குண்டூர் ஏரியை தூர் வாரியதாக 19 லட்சத்தை சுருட்டிய அரசு அதிகாரிகள்

0

திருச்சி திருவெறும்பூர் வட்டத்திற்குட்பட்டது குண்டூர் ஊராட்சி. இந்த ஊராட்சி பகுதியில் திருச்சி – புதுக்கோட்டை நெடுஞ்சாலையின் கிழக்குப் புறத்தில் சுமார் 560 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடப்பதுதான் குண்டூர் பெரிய குளம் என்றழைக்கப்படும் குண்டூர் ஏரி. ஏரியின் தென் பகுதி ஆக்கிரமிக்கப்பட்டுத் தற்போது சுமார் 350 ஏக்கராக ஏரி சுருங்கியுள்ளது.

இந்த ஏரியை நம்பி 200 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்த ஞாயிறு (01.07.2018) குண்டூர் ஏரியின் கரையில் வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு பலகையின் செய்தி வாட்ஸ்அப்பில் வந்தது.
அதில் “குண்டூர் பெரிய குளம் 2017-18ஆம் நிதியாண்டில் ஊரக வளர்ச்சித் துறையால் தூர்வாரப்பட்டதாகவும் அதற்கான வேலைகள் 15.02.2018இல் தொடங்கப்பட்டது என்றும் அதற்கு 19 இலட்சம் நிதி ஒதுக்கப்பட்டுச் செலவு செய்யப்பட்டு 5000 எஞ்சி இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. பொதுமக்களும் விவசாயிகளும் இந்தச் செய்தியைக் கண்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தார்கள். காரணம் வேலை தொடங்கப்பட்ட பிப்ரவரி மாதம் ஏரியில் நீர் நிரம்பியிருந்தது. தூர்வாரும் வாய்ப்பே இல்லை. தூர் வாராமலே தூர் வாரியதாகக் கணக்கு கொடுக்கப்பட்டுள்ளதுதான் அதிர்ச்சிக்குக் காரணம்.

https://businesstrichy.com/the-royal-mahal/

02.07.2018 ஆம் நாள் குண்டூர் விவசாயிகள் சங்கத் தலைவர் திரிசங்கு மற்றும் தண்ணீர் அமைப்பின் தாமஸ் உட்பட்ட பலர் மாவட்ட ஆட்சித் தலைவரைச் சந்தித்து,“குண்டூர் ஏரி தூர் வாரியதாகக் கணக்கு காட்டப்பட்டுள்ளது. உரிய அதிகாரிகள் மீது உடன் நடவடிக்கை எடுங்கள்” என்று வலியுறுத்தினர்.

இது குறித்து ‘நம்ம திருச்சி’ இந்த பிரச்சினையின் உண்மை தன்மையை வாசகர்களுக்கு தெரிவிக்க விசாரித்தோம். அதில் 2017 ஜுன் மாதம் கடைசி வாரத்தில் குண்டூர் ஏரி தூர்வாரப்படும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் இராசாமணி அவர்கள் தொடங்கி வைத்தார். தூர்வாரப்பட முதன்மை காரணமாக இருந்தவர் இருவர். ஒருவர் குண்டூரில் வாழ்ந்துவரும் தூய வளனார் கல்லூரியில் தமிழ்த்துறையில் பணியாற்றித் தற்போது பணிநிறைவு பெற்றிருக்கும் முனைவர் தி.நெடுஞ்செழியன். மற்றொருவர் பெல் மகேந்திரன். இவர்் காலமாகிவிட்டதால், குண்டூர் ஏரியின் அண்மைக்கால வரலாற்றை அறிந்துகொள்ளக் முனைவர் தி.நெடுஞ்செழியனை சந்தித்தோம்..

