காத்திருந்து பழகிப்போனவனாய் பேருந்துக்காக காத்திருந்தேன். பக்கத்தில் நின்ற ஒரு ஆள் செல்போன் ஸ்கிரீனை பார்த்தபடி ஏதோ முணுமுணுத்தார்.
“போன மாசம் தான் 279 ரூபாய்க்கு செல்லுக்கு காசு போட்டேன். அதையே இந்த மாசமும் போடலாம்னு பார்த்தா இப்போ காணோம்.”
நான் தலையை நிமிராமலே சிரித்தேன். பேருந்து வந்தது. இருவரும் முட்டிமோதி ஏறிவிட்டோம். ஆனால், அந்த கேள்வி மட்டும் அங்கேயே தொங்கிக்கொண்டிருந்தது.
இதுக்கு யாரு பொறுப்பு? அப்படின்னு கேட்டால், உடனே TRAI அப்படின்னு ஒரு பேரு வருது.
ஆனால் ஒரு விஷயத்தை முதல்ல தெளிவா புரிஞ்சிக்கணும். நம்ம செல்போன் ரீசார்ஜ் விலையை TRAI நேரடியாக நிர்ணயிக்கிறது கிடையாது. அப்படின்னா, TRAI என்னதான் பண்ணுது?
இந்தியாவுல 30% – 40% பேருக்கு RBI, TRAI, SEBI, IRDAI அப்படின்னு சில நிறுவனங்கள் இருந்ததே தெரியாது. அப்படியே தெரிஞ்ச சில பேர் இருந்தாலும் அவங்களுக்கு அதோட வேலை என்னன்னு தெரியிறது இல்ல. உண்மையாவே இந்த TRAI-யோட வேலை என்ன? அதுக்கும் நம்ம செல்போன் ரீசார்ஜ் பண்றதுக்கும் என்ன சம்பந்தம்?
இரயில் டிக்கெட் விலைய இரயில்வே துறை முடிவு பண்ணுது. கரண்ட் விலைய மின்சாரத்துறை முடிவு பண்ணுது. ஆனால் செல்போன் ரீசார்ஜ் விலைய ஜியோ, ஏர்டெல், விஐ மாதிரியான தனியார் கம்பெனிகள் தான் முடிவு பண்றாங்க.
1999 வரைக்கும் இது அரசோட கட்டுப்பாட்டுல தான் இருந்துச்சு. ஆனா 2002ல TRAI ஒரு மிகப்பெரிய முடிவை எடுத்துச்சு. “நீங்க உங்க வேலைய பாருங்க… நான் என் வேலைய பார்க்கிறேன்.” அப்படின்னு மாஸ்டர் படத்தில விஜய் பொறுப்ப தட்டிகழிக்கிற மாதிரி TRAI அப்போ இருந்த ஏர்டெல், ஏர்செல், வோடபோன் மாதிரி கம்பெனிகள தண்ணி தெளிச்சு விட்டுடுச்சு. அதுக்கு “Forbearance கொள்கை”னு ஒரு பேர் சொன்னாங்க.
அதோட விளைவு தான், இப்போ இருக்க கம்பெனிகள் ரீசார்ஜ் பிளான்ல அவங்க கொண்டு வந்த மாற்றங்களை குறிப்பிட்ட காலத்துக்குள்ள தெரியப்படுத்துனா மட்டும் போதும்னு இருக்குற நிலை.
அந்த Forbearance கொள்கைக்கு பின்னால ஒரு சின்ன நல்ல எண்ணமும் இருந்ததுனு சொல்லலாம். “ஒரு துறையில நிறைய கம்பெனிகள் இருந்தா, பயனாளிகள அவங்க பக்கம் இழுக்குறதுக்காக போட்டிப் போட்டு விலைய குறைக்க வாய்ப்பு இருக்கு.”
2016ல ஜியோ உள்ள வந்தப்போ இது தான் நடந்துச்சு. ஆனால் அது எவ்வளவு பெரிய பிசினஸ் யுக்தினு அப்போ யாருக்கும் தெரியல.
அந்த காலகட்டத்துல ஒரு மாசத்துக்கு 2 ஜிபி மொபைல் டேட்டா பயன்படுத்துனவங்களுக்கு, இன்னைக்கு ஒரு நாளுக்கு 4 ஜிபி டேட்டா கூட போதல.
சாப்பிடற சாப்பாடு அதிகமா இருந்து கெட்டுப்போனால் கூட விட்டுருவாங்க. ஆனா டேட்டா முழுசா காலி பண்ணலைனா பல பேருக்கு தூக்கமே வராது.
