அங்குசம் பார்வையில் ‘சிறை’
தயாரிப்பு: ‘செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ’ எஸ்.எஸ்.லலித்குமார், டைரக்டர்: சுரேஷ் ராஜகுமாரி, கதை: தமிழ், திரைக்கதை: தமிழ் & சுரேஷ் ராஜகுமாரி. ஆர்டிஸ்ட்: விக்ரம் பிரபு, எல்.கே.அக்ஷ ய்குமார்( அறிமுகம், அனிஷ்மா அனில்குமார், அனந்தா தம்பி ராஜா, பி.எல்.தேனப்பன், மூணார் ரமேஷ் . ஒளிப்பதிவு: மாதேஷ் மாணிக்கம், இசை: ஜஸ்டின் பிரபாகரன், எடிட்டிங்: பிலோமின்ராஜ், காஸ்ட்யூம் டிசைன்: வர்ஷினி சங்கர், ஸ்டண்ட்: பி.சி.ஸ்டண்ட்ஸ், தயாரிப்பு நிர்வாகி: ஆர்.எஸ்.வெங்கட், நிர்வாக தயாரிப்பாளர்கள்: அருண், மணிகண்டன், கிரியேட்டிவ் தயாரிப்பாளர்: ஆரோசம், பி.ஆர்.ஓ. : யுவராஜ்
ஏ,ஆர்.போலீசில் தலைமைக் காவலராக இருக்கிறார் கதிரவன் [ விக்ரம் பிரபு] . வேலூர் சிறையில் விசாரணைக் கைதியாகவே ஐந்து ஆண்டுகள் இருக்கும் அப்துல் ரவூப்பை [ எல்.கே.அக்ஷய்குமார்] சிவகங்கை நீதிமன்றத்தில் நடக்கும் கொலை வழக்கு விசாரணைக்காக, இரண்டு காவலர்களுடன் வேலூர் சிறையிலிருந்து சிவகங்கைக்கு பஸ்ஸில் அழைத்துச் செல்கிறார். இரவு சாப்பிட விக்ரவாண்டியில் பஸ் நிற்கும் போது, தப்பித்துச் செல்லும் அப்துல், அதன் பின் பல யோசனைக்குப் பின் விக்ரவாண்டி போலீஸ் ஸ்டேஷனில் சரண்டராகிறார். இதனால் ரொம்பவே பதட்டமாகும் கதிரவனும் மற்ற இரு போலீசும் அக்யூஸ்ட் விக்ரவாண்டி ஸ்டேஷனில் இருப்பதாக தகவல் கிடைத்து அங்கு போய், அப்துலைக் கூட்டிக் கொண்டு மீண்டும் சிவகங்கை நோக்கி லாரியில் பயணமாகிறார்கள்.
லாரியில் போகும் போது அப்துலின் லவ் ஃப்ளாஷ்பேக், அவன் எப்படி கொலையாளினான் என்ற கதையைக் கேட்டு கலங்குகிறார் கதிரவன். அதன் பிறகு அவர் எடுக்கும் முடிவு என்ன? என்பதன் உருக வைக்கும், 1996-97-ல் நடந்த உண்மைக் கதை தான் இந்த ‘சிறை’.
இப்படி ஒரு அழுத்தமான உண்மைக் கதையை எழுதிய இயக்குனர் தமிழுக்கும் அதை இரண்டேகால் மணி நேரம் பார்வையாளனின் கண்களை திரையிலிருந்து விலக்க முடியாத அளவுக்கு சிறைப்படுத்திய படத்தின் இயக்குனர் சுரேஷ் ராஜகுமாரிக்கும் மனப்பூர்வ பாராட்டுகள். விக்ரம் பிரபுவுக்கு மனித நேயமிக்க தலைமைக் காவலர் வேடம் என்றாலும் உயர் போலீஸ் அதிகாரிக்குரிய கம்பீரத்துடன் அந்த கேரக்டரை வடிவமைத்திருக்கிறார்கள் தமிழும் சுரேஷ் ராஜகுமாரியும்.
விக்ரம் பிரபு எண்ட்ரியாகும் முதல் காட்சியே, பஸ்ஸிலிருந்து தப்பி ஓடும் கொலைக் குற்றவாளியை சுட்டுக் கொன்று [ இந்த ஸ்டண்ட் சீனை பிரமாதமாக வடிவமைத்திருக்கிறார் பி.சி.ஸ்டண்ட்ஸ்] அதன் பின் ஆர்.டி. ஓ. விசாரணையில் ஆஜராகிறார்.