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

2012ஆம் ஆண்டு முதல் குண்டூர் அய்யனார் நகர் முதல் தெருவில் வசித்து வருகிறேன். கோடை காலங்களில் நிலத்தடி நீர் தட்டுப்பாடு ஏற்பட்டது கிடையாது. முதன்முறையாக 2017இல் குளம் முற்றிலும் வறண்டுபோய் விட்டது. அங்குக் குடியிருக்கும் எங்களுக்குத் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. 1,000 லிட்டர் நீர் தொட்டிகள் நிறைய 15நிமிடம் ஆகும். அப்போது 30 நிமிடம் ஆனது மட்டுமல்ல, 75 அடி ஆழ்குழாய் கிணறுகளில் நீர் முற்றிலுமாக வற்றிவிட்டது. 125 அடி ஆழத்திற்குப் போர் போட்டபின்தான் நீர் கிடைத்தது. 50 அடி ஆழப்படுத்த மிகுதியான செலவு ஏற்பட்டது. ஒவ்வொருவரும் இப்படிச் செலவு செய்வதற்குப் பதிலாக ஏரியை ஆழப்படுத்தி நீரைச் சேமித்தால் குடியிருப்போருக்கு நிலத்தடி நீர் கிடைக்கும்.

பாசன விளைநிலங்களுக்கும் நீர் கிடைக்கும். மேலும் குண்டூர் கிராமத்தில் வளர்க்கப்படும் கால்நடைகளுக்குக் குடிநீர் கிடைக்கும் என்ற நோக்கத்தின் அடிப்படையில்தான் தூர்வாரும் எண்ணம் ஏற்பட்டது. தனி மனிதனாக என்னால் மட்டும் இதைச் செய்யமுடியாது என்பது எனக்குத் தெரியும். அதனால், பெல் மகேந்திரன் என்ற என் நண்பரையும் இணைத்துக் கொண்டு குண்டூர் ஏரி காப்புக் குழு என்னும் பெயரில் ஒரு அமைப்பை ஏற்படுத்தி இருவரும் ஒருங்கிணைப்பாளர்கள் பொறுப்புகளை ஏற்படுத்திக் கொண்டோம்.

இந்நிலையில் நான் தண்ணீர் அமைப்பின் செயலர் நீலமேகத்தைத் தொடர்பு கொண்டு குண்டூர் ஏரியைத் தூர்வாரவேண்டும் அதற்கான வழிமுறைகள் என்ன? என்பது குறித்துக் கேட்டேன். 2017 மே மாதம் கடைசி வாரத்தில் குண்டூர் ஏரியை பார்வையிட அவருடைய நண்பர்கள் பேராசிரியர் சதீஷ்குமார், தாமஸ் ஆகியோரும் வந்தனர்.

தொடர்ந்து தண்ணீர் அமைப்பின் தலைவர் சேகரன் அவர்களோடு ஆலோசனை செய்தோம். குண்டூர் ஏரி பொதுப்பணித் துறைக்குச் சொந்தமானது. இதில் அனுமதி இல்லாமல் ஏரியைத் தூர்வார முடியாது என்றார்.
அதனால் மாவட்ட ஆட்சியரிடம் ஏரியைத் தூர்வாரக் கோரிக்கை மனு கொடுக்கவேண்டும் என்றும் அதற்கு முன் குண்டூர் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ளும் கூட்டத்தை நடத்துங்கள். அதில் தூர்வாரப்பட வேண்டும் என்ற முடிவை ஆட்சியருக்குக் கோரிக்கை மனு தருவது என்று முடிவெடுங்கள் என ஆலோசனை வழங்கினார்.

ஒரு சில நாளில் குண்டூர் கிராமச் சேவை மையத்தில் விவசாயிகள் பொதுமக்கள் கலந்துகொண்ட கூட்டம் நடைபெற்றது. அக் கூட்டத்திற்குத் தண்ணீர் அமைப்பினர் மற்றும் குண்டூர் ஊராட்சியின் முன்னாள் தலைவர்கள் திரிசங்கு மற்றும் மாரியப்பன் இருவரும் கலந்துகொண்டனர். ஏரி தூர்வாரும் முடிவு எடுக்கப்பட்டு 2017 ஜுன் முதல்வாரத்தில் ஆட்சியரிடம் மனுநீதி நாளில் கோரிக்கை மனு அளித்தோம். மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர் பொதுப்பணித் துறையிடம் மனு வழங்கினார். குண்டூர் ஏரியைத் தூர்வாரும் பணிக்கான நடவடிக்கையை மேற்கொள்ளுங்கள் என்று உத்தரவிட்டார். இருவாரங்களில் பொதுப்பணித் துறை ஏரியைத் தூர்வாரும் அனுமதியை வழங்கியது.