இப்போ களத்துல இருப்பது 3 கம்பெனி தான். அதுல விஐ ஏற்கனவே மூச்சு திணறிக்கிட்டு இருக்கு. மீதி இருப்பது ஜியோ, ஏர்டெல் தான்.
ரெண்டும் வேற வேற கம்பெனியாவே இருந்தாலும், பண்ணுற வேலையெல்லாம் பார்த்தால் அப்படி இருக்காது.
பொருளாதாரத்தில “Oligopoly Pricing” அப்படின்னு ஒண்ணு சொல்லுறாங்க. அதை சிம்பிளா சொல்லணும்னா, வெளியில போட்டியாளர்களா இருந்தாலும், ஒருத்தர் விலையை ஏத்தினா இன்னொருத்தரும் அதே பாதையில போகிற சூழல் உருவாகலாம்.
இப்போ கதையில ஒரு ட்விஸ்ட் வருது.
விஐ (வோடபோன்) கம்பெனி அரசுக்கு கட்டவேண்டிய பாக்கி (AGR dues) பல ஆயிரம் கோடி ரூபாய். கம்பெனி திவால் ஆகிவிடக்கூடாதுனு, அரசு அந்த கடனை ஷேர்களாக மாற்றிக்கிட்டாங்க. இப்போ விஐ (வோடபோன்)யோட கணிசமான பங்கு இந்திய அரசாங்கத்துக்கிட்ட இருக்கு.
விஐ கம்பெனி தொடர்ந்து நிலைத்து நிற்கணும்னா, வருமானத்தை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் இருக்கு. அதற்கான வழிகளில் ஒன்று ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்துவது.
அதே நேரத்தில், அந்த நிறுவனத்தில் அரசுக்கும் கணிசமான பங்கு இருக்கிறது. அதனால்தான் இங்கே ஒரு சுவாரஸ்யமான சிக்கல் உருவாகுது.
பயனாளிகளுக்கு குறைவான விலை கிடைக்கணும்னு நினைக்க வேண்டிய அரசாங்கமே, அந்த நிறுவனத்தோட நிதிநிலைய உயர்த்துவதிலையும் ஆர்வம் காட்ட வேண்டியிருக்கு.
2024ல கடுமையா ரீசார்ஜ் விலை உயர்வு நடந்தபோது, “அவங்க செய்யிறது Forbearance கொள்கைக்கு கீழ தான் இருக்கு. அதுல அரசு தலையிடாது” அப்படின்னு ஒரு அறிக்கை வெளியிட்டுச்சு TRAI.
போலீசே திருடனுக்கு Character Certificate குடுத்த மாதிரி இருந்துச்சு.
ஒரு துறையில தனியார் கம்பெனிகளோட ஆட்டத்தை அடக்குறதுக்கு அரசே ஒரு நிறுவனத்தை உருவாக்கி, கம்மி விலையில பொருட்களை கொடுத்து விலையுயர்வ கட்டுப்படுத்தும். அதுக்கு சிறந்த உதாரணம் தமிழ்நாடு அரசோட ஆவின் பாலகம்.
அந்த வேலைய செய்ய வேண்டிய நிறுவனம் BSNL (Bharat Sanchar Nigam Limited). ஆனால் BSNL-க்கு ஒரு பெரிய பிரச்சனை இருக்கு. தனியார் நிறுவனங்களோட போட்டியை சமாளிக்க தேவையான network coverage, internet speed போன்ற விஷயங்களில் பல பகுதிகளில் அது இன்னும் பின்தங்கியிருக்கிறது என்பதுதான் பல பயனாளிகளோட கருத்து.
ஒரு கடையில பொருள் கம்மி விலையில இருக்கு ஆனா தரமில்ல, பக்கத்து கடையில பத்து ரூபாய் அதிகம் ஆனால் நல்ல தரத்தில கிடைக்கிறப்போ மக்கள் அங்க தானே போவாங்க. அது தானே மக்களோட மனநிலை.
தொலைத்தொடர்புங்குறது இன்றைக்கு ஆடம்பரமல்ல, அத்தியாவசியத் தேவை. ஆளுக்குத் தகுந்தபடி விலையை ஏற்றி வேடிக்கை பார்க்கிறார்கள். ஒழுங்குபடுத்த வேண்டிய அமைப்புகளோ “கம்பெனிகளே தீர்மானிக்கும்”னு ஒதுங்கிக்கிறாங்க.
காசு இருந்தால் மட்டுமே பேச்சு என்றான பிறகு, இங்க சாமானியனின் பாக்கெட்டைப் பாதுகாக்கப்போறது யாரு?
— மகா






Comments are closed, but trackbacks and pingbacks are open.