“ஓப்பன் ஃபயர் பண்ணக்கூடாதுன்னு உங்களுக்கு போலீஸ் டிரெய்னிங்ல சொல்லித்தரலையா?” –இது ஆர்.டி.ஓ.
“ அதெல்லாம் தெரியும் மேடம். ஆனா தப்பிச்சு ஓடுனவன் ஆட்டோவுல ஏறி தப்பிக்கப்பார்த்தான். அந்த ஆட்டோ எவ்வளவு ஸ்பீடுல ஓடும்னெல்லாம் டிரெய்னிங்ல சொல்லித்தரமுடியாது. ஓடுவன் பெரிய யோக்கியன் கிடையாது. அவன் மேல எட்டு கொலைக் கேஸ், அஞ்சு ரேப் கேஸ் இருக்கு. அதனால் அவனை சுட்டதுல தப்பில்ல”—இது விக்ரம் பிரபு.
இப்படி அட்டகாசமாக ஆரம்பிக்கிறார் விக்ரம் பிரபு. ”சார் கோர்ட்டுக்குள்ள போகும் போது என்னோட கைவிலங்கை கழட்டிருங்க சார்” என பஸ்ஸில் கெஞ்சும் அக்ஷயிடம், “இதெல்லாம் கொலை பண்றதுக்கு முன்னால யோசிச்சிருக்கணும்டா” என கடுமை காட்டும் விக்ரம் பிரபு, அவனின் ஃப்ளாஷ்பேக்கைக் கேட்ட பிறகு கோர்ட்டுக்கு வெளியே கைவிலங்கைக் கழட்டுவது, நீதிபதியின் கருணைக்குப் பிறகு அக்ஷ்ய்க்கு விடுதலை உத்தரவு கிடைத்ததும் அக்ஷயும் அவனின் காதலி கலையரசியும் [ அனிஷ்மா அனில்குமார்] விக்ரம் பிரபு காலில் விழுந்து கதறியழும் போது… அவரும் கலங்கி, அரவணைத்து அழுவது என பல சீன்களில் நமது மனச்சிறையிலிருந்து ஜாமீனில் விடுவிக்க முடியாத அளவுக்கு நடிப்பு வழக்கில் சிக்கிவிட்டார் விக்ரம் பிரபு.
இவருக்கு அடுத்து நம்மை சிறைப்படுத்துபவர்கள் என்றால்… அப்துல் ரவூஃப்பாக வரும் அக்ஷய்குமாரும் கலையரசியாக வரும் அனிஷ்மாவும் தான் என்பதில் சந்தேகமேயில்லை. சிவகங்கை மண்ணின் காதல் கிளிகளாக அப்பாவிகளின் முகமாக இருவருமே ஜொலிக்கிறார்கள். கலையரசியின் அப்பளப்பூ டேஸ்ட், அப்துல் ரவூப்பின் லேடிஸ் லக்ஸ் சோப் மகிழ்ச்சி, சாவு வீட்டில் வீடியோ டெக்கில் “என் தாயெனும் கோவிலை காக்க மறந்திட்ட பாவியடி கிளியே” இசைஞானியின் பாடல் இதெல்லாம் ஹைக்கூ கவிதை ரசனைக்குரியது. இவர்களின் எளிமையான காஸ்ட்யூம் தான் அந்த இரு கேரக்டர்களுக்கும் வலு சேர்க்கிறது. காஸ்ட்யூம் டிசைனர் வர்ஷினி சங்கருக்கு சபாஷ்.
“சார் அஞ்சு வருசமா அவ முகத்துல சிரிப்பையே பார்க்கல சார்” என மனம் கலங்கி கண்ணீர் விடுவது, கோர்ட்டில் நீதிபதி தேனப்பனின் காலில் விழுந்து கதறுவது, க்ளைமாக்ஸில் ஆக்ரோஷமாக தப்பித்து ஓடுவது உட்பட எல்லா சீன்களிலுமே டயலாக் டெலிவரி, பாடிலாங்குவேஜ் இவற்றை நன்றாகவே வெளிப்படுத்தியுள்ளார் அக்ஷய்குமார். ஃபர்ஸ்ட் படத்துலேயே ஃபர்ஸ்ட் கிளாஸ்ல பாஸ் பண்ணிட்டான் பையன்.
