அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

அங்குசம் பார்வையில் ‘மிஸ்டர் எக்ஸ்’…!

திருச்சியில் அடகு நகையை விற்க

தயாரிப்பு : ,மேவ்ரிக் மூவிஸ்’ வினீத் ஜெயின், ‘பிரின்ஸ் பிக்சர்ஸ்’ லக்‌ஷ்மண்குமார், இணைத் தயாரிப்பு : ஏ.வெங்கடேஷ். எழுத்து-இயக்கம் : மனு ஆனந்த், ஆர்ட்டிஸ்ட் : ஆர்யா, சரத்குமார், மஞ்சு வாரியர், கெளதம் ராம் கார்த்திக், அனகா எல்.கே., அதுல்யா ரவி, ரைசா வில்சன், வினீத் ராமகிருஷ்ணன், ஜெயப்பிரகாஷ், காளிவெங்கட், சஞ்சனா சிங், தேவதர்ஷினி, மோகன்ராம்.  திரைக்கதை : மனு ஆனந்த், திவ்யங்கா, ராம் எச்.புத்ரன், ஒளிப்பதிவு : அருள் வின்செண்ட், இசை : திபு நைனன் தாமஸ், எடிட்டிங் : ஜி.கே.பிரசன்னா, ஸ்டண்ட் : “ஸ்டண்ட் சில்வா, ஆர்ட் டைரக்டர் : ராஜீவன், காஸ்ட்யூம் டிசைனர் : உத்ரா மேனன், பி.ஆர்.ஓ : ஏ.ஜான்.

இந்திய உளவு அமைப்புகளில் மிகவும் முக்கியமானது ‘ரா’ [ Research& Analysis Wing] . இதில் உள்ளவர்கள் தாங்கள் யார் என்பதை மனைவியிடமோ, பிள்ளைகளிடமோ கூட சொல்ல முடியாது, சொல்லவும் கூடாது. அரசாங்கம் கொடுக்கும் அஸைன்மெண்ட்டை கனகச்சிதமாக முடிக்க தங்கள் உயிரைக் கூட சத்தமில்லாமல் கொடுத்துவிட்டு செத்து மடியும் நிஜமான வீரர்கள். அப்படிப்பட்ட வீரர்களைப் பற்றியும் அவர்களின் சாகசங்கள்,  தியாகங்களைப் பற்றியும் பெருமைப்படுத்துவதற்கென்றே வந்திருக்கும் ஸ்பெஷல் சினிமா தான் இந்த ‘மிஸ்டர் எக்ஸ்’. ஸ்பெஷல்னா ஸ்பெஷல் சூப்பர் ஸ்பெஷல் மேக்கிங்கில் நம்மை பிரமிக்கவைக்கிறார் இந்த ‘மிஸ்டர் எக்ஸ்’. பிரமிக்க வைத்திருப்பவர் டைரக்டர் மிஸ்டர் மனு ஆனந்த்.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

இந்த ‘ரா’ ஏஜெண்டுகள் எப்படிப்பட்டவர்கள்? அவர்களின் ஆபரேஷன் எப்படிப்பட்டது? என்பதை டைட்டில் போடுவதற்கு முன்பே 1965-ல் காணாமல் போன நியூக்ளியர் டிவைசைத் தேடி ஒரு  மிலிட்டண்ட் குரூப் பனிமலைப் பிரதேசங்களில் பயணிப்பதை காட்சிகள் மூலம் எளிதாகப் புரிய வைத்த பின் தான் இந்த மிஸ்டர் எக்ஸ் கதைக்குள் போகிறார் மனு ஆனந்த். இதற்காக சகோதரர் மனு ஆனந்த் சேகரித்த ரகசியத் தகவல்கள், ராணுவ ஆராய்ச்சிகள், இதையெல்லாம் ஸ்க்ரீனில் கொண்டுவர, அவர் பட்ட கஷ்டங்களை நினைத்தாலே புல்லரிக்குது. இவருக்கு உறுதுணையாக இருந்து கதை-திரைக்கதையை வடிவமைத்த திவ்யங்காவும் ராம் எச்.புத்ரனும் மிகவும் பாராட்டுக்குரியவர்கள்.