2017 ஜுன் மாதம் கடைசி வாரத்தில் மாவட்ட ஆட்சியர் ஏரி தூர்வாரும் பணிகளைத் தொடங்கி வைத்தார். அப்போது ஆட்சித்தலைவர்,“பொதுமக்கள், விவசாயிகள், மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்களின் உதவியோடு தூர்வாரும் பணியை நடத்துங்கள். பின்னர் ஏரியின் நடுவில் திட்டுகள் அமைத்து மரங்கள் அமைப்பது மூலம் வெளிநாட்டு பறவைகள் வந்து தங்கும் நிலை ஏற்படும். சுற்றுலா துறையின் மூலம் படகு விடுதல், புதுக்கோட்டை நெடுஞ்சாலையை ஒட்டி வடக்குத் தெற்காக 100 மீட்டர் அகலத்திற்கு நடைப்பயிற்சி பாதை அமைத்தல் போன்ற பணிகளை மாவட்ட நிர்வாகம் செய்துதரும்” என்றார்.

தூர்வாரும் பணியின் முதல் கட்டமாக ஏரியில் இருந்த பிளாஸ்டிக் குப்பைகள் மற்றும் செடிகள் அகற்றும் பணியைத் தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி நாட்டு நலப் பணி திட்ட மாணவர்கள் 70 பேர் 5 நாள்கள் பணியாற்றினர். இதில் குண்டூர் வடக்குக் கிழக்கு குடியிருப்போர் நலச் சங்கத்தின் தலைவர் இராமமூர்த்தி தலைமையில் செயல்படும் சங்கத்தின் உறுப்பினர் சுமார் 60 பேரும் கலந்து கொண்டனர். பணிபுரிந்த மாணவர்களுக்கான உணவு செலவை நான், பெல் மகேந்திரன், சமூக ஆர்வலர் எம்.ஆர்.பாலுசாமி ஆகியோர் ஏற்றோம். மாணவர்களின் தேநீர் மற்றும் வடை வழங்கும் செலவுகளை விவசாயச் சங்கத் தலைவர் திரிசங்கு ஏற்றுக் கொண்டார்.

அடுத்த கட்டமாக ஏரியின் கிழக்குப் பகுதியில் வளர்ந்திருந்த நெய்வேலி காட்டாமணக்குச் செடிகள் வேரோடு அப்புறப்படுத்தப்பட்டன. இப்பணியில் நாள்தோறும் 30 பேர் என்ற அளவில் கலந்துகொண்டனர். இந்த பணி 20 நாள்களுக்கு மேலாக நடைபெற்றது. இதற்கான அனைத்துச் செலவுகளையும் விவசாயச் சங்கம் ஏற்றுக் கொண்டது.
பின்னர் ஏரியில் உள்ள வண்டல் மண்ணை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எடுத்துக்கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்தார்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

அதன் அடிப்படையில் மண் எடுப்போருக்கான அனுமதியைத் திருவெறும்பூர் வட்டாட்சியரிடம் தண்ணீர் அமைப்பு மற்றும் விவசாயச் சங்கத்தினர் பெற்றுத் தந்தனர். இதனால் நாள்தோறும் ஏரியில் மண் எடுக்கப்பட்டது. எடுக்கப்படும் மண் அய்யனார் கோவில் தொடங்கிக் கிழக்குப் பகுதி வரை 100 மீட்டர் அகலத்திற்கு 3 அடி ஆழத்திற்கு மண் எடுக்கப்பட்டது. அப்படி மண் எடுத்தவர்கள் மற்றும் ஏரிக் காப்புக் குழுவின் பொருளாளர் பொறியாளர் செந்தில் அவர்கள் ஏரியில் மண் எடுத்து, புதுக்கோட்டை நெடுஞ்சாலையை ஒட்டி கொட்டப்பட்டது. இந்தப் பணி ஜூலை மாதம் கடைசி வரை நடைபெற்றது. 28 நாள்கள் நடைபெற்ற பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வையிட்டார்.

ஆகஸ்டு முதல்வாரத்தில் மழை பெய்யத் தொடங்கியது. தூர்வாரும் பணிகளில் தேக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து கட்டளைக் கால்வாயில் நீர் வரத் தொடங்கியது. ஏரியில் நீர் நிரப்பும் பணி தொடங்கியதால் தூர்வாரும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த ஆண்டு 2018-ல் தூர்வாரும் பணிகளைத் தொடங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது பாசனப் பொதுப்பணி பொறியாளர் அலுவலகத்திற்குக் குண்டூர் ஏரியின் கரைகளை வலுப்படுத்தவும் நீர் செல்லும் மதகுகளைப் புதிதாக அமைக்கவும் உலக வங்கியின் சார்பில் நிதி கிடைத்துள்ள செய்தி விவசாயிகள் கூட்டத்தில் பொறியாளரால் தெரிவிக்கப்பட்டது.