கோர்ட் வாசலில் அக்ஷயைப் பார்த்ததும் கண்களில் நீர் தழும்பி, கன்னதில் வழிந்து உருகுவது, நவசக்தி கருமாரியம்மன் கோவிலில் முகம் முழுவதும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி அப்துல் ரவூப்புக்கு திருநீறு பூசி உருகுவது, தனது அம்மாவுடனும் அக்கா புருஷனுடனும் ஆவேசமாக மல்லுக்கட்டுவது என கலையரசியாகவே நம் மனசுக்குள் ஆட்சி செய்கிறார் அனிஷ்கா அனில்குமார்.
விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக பெண் போலீசாக அனந்தா தம்பிராஜாவுக்கு சீன்கள் குறைவு என்றாலும் நடிப்பில் நிறைவு.
பெரும்பாலும் இரவு நேரக் காட்சிகள் என்பதால் ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கத்தின் கடின உழைப்பு.. அதிலும் இரவு நேர நெடுஞ்சாலையில் பஸ் பயணக் காட்சியில் அபாரமாக வித்தை காட்டியுள்ளார் மாதேஷ். இரண்டு மெலொடி பாடலிலும் பின்னணி இசையிலும் அசத்தியுள்ளார் ஜஸ்டின் பிரபாகர். எடிட்டர் பிலோமின் ராஜின் ஷார்ப்பான கட்டிங் சிறைக்கு செம க்ரிப்பாக இருக்கு.
“அஞ்சு வருசமா ட்ரையலுக்கே வராம இந்த கேஸ் நடக்குறதுல எங்க மேலயும் தப்பிருக்கு. இதுக்காக ஒரு நீதிபதியா உங்க கிட்ட மன்னிப்புக் கேட்டுக்குறேன்” என அக்ஷயிடமும் அனிஷ்காவிடமும் தேனப்பன் மன்னிப்புக் கேட்கும் காட்சி டெல்லி திஹார் ஜெயிலில் இப்போது வரை வாடும் உமர் காலித் வழக்கிற்கு சாட்சி.
துப்பாக்கி லோடு பண்ணியிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியாகும் விக்ரவாண்டி இன்ஸ்பெக்டர் மூணார் ரமேஷிடம், “அவன் முஸ்லிம் சார்” என விக்ரம் பிரபுவுடன் வந்த கான்ஸ்டபிள் சொன்னதும் “நானும் முஸ்லிம் தாண்டா…என்னையும் சுடுவியா?” என கேட்கும் காதர் பாட்சா[ மூணார் ரமேஷ்], அதன் பின் அப்துல் ரவூஃப்னா யாரு தெரியுமாடா? 1996-ல் ஈழத்தமிழர்களுக்காக தீக்குளிச்சு செத்த தமிழண்டா” என அதே காதர் பாட்சாவை பேச வைத்து மதவெறி சங்கி சொறி நாய்களை சாணியில் செருப்பை முக்கியெடுத்து விளாசியிருக்கிறார் டைரக்டர் சுரேஷ் ராஜகுமாரி. அதே போல் விக்ரவாண்டியிலிருந்து பயணிக்கும் வெங்காய லோடு[ கவனிக்க வெங்காயம்] லாரியில் தாய் மூகாம்பிகை பெயர்.
”இதண்டா தமிழ்நாடு”….
தமிழ்நாட்டின் பல சிறைகளில் குறிப்பாக கோவை சிறையில் பத்து பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணைக் கைதியாகவே அல்லல்படும் இஸ்லாமியர்களின் வலியையும் நேர்மைத்திறத்துடன் பதிவு செய்துள்ள டைரக்டர் சுரேஷ் ராஜகுமாரிக்கு ராயல் சல்யூட். ஜெயிலிலிருந்து கைதிகளை கோர்ட்டுக்கு அழைத்துப் போகும் காவல்துறையின் நடைமுறை விதிகளை இவ்வளவு டீட்டெய்லாக எந்த சினிமாவிலும் நாம் பார்த்ததில்லை. எல்லாப் புகழும் கதாசிரியர் தமிழுக்கே.
“எல்லா போலீஸ்காரனுக்கும் குறைந்தபட்ச அதிகாரம் இருக்கு. அந்த அதிகாரத்தை எளிய மக்களுக்காக பயன்படுத்துங்க” க்ளைமாக்ஸில் காவலர்ர் பயிற்சிப்பள்ளியில் விக்ரம் பிரபு பேசும் இந்த வசனம் காவல்துறைக்கு மிகவும் அவசியமான, அடிப்படையான பாடம்.
கதையாலும் கருத்தாலும் மனசெல்லாம் நிறைந்திருக்கு இந்த ‘சிறை’.
— ஆண்டவர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.