மனு ஆனந்தின் மூளை உழைப்பு அபாரம் என்றால், ‘ரா’வின் டைரக்டர் இந்திரா வர்மாவாக மிரட்டும் மஞ்சுவாரியர், ஏஜெண்ட்டாக அதகளம் பண்ணும் கெளதமாக ஆர்யா, ரா ஏஜெண்டாக இருந்து எதிரிகளிடம் விலை போகும் கெளதம் ராம் கார்த்திக், ‘ரா’வின் அதிகாரி மிஸ்டர் எக்ஸ்ஸாக பரமேஷ்வர் சூர்யபிரதாப்பாக அட்டகாசம் பண்ணியுள்ள சரத்குமார், காமினியாக ரைசலா வில்சன், டாக்டராக அனகா, கெளதம் ராமின் கைக்கூலி நியூக்ளியர் சைண்டிஸ்ட் வேதாவாக  அதுல்யா ரவி, ‘ரா’வில் இருந்து கொண்டே, காட்டிக் கொடுத்து சம்பாரிக்கும் பொன்னுசாமியாக காளி வெங்கட், ‘ரா’ அதிகாரியாக ஜெயப்பிரகாஷ் என அனைவருமே நடிப்பிலும் உடல் மொழியிலும் அபராமோ அபாரம்.

2026 யாவரும் கேளீர் ஏப்ரல் மாத இதழ்

மிஸ்டர் எக்ஸ்அதிலும் ஆக்‌ஷன் சீக்வென்ஸில் மஞ்சுவாரியாரின் பெர்ஃபாமென்ஸ் ஹைலெவல். ஆர்யாவைப் பற்றிச் சொல்ல வேண்டும்னா, கொடுத்த வேலையைச் சிறப்பாக செய்ய, கிடைத்த கேரக்டருக்கு 100% உழைப்பைக் கொடுக்க தன்னைத் தானே வருத்திக் கொண்டு மகிழ்ச்சியடையவதில் கைதேர்ந்தவர் என்பதை இப்படத்தில் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.

கெளதம் ராம் கார்த்திக் எப்படி வில்லன் ஆனார் என்பதற்கு குறிஞ்சிக்குளம் [ கூடங்குளம்] அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டத்தில் போலீசின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியாகும் அவரின் தாய் தேவதர்ஷனியின் ஃப்ளாஷ்பேக்கை கச்சிதமாக கனெக்ட் பண்ணியுள்ளார் டைரக்டர் மனு ஆனந்த். இதை மிக கச்சிதமாக கேட்ச் பண்ணி அசத்திவிட்டார் கெளதம் ராம் கார்த்திக். “அணுமின் நிலையம் நாட்டின் வளர்ச்சிக்கு நல்லது” என ஃப்ளாஷ்பேக்கில் சொன்ன மோகன் ராம், பதினைந்து ஆண்டுகளுக்குப் பின் “இது பேராபத்து” எனச் சொல்லும் போது, கரெக்டாக மடக்கி கொக்கி போடும் சீனில் கெளதம் ராம் கார்த்திக் செம ஜோர்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

படம் ஆரம்பித்து அரைமணி நேரத்திலேயே ’மிஸ்டர் எக்ஸ்’ யார் என தெரிந்துவிட்டாலும் மஞ்சுவாரியர், ஆர்யா, சரத்குமார் உட்பட அனைவரையுமே சந்தேகப்பட வைத்து, அதன் பின்னணியில் சில ட்விஸ்ட் இன்ஸ்டண்டுகளை வைத்து என செம பிரிலியண்டாக ஸ்கிரிப்டைக் கொண்டு போய் ஆச்சர்யப்படுத்திவிட்டார்கள் மனு ஆனந்தும் அவரது உதவியாளர்களும்.

