எம்.எல்.சி. தேர்தல் என்பது என்ன? ஏன் அது தமிழ்நாட்டில் நடப்பதில்லை?
பக்கத்து மாநிலமான கர்நாடகா, அதனைத் தொடர்ந்து மகாராஷ்ட்ரா, பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் எம்.எல்.சி. தேர்தல் முடிவுகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. காங்கிரஸ் ஆளும் கர்நாடக மாநிலத்தில் நடந்த 4 எம்.எல்.சி. தொகுதிகளுக்கானத் தேர்தலில் பா.ஜ.க-மதச்சார்பற்ற ஜனதாதளம் கூட்டணி நான்கிலும் வெற்றி பெற்றுள்ளது. இது அந்த மாநில ஆளுங்கட்சியான காங்கிரசை அதிர வைத்துள்ளது.
பீஹார் மாநிலத்தில் 8 எம்.எல்.சி. தொகுதிகளுக்கான தேர்தலில் பா.ஜ.க. 3, அதன் கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதாதளம் 1, எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதாதளம் 1, பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் 1 என வெற்றி பெற்றுள்ளன. உத்தரபிரதேசத்தில் ஆளுங்கட்சியான பா.ஜ.க. 6, எதிர்க்கட்சியான சமாஜ்வாடி கட்சி 5 என வெற்றி பெற்றுள்ளன. கடந்த முறை 2 எம்.எல்.சி.களை மட்டுமே பெற்ற சமாஜ்வாடி இந்த முறை 5 இடங்கள் அதுவும் பா.ஜ.க வலிமையாக உள்ள லக்னோ, வாரணாசி உள்ளிட்ட இடங்களில் வெற்றி பெற்றிருப்பது, 2027 பிப்ரவரியில் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் உத்தரபிரதேச அரசியலில் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது.

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் 5 தொகுதிகளுக்கான எம்.எல்.சி. தேர்தலில் பா.ஜ.க 1, அதன் கூட்டணிக் கட்சியான சிவசேனா 1, எதிர்க்கட்சிக் கூட்டணியில் உள்ள சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் 2 தொகுதிகளில் வென்றுள்ளன. மற்ற மாநிலங்களில் எம்.எல்.சி. தேர்தலில் ஓரிடம்கூட வெற்றி பெறாத காங்கிரஸ் கட்சி, மகாராஷ்ட்ராவில் ஆர்.எஸ்.எஸ். தலைமையிடம் அமைந்துள்ள நாக்பூரில் வெற்றி பெற்றிருப்பது அதற்கு மிகப் பெரும் ஆறுதலான வெற்றியாக அமைந்துள்ளது.
எம்.எல்.சி. தேர்தல் என்பது என்ன? அதில் வாக்களிப்பவர்கள் யார்?
முழுமையாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட அவைக்கு, சட்டப் பேரவை (Legislative Assembly) என்று பெயர். நியமன முறையிலான உறுப்பினர்களையும், குறிப்பிட்ட சில வாக்காளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட -சில துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களையும் கொண்ட அவைக்கு சட்ட மேலவை (Legislative Council) என்று பெயர். சட்டப் பேரவை உறுப்பினர்கள் (Member of Legislative Assembly) எம்.எல்.ஏ.க்கள். சட்ட மேலவை உறுப்பினர்கள் (Member of Legislative Council) எம்.எல்.சி.க்கள்.
கர்நாடகா, பீகார், உத்தரபிரதேசம், மகாராஷ்ட்ரா ஆகிய மாநிலங்களில் மேலவைக்கு உறுப்பினர்களாகத் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரிகளுக்கானத் தொகுதிகளைச் சேர்ந்தவர்கள். சட்டமன்றத்தில் ஆசிரியர்கள், பட்டதாரிகள் ஆகியோர்களுக்கானப் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என்பதற்காக மேலவையில் அவர்களுக்கான சில தொகுதிகள் இருக்கும். அந்தத் தொகுதிகளுக்கான ஆசிரியர்களும், பட்டதாரிகளும் அவரவருக்கான வேட்பாளர்களுக்கு வாக்களிப்பார்கள். அரசியல் கட்சிகளின் சார்பில் இதற்கான வேட்பாளர்கள் நின்று-வென்று எம்.எல்.சி.களாவார்கள். செல்வாக்கு மிக்க சுயேட்சை வேட்பாளர்களும் சில இடங்களில் வெற்றி பெற்று எம்.எல்.சி.யாகியிருக்கிறார்கள்.