மேலும் கரைகளை வலுப்படுத்தும்போது தூர்வாரும் பணிகளை நீங்கள் மேற்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. உலக வங்கி நிதியில் ஏரியைத் தூர்வாரும் பணியைச் செய்ய முடியாது என்று பொறியாளர் தெரிவித்தார். இதனால் கோடையில் நடைபெற இருந்த தூர்வாரும் பணியும் ஒத்திவைக்கப்பட்டது. இதுநாள் வரை உலக வங்கி நிதியில் ஏரியில் எந்தப் பணியும் நடைபெறாத நிலையே நீடித்து வருகின்றது.

இந்நிலையில் குண்டூர் ஏரி அய்யனார் கோவிலின் அருகில் உள்ள வடக்குக் கரையில் 01.07.2018ஆம் நாள் தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சித் துறை மற்றும் ஊராட்சித் துறை, திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியம், குண்டூர் ஊராட்சியின் சார்பில் ஒரு அறிவிப்பு கான்கிரீட் பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில் 2017-18ஆம் நிதியாண்டில் குண்டூர் பெரிய குளம் (ஏரி) 19 இலட்சம் செலவில் தூர்வாரப்பட்டது என்றும் அதன் பணிகள் 15.02.2018ஆம் நாள் தொடங்கப்பட்டது என்றும் இப் பணிகள் குண்டூர் ஊராட்சியின் சார்பில் நடைபெற்றது என்றும் இதற்காக 9,243 மனிதச் சக்தி நாள்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் வேடிக்கை என்னவென்றால், ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் ஊராட்சிக்குட்பட்ட குளங்களை, ஊருணிகளைத் தூர்வாரலாம். பொதுப்பணிக்குச் சொந்தமான குண்டூர் ஏரியில் ஊரக வளர்ச்சித் துறையில் தூர்வாரும் பணியைச் செய்ய விதிகளில் இடமில்லை. மேலும் 100 நாள் வேலைத்திட்டப் பணியாளர்கள் பொதுப்பணியின் ஏரியில் பணியாற்றவும் விதிகளில் இடமில்லை என்பதை அப்போதைய குண்டூர் ஊராட்சி மன்ற எழுத்தாளர் கந்தசாமி தெளிவுபடுத்தினார். இதனால் மாவட்ட ஆட்சித் தலைவர் தொடங்கி வைத்த தூர்வாரும் பணிகளில் 100 நாள் வேலை திட்டப் பணியாளர்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

அடுத்துத் தூர்வாரும் பணிகள் தொடங்கியது 15.02.2018 என்று குறிப்பிட்டப்பட்டுள்ளது. அப்படியானால் பணிகள் நிறைவடைந்த நாள் அந்த நிதி ஆண்டின் இறுதி நாளான 31.03.2018 என்பதேயாகும். மொத்தம் 45 நாள்கள் தூர்வாரும் பணிகள் நடைபெற்றதாக அந்த அறிவிப்பின் வழி தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதம் ஏரியில் நீர் நிறைந்திருந்தது.

மே மாதம்தான் நீர் வரத்து நின்றுபோன நிலையில் வறண்டு போகத் தொடங்கியது. ஏரியில் நீர் இருந்த நிலையில் எப்படித் தூர்வாரும் பணி நடைபெற்றிருக்க முடியும்? நடைபெற்றிருக்க வாய்ப்பே இல்லை என்றும், நாளொன்றுக்குச் சுமார் 200 பேர் அளவில் வேலை பார்த்திருக்கவேண்டும். 10 பொக்கலின் மூலம் மண் அள்ளப்பட்டிருக்கவேண்டும். 40க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகள் மண் கொட்டப் பயன்படுத்தப்பட்டிருக்கவேண்டும்.