மிஸ்டர் எக்ஸ்இவர்களுக்கு அடுத்து நம்மை ஆச்சர்யத்தில் மிரள வைப்பவர்கள் கேமராமேன் அருள் வின்செண்ட், ஆர்ட் டைரக்டர் ராஜீவன், எடிட்டர் ஜி.கே.பிரசன்னா, ஸ்டண்ட் மாஸ்டர் ‘ஸ்டண்ட்’ சில்வா ஆகிய நால்வர் கூட்டணி தான். ஹவாலா பணத்தைக் கைப்பற்றும் ஆர்யாவின் எண்ட்ரி சீனில் இரவு நேர சென்னையின் குறுகலான சாலைகளிலும் சரி, மாஸ்கோவில் சரத்குமாரைக் காப்பாற்ற  ஆர்யா டீமின் கார் சேஸிங், க்ளைமாக்ஸில் அணுமின்நிலயத்தில் நடக்கும் பரபர ஆக்‌ஷன் சீன்களிலும் அருள் வின்செண்ட் கொடி கட்டிப்பறக்கிறார். இந்த எல்லா சீன்களிலும் சரிக்குச் சமமான பங்கு ஸ்டண்ட் சில்வாவுக்கும் இருக்கு என்பதையும் சொல்லியே ஆகவேண்டும்.

என்ன ஒண்ணு….. என்னதான் கையில டிசைன் டிசைனா ஆயுதங்கள் இருந்தாலும் ஹீரோவும்[ஆர்யா] வில்லனும்[கெளதம் ராம் கார்த்திக்] கைகளால் மாறிமாறி முகத்தில் குத்தி, பறந்து பறந்து எட்டி உதைத்து பந்தாடும் உலக சினிமா ஃபார்முலா இந்த மிஸ்டர் எக்ஸிலும் இருக்கு. கிட்டத்தட்ட மூன்று மணி நேரப்படத்தில் எந்த இடத்திலும் தொய்வு ஏற்படவிடாமல் செம க்ரிப்பாக கொண்டு போயிருக்கிறார் எடிட்டர் பிரசன்னா.  ஒரே ஒரு மெலோடி சாங்குடன் நிறுத்திவிட்டு, பேக்ரவுண்ட் ஸ்கோரில் டெம்போ ஏற்றுகிறார் திபு நைனன் தாமஸ்.

ரைசா வில்சன் கேரக்டர் காமினியா? நிர்மலாவா? க்ளைமாக்ஸ்ல திடீர்னு எப்படி மஞ்சுவாரியார், ஆர்யா கூட்டணியுடன் கைகோர்க்கிறார்? என்பது தான் கொஞ்சம் குழப்பமாக இருக்கு? ஒருவேளை ‘மிஸ்டர் எக்ஸ்-2’வில் டைரக்டர் மனு ஆனந்த் இதை க்ளியர் பண்ணுவார்னு நினைக்கிறோம். நாம் பார்த்து, ரசித்து, அனுபவித்த சிறந்த  ஸ்பை த்ரில்லர் சினிமாவை எழுத்தில் ஓரளவு கொண்டு வந்துள்ளோம். இதை திரையில் பார்ப்பது தான் பேரனுபவம்.

உலகத்தரத்தில் ‘மிஸ்டர் எக்ஸ்’ என்ற தமிழ் சினிமாவை உருவாக்கிய தயாரிப்பாளர்கள் வினீத் ஜெயின், லக்‌ஷ்மண்குமார், படைப்பாளி மனு ஆனந்த் மற்றும் இவருக்கு உறுதுணையாக இருந்த இணை, துணை இயக்குனர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரையும் உச்சிமுகர்ந்து பாராட்டி மகிழ்வோம்.

அங்குசம் பார்வையில் ‘மிஸ்டர் எக்ஸ்’  85/100

—  ஆண்டவர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.