இதுபோன்ற தேர்தல் முறையிலான எம்.எல்.சி.கள் மட்டுமின்றி, ஆளுநரால் நியமிக்கப்படும் எம்.எல்.சிகள், உள்ளாட்சி அமைப்புகளில் அரசியல் கட்சிகளுக்குள்ள செல்வாக்கின் மூலமான பிரதிநிதித்துவம் ஆகியவையும் சட்ட மேலவையின் சிறப்புகள்.
எம்.எல்.சி.யின் பதவிக் காலம் 6 ஆண்டுகள். மேலவையின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கினருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறும். ஏறத்தாழ நாடாளுமன்ற மாநிலங்களவை (ராஜ்யசபா) போலத்தான்!
இந்தியாவில் தற்போது ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, பீகார், மகாராஷ்ட்ரா, உத்தரபிரதேசம் ஆகிய 6 மாநிலங்களில் மட்டும்தான் சட்ட மேலவை உள்ளது. மேலவை தேவையா இல்லையா என்பதை முடிவெடுக்கும் அதிகாரம் சட்டப்பேரவையின் பெரும்பான்மை முடிவுக்குட்பட்டது.
தமிழ்நாட்டில் மேலவை இருந்ததா?
நமது மாநிலத்தின் சட்டமன்றம் பாரம்பரியமிக்கது. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இந்திவில் இருந்த மற்ற மாகாணங்களை விட சென்னை மாகாண சட்டமன்றம், இரட்டை ஆட்சி முறையிலான தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டு 1921லேயே கவுன்சிலாக செயல்பட்ட பெருமைக்குரியது. சுதந்திரத்திற்குப் பிறகு நடந்த பொதுத் தேர்தல்களின் மூலம் சட்ட மேலவை, சட்டப் பேரவை இரண்டும் 1986ஆம் ஆண்டு வரை இயங்கின.
1952 முதல் பொதுத்தேர்தல் முடிவுகளில் சென்னை மாகாணத்தில் காங்கிரசுக்குப் பெரும்பான்மை இல்லாத நிலையில், மற்ற கட்சியின் எம்.எல்.ஏக்களை சேர்த்துக்கொண்டு ராஜாஜி முதலமைச்சரானார். காங்கிரஸ் கட்சி சார்பில் முதல்வரான ராஜாஜி அப்போது எம்.எல்.ஏ.வாக இல்லை. அவர் பொதுத் தேர்தலில் போட்டியிடவில்லை. அதனால், மேலவை உறுப்பினராக(எம்.எல்.சி) தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1967ல் தி.மு.க. ஆளுங்கட்சியாக பெரும்பான்மை பலத்துடன் வென்றது. அண்ணா தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் வென்று எம்.பி.யாகியிருந்தார். அவர் முதல்வராகப் பொறுப்பேற்றதால், எம்.பி. பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பின்னர் மேலவை (எம்.எல்.சி) உறுப்பினரானார்.
1926ஆம் ஆண்டே டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் மேலவையின் முதல் பெண் உறுப்பினராக இருந்து சிறப்பாகப் பணியாற்றினார். இந்தியாவின் முதல் நிதியமைச்சர் என்ற பெருமைக்குரிய ஆர்.கே.சண்முகம் அவர்கள் தமிழ்நாடு சட்ட மேலவை உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். இந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்த ஆர்.வெங்கட்ராமனும் நமது மாநிலத்தில் எம்.எல்.சியாக இருந்திருக்கிறார். ம.பொ.சி., குன்றக்குடி அடிகளார், கே.பி.சுந்தராம்பாள், நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமி, நாகூர் ஹனிபா உள்ளிட்ட பல துறை சார்ந்தவர்களை உறுப்பினர்களாகக் கொண்டிருந்த பெருமை தமிழ்நாடு சட்ட மேலவைக்கு உண்டு.
பட்டதாரிகள், பட்டதாரி ஆசிரியர்கள், தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆகியோருக்கான தொகுதிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.சி.களும் மேலவையில் இருந்தனர்.
தமிழ்நாட்டில் இப்போது மேலவை இல்லாததற்கு என்ன காரணம்?
