திருவெறும்பூரில் MMM முருகானந்தம் அரசியல் ஆடுபுலி ஆட்டம் ஆரம்பம் !
தமிழக அரசியல் வட்டாரத்தில் திருச்சி என்றாலே, திருப்பம்தான். சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில், வாய்ப்புக்காக கட்சித்தலைமையை சுற்றி வேட்பாளர்கள் வட்டமடித்துக் கொண்டிருந்த தருணத்தில் திருச்சியில் தொழிலதிபர் ஒருவரை முன்னணி அரசியல் கட்சிகள் துரத்திய சம்பவம் அதில் ஒன்று.
வீடியோ லிங்
நட்பு வட்டாரத்தில் MMM என்றழைக்கப்படும், பொறியியல் துறையில் வல்லுநரான எம்.முருகானந்தம் என்பவரைத்தான் அரசியல் கட்சிகள் வட்டமடித்தன. சுமார் 24-க்கும் மேற்பட்ட இந்திய நகரங்களிலும் வெளிநாடுகளிலும் கிளைகளை நிறுவி, தனது அனைத்து நிறுவனங்களையும் எக்ஸல் என்ற குடையின் கீழ் கொண்டு வந்து, எக்ஸல் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரான முருகானந்தம், உலகளாவிய பன்னாட்டு ரோட்டரியின் 2025-27 ஆம் ஆண்டிற்கான இயக்குனராகவும் செயலாற்றி வருபவர்.
கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில், திருவெறும்பூர் தொகுதியில் மக்கள் நீதி மையத்தின் வேட்பாளராக களமிறங்கியவர். தற்போது, அந்தக் கட்சியிலிருந்து விலகி தொழில் மீது கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில், அரசியல் பிரவேசம் குறித்து அவர் பேசியிருப்பதுதான் பரபரப்பை கூட்டியிருக்கிறது. சொந்த தொகுதியான திருவெறும்பூரில்தான் போட்டியிடப் போகிறேன் என்பதாக அவர் சூசகமாக தெரிவித்தும் விட்டார்.
அதிமுகவின் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், எம்.பி. ப.குமார் ஆகியோர் முருகானந்தத்திற்கு பங்காளி முறை. அந்த பந்தத்தில் இருந்து மதுரையில் அதிமுக மாநாடு நடத்தியபோதே எடப்பாடி தலைமையில் அவரை கட்சியில் இணைத்துவிட வேண்டுமென்று அப்போதே கடுமையாக மூச்சைப் போட்டார்கள். இப்போது வரையிலும் மெனக்கெட்டு வருகிறார்கள். நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில், கருப்பு முருகானந்தத்தோடு சேர்ந்து பாஜக அண்ணாமலையே நேரில் சந்தித்து மூச்சைப் போட்டதாகவும் ஒருதகவல். ரெங்கராஜன் குமாரமங்கலம் மாதிரி மந்திரி ஆக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு என்று அண்ணாமலை ஆஃபர் கொடுத்ததாகவும் தகவல்.
திமுக தரப்பிலும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழியாக முக்குலத்து சொந்தங்களை வைத்து சில நகர்வுகள் நடந்தேறின. கடந்த நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில், தேசியக் கட்சிகளின் பக்கம் சாயப்போகிறாரா? திராவிடக்கட்சிகளோடு பிணைத்துக்கொள்ளப் போகிறாரா? என்றிருந்த எதிர்பார்ப்பு, தற்போது திமுகவா? அதிமுகவா? என்பதாக இரண்டில் ஒன்றை தேர்வு செய்வது என்ற மனநிலைக்கு வந்துவிட்டதாகவும் சொல்கிறார்கள். திமுகவை டிக் அடிக்கவே 99% சதம் வாய்ப்புகள் இருப்பதாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
அடுத்த ஆண்டு 2025 – ஆகஸ்ட் 22 -24 ஆகிய தேதிகளில் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறவிருக்கிற லீட் 2025 – ரோட்டரி இந்தியா லீடர்ஷிப் கான்க்ளேவ் (RILC) விழாவில் பங்கேற்று சிறப்பித்து தருமாறு துணை முதல்வர் ஸ்டாலினையும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியையும் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்திருப்பது இதற்கான கிரீன் சிக்னல் என்கிறார்கள்.
திருச்சி கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வரும் இனிகோ இருதயராஜ், லோக்கல் பாலிடிக்ஸ் மீது வெறுப்பாகி சென்னைக்கே சென்றுவிட மேலிடத்தில் விருப்பம் தெரிவித்திருப்பதாக தகவல் உலவிவரும் சூழலில், முருகானந்தத்தின் விருப்பப்படியே, திருவெறும்பூரை அவருக்கு ஒதுக்கிவிட்டு, தந்தை போட்டியிட்ட தொகுதியான திருச்சி கிழக்கு தொகுதிக்கு அன்பில் மகேஷ் பொய்யாமொழி இடம் மாறிவிடுவது என்பது ஏற்பாடாம்.
இதற்கிடையில், விஜயின் அரசியல் பிரவேசத்தையடுத்து சிறுபான்மையினர் நிறைந்த தொகுதியான திருச்சி கிழக்கு தொகுதியை விட்டு இனிகோவை இடமாற்றம் செய்யத் தேவையில்லை என்பதாக மேலிடம் கருதுவதால் அப்படி ஒரு சூழல் உருவானால், துணைமுதல்வருக்கு துணையாக தலைநகர் பக்கமே ஒரு தொகுதியில் போட்டியிடுவது என்ற எண்ணத்தில் இருப்பதாகவும் சொல்கிறார்கள்.
வீடியோ லிங்
எப்படியும் நம்ம பங்காளி தானே… தேர்தல் நேரத்தில் பாத்துக்கலாம் என்ற நம்பிக்கையில் அதிமுகவினர் இருக்கிறார்கள். எது எப்படியோ, திருச்சி திருவெறும்பூர் தொகுதி, பெல், துப்பாக்கித் தொழிற்சாலை போன்ற பொதுத்துறை நிறுவனங்களும் நூற்றுக்கணக்கான சிறு குறு தொழில் நிறுவனங்களும் நிறைந்த தொகுதி. திருச்சி வர்த்தக மையத்தின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் சூழலும், மண்ணின் மைந்தர் என்ற அடையாளமும் தொகுதிக்கு பொருத்தமான வேட்பாளர்தான் என்றே கணிக்கிறார்கள், அரசியல் வட்டாரத்தில்.