45 நாள்கள் நடைபெற்ற தூர்வாரும் பணி யாருக்கும் தெரியாமல் எப்படி நடைபெற்றிருக்கும் என்றும் ஒருபிடி மண் கூட 19 இலட்சம் செலவில் அள்ளப்படவில்லை என்று 02.07.2018ஆம் நாள் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் விவசாயச் சங்கத் தலைவர் திரிசங்கு தெரிவித்தார். மேலும் இதன் தொடர்பாக அதிகாரிகளிடம் திரிசங்கு விளக்கம் கேட்டபோது யாரும் உரிய பதில் வழங்கவில்லை என்றும் தெரிவித்தார்.

நிருபர்களிடம் ஊராட்சி மன்றச் செயலர் விக்னேஷ் பேசும்போது,“கடந்த 2017 ஜுன்-ஜூலையில் தூர்வாரப்பட்டதற்கு வைக்கப்பட்ட அறிவிப்பு பலகையாக இருக்கும்” என்று கருத்து தெரிவித்துள்ளார். 2017 ஜுன்-ஜூலையில் தூர்வாரப்பட்டதற்கு எப்படி 2018 பிப்ரவரியில் நடைபெற்றதாக அறிவிப்பு பலகை வைக்கமுடியும் என்பதை விக்னேஷின் கருத்தின் வழி எதையும் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மட்டத்தில் ஏதோ ஒன்றை மறைத்து இந்த அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது என்பதைப் புரிந்துகொள்ளமுடிந்தது.

19 இலட்சம் செலவில் தூர்வாரப்பட்ட அறிவிப்பு பலகை வைத்த செய்தியை அறிந்தவுடன் தண்ணீர் அமைப்பின் செயலர் நீலமேகம் என்னிடம் தொடர்பு கொண்டு, ‘நாம் தூர்வாரிய பணியில் ஊரக வளர்ச்சித்துறை செலவு செய்ததா? அல்லது 15.02.2018இல் தூர்வாரும் பணிகள் நடைபெற்றதா” என்று கேட்டார். இரண்டும் நிகழ்வுகளும் நடைபெறவில்லை என்று தெரிவித்தேன். நடைப் பயிற்சியிலும் பொதுமக்கள் கூடும் இடங்களான தேநீர் நிலையங்களிலும் 19 இலட்சம் செலவில் தூர்வாரப்பட்ட செய்திகள் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகின்றன.

மக்களிடம் ஒருவகையான கொந்தளிப்பு நிலை உள்ளதை இனம்காண முடிகின்றது. மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கொடுக்கப்பட்ட கோரிக்கை மனு அடிப்படையில் என்ன மாதிரியான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது என்பதைப் பொறுத்தே குண்டூர் மக்களின் விவசாயிகளின் நடவடிக்கைகள் அமையும் என்று தோன்றுகின்றது. மாவட்ட ஆட்சித் தலைவரின் நடவடிக்கைகள் மனநிறைவு அளிக்கும் வகையில் இல்லையென்றால் விவசாயச் சங்கம் சார்பில் நீதிமன்றத்தை நாடவும் வாய்ப்புகள் உள்ளன என்பதை விவசாயச் சங்கத் தலைவர் திரிசங்கின் செய்தியாளர் சந்திப்பின் மூலம் உணரமுடிகின்றது.

இந்தப் பிரச்சனையில் குண்டூர் ஏரி காப்பு மற்றும் வளர்ச்சிக் குழு சார்பில் என்ற நடவடிக்கை மேற்கொள்ள இயலும் என்பதற்கு உரிய காலத்தில் உரிய நடவடிக்கை எடுக்க ஆலோசனைகள் மேற்கொள்ளப்படும்” என்று சொல்லி முடித்தார்.
மக்களுக்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் அரசு மக்களின் நலனுக்கான நிதியைச் செலவிடும்போது, இடையில் அரசு அதிகாரிகளின் இதுபோன்ற செயல்பாடுகள் அரசின் கொள்கைகளும் நோக்கங்களும் களங்கம் கற்பிக்கும் விதத்தில் இருப்பதாகப் பொதுமக்கள் எண்ணுகிறார்கள்.

அரசுக்கும் பொதுமக்களுக்கும் இடையில் பாலமாக இருக்கவேண்டிய அதிகாரிகள் ‘பாரமாக’ இருக்கவேண்டுமா என்ற கேள்வியோடு இப்பிரச்சனை குண்டூர் பகுதி மக்களின் மனநிலையில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட ஆட்சித் தலைவரின் சரியான நடவடிக்கை ஒன்றே மக்களின் கொந்தளிப்புக்கு மாமருந்தாக அமையும்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.