1986ஆம் ஆண்டில் எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்தபோது தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அதில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க. பெரும் பின்னடைவை சந்தித்தது. மூன்றில் இரண்டு பங்கு நகராட்சிகளிலும், பல பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளிலும் தி.மு.க. வெற்றி பெற்றிருந்தது. அப்போது தி.மு.க தலைவர் கலைஞர் சட்ட மேலவை (எம்.எல்.சி) உறுப்பினராக இருந்தார். உள்ளாட்சி அமைப்புகளில் தி.மு.க. பெரியளவில் வெற்றி பெற்றதால், அதற்கான மேலவை பிரதிநிதித்துவத்திலும் தி.மு.க.வுக்கு எம்.எல்.சி.கள் கிடைக்கும் வாய்ப்பு அமைந்தது. இதன் மூலம், சட்டமேலவையில் கலைஞர் எதிர்க்கட்சித் தலைவராகக்கூடிய சூழல் உருவானது. இது ஆளுங்கட்சிக்கு விருப்பமானதாக இல்லை.
இந்த சூழ்நிலையில், ஆளுந்தரப்பின் பரிந்துரையில் நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா என்பவரை மேலவை உறுப்பினராக்க (எம்.எல்.சி) முதலமைச்சர் விரும்பினார். அவர் ஏற்கனவே கடன் வாங்கி, அதை செலுத்த இயலாமல் திவால் நோட்டீஸ் கொடுத்தவர். திவால் ஆனவர் தேர்தலில் போட்டியிடவோ எம்.எல்.சி.யாகவோ தகுதியற்றவர் என வழக்குத் தொடரப்பட்டது. கடன் தொகையான 10 இலட்சத்தை அ.தி.மு.க.வின் கட்சிக் கணக்கிலிருந்து கட்டச் செய்தார் எம்.ஜி.ஆர். எனினும், வழக்குத் தொடரப்பட்ட போது அவர் கடனாளி என்பதால் இது குறித்த சட்டச் சிக்கல்களை சுட்டிக்காட்டி அதிருப்தியை வெளிப்படுத்தினார் ஆளுநர் எஸ்.எல்.குரானா. இதனால் நிர்மலாவால் எம்.எல்.சி.யாக இருக்க முடியவில்லை.

மேலவையில் கலைஞர் எதிர்க்கட்சித் தலைவராகும் சூழல், வெண்ணிற ஆடை நிர்மலாவுக்கு பறிபோன எம்.எல்.சி வாய்ப்பு. இவையிரண்டும் அ.தி.மு.க.வை சங்கடப்படுத்தின. இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் உள்ள பெரும்பான்மை மூலமும் கூட்டணிக் கட்சியான காங்கிரசின் ஒத்துழைப்பின் வாயிலாகவும் 1986 நவம்பர் 1ஆம் நாளன்று, மேலவையைக் கலைக்கும் தீர்மானத்தைக் கொண்டு வந்தது எம்.ஜி.ஆர். தலைமையிலான அ.தி.மு.க அரசு. இத்தனைக்கும் எம்ஜிஆரே 1962ல் எம்.எல்.சி.யாக இருந்தவர்தான். அதிமுக ஆட்சியில் மேலவைத் தலைவராக இருந்த ம.பொ.சி. கலைக்க வேண்டாம் என வலியுறுத்தியும், பேரவையில் தீர்மானம் நிறைவேறியது.
தமிழ்நாட்டில் பட்டதாரிகள், ஆசிரியர்கள் ஆகியோருக்கான சட்டமன்றப் பிரதிநிதித்துவமும் அதன்பிறகு இல்லாமல் போனது. பின்னர் தி.மு.க. ஆட்சிக்காலங்களில் மேலவையை மீண்டும் கொண்டு வர தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டும் அது முழுமையடையவில்லை. மத்திய அரசின் ஒத்துழைப்பும் கிடைக்கவில்லை. ஒரு சில மாநிலங்களில் எம்.எல்.சி. தேர்தல்கள் பற்றிய செய்திகள் வெளியாகும்போது தமிழ்நாட்டின் இன்றைய தலைமுறைக்கு அது என்ன என்ற ஏக்கத்துடன் கேள்வி எழுகிறது. புகழ்மிக்க தமிழ்நாடு சட்டமேலவை கலைக்கப்பட்டு 40 ஆண்டுகள் ஆகிவிட்டன.
-கோவி.லெனின்






Comments are closed, but trackbacks and pingbacks are open.