நடுக்குவாதத்திற்கான உடற்பயிற்சி பயிற்சி

0

நடுக்குவாதத்திற்கான உடற்பயிற்சி பற்றி இந்த வாரம் பார்ப்போம்.
நமக்குத் தினமும் 24 மணி நேரம் உள்ளது. இதில் 8 மணி நேரத்தை உறக்கத்திற்காக விட்டுவிடுவோம். மீதமுள்ள 16 மணி நேரத்தில் குறைந்தது 2 மணி நேரமாவது உடற்பயிற்சிக்காக ஒதுக்க வேண்டும்.
நம் மனம் நினைக்கும் அத்தனை வேலைகளையும் நம் உடல் கொண்டே நாம் செய்கிறோம். நமது உடலை நாம் ஒரு நாளைக்கு 2 மணி நேரமாவது கவனித்துக் கொண்டோம் என்றால் நமது உடலானது நம்மை மீதமுள்ள 22 மணி நேரமும் பிற வியாதிகளில் இருந்து பாதுகாத்து, ஆரோக்கிய வாழ்வு வாழ வழிவகுக்கும். எனவே நடுக்குவாத நோயாளிகள் மாத்திரை உண்பதோடு மட்டுமல்லாமல் இரண்டு மணி நேரம் நான் கீழே குறிப்பிட்டுள்ள உடற்பயிற்சிகளைத் தினமும் செய்து பழக்கப்படுத்திக் கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இந்த உடற்பயிற்சியை 3 விதமாகப் பிரித்துச் செய்யலாம்.
1.உடலைப் பாதுகாப்பதற்கான பயிற்சி
2.பிராணனைப் பாதுகாப்பதற்கான பயிற்சி
3.மனத்தைப் பாதுகாப்பதற்கான பயிற்சி
இந்த மூன்றையும் நான் அறிந்த வழிமுறைகளில் எடுத்துரைக்கிறேன்.
முதலில் உடலைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகளைப் பார்ப்போம். நடுக்குவாத நோயாளிகள் நடப்பதற்குச் சிரமப்பட்டாலும் அவர்களால் மிதிவண்டி நன்றாகத் ஓட்ட முடியும். மிதிவண்டி தினமும் 30 நிமிடத்திலிருந்து ஒரு மணி நேரம் ஓட்டுவதால் மூளை நன்றாக தூண்டப்பட்டு நோய் தாக்கத்தின் அறிகுறிகள் குறைக்கப்படுகிறது.
மிதிவண்டி ஓட்டும் போது உடலே நான் உன்னைப் பாதுகாப்பதற்காக இந்த 30 நிமிடங்களைச் செலவிடுகிறேன். நான் மிதிவண்டி ஓட்டும் போது என் மூளையில் டோபமின் மற்றும் மகிழ்ச்சிக்கான வேதிப்பொருள் சுரந்து எனது இன்றைய தினம் மிகவும் ஆனந்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கப் போகிறது. இந்தப் பிரபஞ்சத்தின் சக்தி என்னுள்ளே பரவி என் ஒவ்வோர் அணுவையும் மிகவும் துடிப்புடன் இயங்கச் செய்கிறது. எனது நுரையீரல் உள்ளே தூய்மையான இந்தக் காற்று சென்று வருகிறது. என் இதயம் சீராகத் துடிக்கிறது. என் கால்கள் நல்ல பலத்தைப் பெறுகின்றன என்ற எண்ணத்துடனும், முழுக்கவனத்துடனும் மிதிவண்டி ஓட்டினோம் என்றால் தான், முழு பலனையும் நாம் பெற முடியும்.
உடலைத் தலை முதல் கால் வரை தூண்டுவதற்குப் பல பயிற்சிகள் உள்ளன. அதில் சில முக்கியமானவற்றைக் குறிப்பிடுகின்றேன்.
1.தலை மற்றும் கழுத்துக்கான அசைவு பயிற்சி
2.கண்களுக்கான பயிற்சி
3.கை மற்றும் கால்களுக்கான பயிற்சி
4.இடுப்பு மற்றும் மார்பகப் பயிற்சி
5.டயஃப்ரம் மற்றும் நுரையீரலுக்கான மூச்சுப்பயிற்சி
இதை முறையாக இயற்பியல் சிகிச்சை நிபுணரிடம் கற்றுக் கொண்டு தினமும் ஒரு மணி நேரம் இதற்காக ஒதுக்க வேண்டும்.
இவை தவிர ஞாபகத்திறனை அதிகரிப்பதற்கான பயிற்சிகளையும் செய்ய வேண்டும். அப்போது தான் ஞாபகமறதி அதிகரிக்காமல் தடுக்கலாம்.

1.இசை கேட்டல்
2.பதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ள முயற்சி எடுத்தல்
3.குறுக்கெழுத்து பயிற்சிகள்,


இவைகளைத் தொடர்ந்து செய்வதன் மூலம் நமது மூளை தூண்டப்பட்டு ஞாபகத்திறன் அதிகரிக்கிறது. கையில் குறிப்பேடு வைத்துக் கொண்டு முக்கியமான குறிப்புகளை அதில் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பிராணன் மற்றும் மனதைப் பாதுகாப்பதற்கு மூச்சுப் பயிற்சியும் மற்றும் தியானப் பயிற்சியும் உதவுகின்றன. இப்படிப் பல வகையான பயிற்சிகள் உள்ளன. இப்படி இந்தப் பயிற்சிகளை மேற்கொள்வதற்குக் காசோ பணமோ தேவையில்லை நாம் மனம் வைத்தால் மட்டும் போதும்.

நடுக்குவாத நோயாளிகள் வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் என்ன? என்பது பற்றி அடுத்தவாரம் பார்ப்போம்.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.