நடுக்குவாத நோயாளிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் இது வியாதியின் அறிகுறிகள் தான் என்பதை உணராமலேயே, நித்தம் ஒரு பிரச்சினையோடு நாட்களைக் கடத்துகிறார்கள். மூளையில் சுரக்கும் டோபமின் என்னும் வேதியல் பொருள் நமது உடலை இயக்குவது மட்டுமல்லாமல் அன்பு, காதல் மற்றும் அரவணைப்பு ஆகியவற்றிற்கும் அத்தியாவசியமானது. இதன் குறைபாட்டினால்தான் நடுக்குவாத நோயாளிகள், குடும்பதினரின் அன்பையும் உணர முடிவதில்லை, அவர்களின் துயரத்தையும் துடைக்க முடிவதில்லை.
ஓடி, அலைந்து திரிந்து வேலைகளைச் செய்து குடும்பத்தைத் தூக்கி நிறுத்திய ஒரு ஆண், துவண்டு போவதை வியாதி என்று உணராமல் முதுமை அடைந்து விட்டார் என்று மூலையில் முடக்கி விடுகிறார்கள். சிறிதாக நடையில் தளர்ச்சி ஏற்படும் போதோ அல்லது கைகளில் நடுக்கம் ஏற்படும் போதோ எவரும் மருத்துவக் கவனிப்புக்கு அழைத்து வருவதில்லை.
நன்கு நடை குறைந்து, அவரின் வேலையைத் தானே செய்ய முடியாமல், பிறரைச் சார்ந்து இருக்க வேண்டிய நிலை வரும் போதுதான், அவரை மூளைநரம்பியல் நிபுணரிடம் அழைத்துச் சென்று, ஏன் அவரால் வேலை செய்ய முடியவில்லை? என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் குடும்பத்தார்க்கு ஏற்படுகிறது.
ஆம், இதைப் படிக்கும் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம், ஆனால் இது 100 சதவிகிதம் உண்மை. நடுக்குவாத நோயாளியை அழைத்து வந்து, ‘அவர் அவரின் வேலையைத் தானாகச் செய்து கொள்ளுமாறு செய்து விடுங்கள்’ அது போதும் எங்களுக்கு என்று கூறும் பல உறவினர்களைப் பார்ப்பதால்தான் இதை உறுதியாகக் கூறுகிறேன்.
இன்றைய காலகட்டத்தில் கோபம் அதிகரித்துப் பொருட்களை உடைத்து வார்த்தைகளைச் சிதற விடும்போது ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறார்? என்று சிந்தித்து உடனே சிகிச்சைக்கு அழைத்துவருகிறார்கள், ஆனால் பேசுவதற்கே தடுமாறும், உணவு விழுங்குவதற்கே
சிரமப்படும் நபரை அவ்வளவாகக் கண்டுகொள்வதில்லை. வீட்டில் பிரச்சினை என்று வரும் போது தான் அதாவது உணவு சமைப்பதிலோ வீட்டு வேலைகளைச் செய்வதிலோ தன்சுத்தம் பேணுவதிலோ குறைபாடு ஏற்படும் போதுதான் மருத்துவரிடம் அழைத்து வருகிறார்கள்.
நடுக்குவாத நோயாளிகள் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் ஒரே இடத்தில் அமர்ந்து கண்ணைச் சிமிட்டாமல் வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பர்.
நீங்கள் என்னதான் பேசினாலும், நகைச்சுவை உணர்வைத் தூண்டினாலும், அவர்கள் சிரிக்க மாட்டார்கள். இது அவர்களின் தவறல்ல, டோபமின் என்னும் ரசாயனப் பொருளின் குறைபாடே என்பதைக் குடும்பத்தினர் உணர வேண்டும். அதை விடுத்து ‘என்ன சொன்னாலும் இந்த மனுசன் காதுல வாங்காம திமிரா உட்கார்ந்து எனக்கென்னன்னு இருக்காரு. பசங்க தொல்ல பாதின்னா இந்த மனுசே படுத்தற பாடுபாதி, எங்காவது ஓடிப்போயிறலாம்னு இருக்கு மேடம்’. என்று கூறும் மனைவியிடம் அவருக்கு ஏற்பட்ட நிலையைக் கூறிப் புரியவைப்பதற்குக் கொஞ்சம் சிரமப்படத்தான் வேண்டியுள்ளது.
சில நேரங்களில் நடுக்குவாத நோயாளிகள் இல்லாததை இருப்பது போன்றும், தன்னை யாரோ கட்டுப்படுத்துகிறார்கள் என்றும், காதில் யாரோ பேசுவது போன்றோ உணர்கிறார்கள். தூக்கம் சரிவர வராமல் பயங்கரமான உண்மை நிகழ்வுகள் போன்று கனவுகள் வரும் போது திடீரெனக் கூச்சலிட்டு எழுந்து எங்கோ இருப்பது போன்றும், இறந்தவர்கள் தன்னுடன் பேசியதாகவும் கூறுவர். இவையும் இந்த வியாதியின் அறிகுறிகளில் ஒன்றுதான்.
கூறும் செய்திகளைச் சட்டென மறந்து விட்டு என்னிடமா சொன்னீங்க? இல்லியே என்று கேட்கும் பெற்றோரோடு சண்டையிடும் பிள்ளைகளை ஏன் அவர்களுக்கு ஞாபகமறதி வியாதி இருக்கக் கூடாது என்று சற்றே சிந்தித்தால் வீட்டில் பலப்பிரச்சினைகளுக்கு சிகிச்சை மூலம் முடிவு கிடைக்கும். வியாதி என்று உணராததால்தான் இன்று பல குடும்பங்கள் சிதறிக் கிடக்கின்றன.
யார் ஒருவர் சொன்ன விஷயங்களையே திரும்பத்திரும்பப் பேசி, 30 வருடங்களுக்கு முன்பு நடந்தவற்றையே நினைவில் கொண்டு, இன்று நடப்பவற்றை மறந்து விடுகிறார்களோ அவர்களுக்கு ஞாபக மறதி வியாதி வந்துவிட்டது என்பதை ஒரு கணம் சிந்தையில் கொள்ள வேண்டும்.
தகுந்த முறையில் சிகிச்சை அளித்து வாழ்வியல் முறைகளில் சிறிய மாற்றங்களைச் செய்தோமேயானால் நோயாளியும் நிம்மதியாக இருக்கலாம். அவர் குடும்பமும் மகிழ்ச்சியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதுவரை நாம் நடுக்குவாத நோய் பற்றி விரிவாகப் பார்த்தோம். அடுத்த வாரம் முதல் முகவாதம் பற்றி பார்ப்போம்.