அங்குசம் பார்வையில் ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’ திரைப்படம் திரை விமர்சனம்.-
அங்குசம் பார்வையில் ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’ திரைப்படம் திரை விமர்சனம்.- தயாரிப்பு: ‘மசாலா பாப்கார்ன்’ & ஒயிட் ஃபெதர்’ ஐஸ்வர்யா, சுதா & வெங்கட் பிரபு. டைரக்ஷன்; அனந்த், நடிகர்—நடிகைகள்—குமரவேல், அனந்த், விசாலினி, பவானி ஸ்ரீ, ஆர்.ஜே.விஜய், இர்ஃபான், கே.பி.ஒய்.பாலா, லீலா, மோனிகா, ஐஸ்வர்யா, வினோத், பூவேந்தன். தொழில்நுட்பக் கலைஞர்கள்—ஒளிப்பதிவு: தமிழ்ச்செல்வன், இசை ; ஏ.எச்.காசிஃப், எடிட்டிங் : ஃபென்னி ஆலிவர். பி.ஆர்.ஓ.சுரேஷ் சந்திரா.
பள்ளிப்பருவத்திலிருந்து கல்லூரிப் பருவம் வரை எதிரும் புதிருமாக ஒரு டீம் இருக்கிறது. இன்ஜியரிங் முடித்த பின் வேலைக்குப் போவதை விட்டுவிட்டு ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’ என்ற ஆப் மூலம் ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் நடத்தும் முயற்சிகளில் இறங்குகிறது ஹீரோ அனந்த் தலைமையிலான டீம்.
ஆரம்பத்திலேயே இந்த ஆப் ஆப்படித்ததால், அனைவரின் குடும்பச் சூழல் காரணமாக தனித்தனியாக வேலைக்குப் போக வேண்டிய கட்டாயம். இதற்கிடையே அனந்த் பவானி ஸ்ரீயை லவ்வுகிறார்.
இந்த லவ் நல்லபடியாக போய்க் கொண்டிருக்கும் போது, அப்பா குமரவேலின் கடன் சுமையைக் குறைக்க சிங்கப்பூர் செல்கிறார் அனந்த். அங்கே போய் பார்ட் டைம் வேலை பார்த்தபடியே மேற்படிப்பு படிக்கிறார்.
‘ந.ஒ.வ.பி.’ ஆப்-ஐயும் டெவலப் பண்ணி சென்னை திரும்புகிறார். இங்கே வந்த பிறகு அந்த இளைஞர்களின் வாழ்வில் ஒளி தெரிந்ததா? இதான் ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’.
பவானி ஸ்ரீ மற்றும் ஆர்.ஜே.விஜய்யைத் தவிர படத்தில் நடித்த அனைவருமே புதுமுகங்கள் தான். சென்னை இளைஞர்கள் என்றாலே முறைப்பு, விரைப்பு, சரக்கடிப்பு என்பதை இதிலும் சொல்லியிருந்தாலும் படித்த இளைஞர்களிடம் நம்பிக்கையை விதைக்கும் விதமாக அந்த ஆப் விசயத்தை அழுத்தமாக சொன்ன வகையில் டைரக்டரும் ஹீரோவுமான அனந்தைப் பாராட்டலாம்.
அதே போல் தன்னிடம் படிக்கும் மாணவ—மாணவிகளை மோட்டிவேட் பண்ணும் பேராசிரியையாக ஐஸ்வர்யாவும் கவனம் ஈர்க்கிறார். சிங்கப்பூரில் வேலை செய்யும் மதுரை அழகராக வரும் வினோத்திற்கு ஒரு செண்டிமெண்ட் எபிசோட் மனதில் நிற்கிறது.
படத்தின் ஆரம்பக் காட்சிகள் மேலோட்டமாக பயணித்தாலும் இடைவேளைக்குப் பின்பு திரைக்கதைக்கு வேகம் கொடுத்து சமாளித்திருக்கிறார் அனந்த். அதே போல் இளைஞர்கள்—இளைஞிகள் பட்டாளம் இருந்தாலும் முகம் சுளிக்கும்படியான காட்சிகளை வைக்காத டைரக்டர் அனந்த்க்கு சபாஷ் போடலாம்.
லவ் சாங்கிலும் எமோஷனல் சாங்கிலும் பல காட்சிகளில் பின்னணி இசையிலும் கவனம் ஈர்க்கிறார் காசிஃப்.
2 கே கிட்ஸ்களுக்கு பிடித்தமானவன் இந்த ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’.
–மதுரை மாறன்