அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

‘பேட்டில்’ பெண்ணியப் பார்வையில் ஆய்விற்கு உட்படுத்த வேண்டிய தமிழ்த் திரைப்படம்!

திருச்சியில் அடகு நகையை விற்க

“வெள்ளிக்கிழமை பகல் பதினோரு மணிக்கு வாங்க”  என்ற அழைப்பை ஏற்று ‘பேட்டில்’ பார்க்க காசி போனேன்.

விவேகானந்தர் இல்லம் பேருந்து நிறுத்தத்தில் சுமார் 10.30 மணியளவில், இமைப் பொழுதில், மாநகரப் பேருந்து தடம் எண் 12G தவறவிட்டேன்.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

(பல சமயங்களில் அது பெசன்ட் சாலை, நடேசன் சாலை வழியக வராமல், கண்ணகி சிலைக்கு பிறகு காமராசர் சாலை வழியாக இராதாகிருஷ்ணன் சாலை சென்றுவிடும், காத்திருந்து ஏமாந்த அனுபவம் உண்டு. சென்னை மாநகரப் பேக்குவரத்து கழகத்தில் இவற்றையெல்லாம் கவனிக்க நிர்வாக ஏற்பாடு இல்லாத காரணத்தால், பயணிகள் தங்களைத் தாங்களே நொந்துக் கொண்டு நடக்கத் தொடங்குவார்கள்).

கையில் பேருந்துக் கட்டணத்திற்கு நாற்பது ரூபாய் சில்லரையாகவும், ரூபாய் ஐநூறு நோட் ஒன்றும் சட்டைப் பையில் இருந்தது. திரையரங்கில் இருக்கைக் கட்டணம் எவ்வளவு இருக்கும் என்று தெரியாது.

2026 யாவரும் கேளீர் ஏப்ரல் மாத இதழ்

வேறு வழியில்லாமல் ஆட்டோ ஓட்டுநர் தோழர் அப்சர் அவர்களை அழைத்தேன். வழக்கமாக தேனாம்பேட்டையில் இருக்கிறேன், நுங்கம்பாக்கத்தில் இருக்கிறேன் என்பவர், பக்கதில் இருக்கிறேன், வருகிறேன் என்று சொல்லி உடன் வந்தார். ‌மிகப் பெரும் ஆச்சரியம். உரிய நேரத்தில் சென்றுவிடலாம் என்ற நம்பிக்கை.

11.05 மணிக்கு காசி சென்றடைந்தேன். ஆட்டோ கட்டணமாக இருநூற்று ஐம்பது தோழர் அப்சர் அவர்களிடம் தந்துவிட்டு,  மீதி பணத்துடன் உள்ளே நுழைந்தேன். கையில் டிக்கெட் தந்து, ‘உள்ளே நேராக போங்க, படம் திரையிடல் தொடங்கி விட்டது’ என்று என்னை அழைத்த நண்பர் கூறினார்.

பேட்டில்இடைவேளையில் பக்கதில் இருந்த நண்பர், “தேனீர் குடிக்க வரவில்லையா”  என்றார். திரையரங்கில் தேனீர் விலை எவ்வளவு இருக்கும் என்று தெரியாது, இருக்கும் பணத்தை தேனீருக்கு தந்துவிட்டால், டிக்கெட் தந்த நண்பருக்கு பணம் எப்படி தருவது? அதனால், இருந்த இடத்தைவிட்டு நகரவில்லை.

படம் முடிந்து வெளியே வந்ததும் நண்பரிடம் ₹200/- தந்த பிறகே நிம்மதியடைந்தேன்.

புத்தகமாக இருந்தாலும், நிகழ்கலையாக இருந்தாலும், திரைப்படமாக இருந்தாலும் அதற்குரிய பணத்தை தந்து விடுவது எனது வழக்கம். பல நேரங்களில் கையில் பணம் இருக்காது, அத்தகைய சூழலில் வருத்தமாகதான் இருக்கும்.

இயக்குநர் நாராயணன் பழநி அவர்களையும் அழைத்துக் கொண்டு சில நண்பர்களுக்கு  திரையரங்கின் எதிரில் இருந்த கடையில் தோழர் உதயன் தேனீர் வாங்கித் தந்தார். இயக்குநருடன்  மகிழ்ச்சியாக உரையாடிக் கொண்டே தேனீர் பருகிவிட்டு புறப்பட்டேன்.

திரைப்படம் பார்த்துவிட்டு, படம் குறித்து எழுதும் போது வந்த கதை, போன கதை ரொம்ப அவசியமா? என்று வாசிப்பவருக்கு தோன்றலாம்.

நான் திரைவிமர்சகன் அல்ல. அதனால் பொறுத்துக்கொள்ளவும். ‌

பொதுவாக திரையரங்குகளில் திரைப்படம் வெளி வருவதற்கு முன்பாக போடப்படும் சிறப்புக் காட்சிகளுக்கு நன்கு அறிந்த நண்பர்கள் அழைப்பார்கள். அப்போது டிக்கெட் குறித்த கவலை இல்லை‌.

திரையரங்குகளில் வெளிவந்த ‘பேட்டில்’ திரைப்படத்தின் முதல் காட்சிக்கு சென்றுள்ளேன். முதல் காட்சியை பார்க்க வருபவர்கள் பணம் கொடுத்து டிக்கெட் வாங்குவதுதான் திரைப்படத்திற்கு தரும் மரியாதை என்பது எனது கருத்து. இதை மற்றவர்கள் ஏற்கலாம், ஏற்காமல் போகலாம்.

இவ்வளவு விவரத்தை கூற வேண்டிய அவசியம் என்ன?  என்று கேள்வி எழலாம்.

சென்னை நகரில் திரையரங்கம் சென்று ஒரு நபர் திரைப்படம் பார்க்க வேண்டும் என்றால்,  அவரின் ஊதியத்தில் அது சாத்தியமானது அல்ல. அந்த அளவிற்கு பிரம்மாண்டம் என்ற பெயரில் திரையரங்குகள் மக்களிடம் இருந்து விலகி நிற்கிறது.

1970, 80, 90 களில் இருந்த வெல்லிங்கடன், பிளாசா, காமதேனு, பாரகன், சித்ரா போன்ற திரையங்குகள் இயல்பான உழைக்கும் மக்கள் சென்று படம் பார்த்த திரையரங்குகள்.  இன்றைய சென்னையில் அவ்வாறான திரையரங்குகள் இல்லை.

தொழில்நுட்பம் வளர்ந்து, பன்னாட்டு பெருமுதலாளிகள் (அது உள்ளூர் காரராக கூட இருக்கலாம்) கையில் திரையரங்குகள் சிக்கிக் கொண்ட பிறகு, திரையரங்குகள் மட்டுமல்ல, திரைப்படங்களும் மக்களின் இயல்பான வாழாக்கைக்கு அன்னியப்பட்டுதான் இருக்கிறது.

மூன்னூறு ரூபாய் தினக் கூலி வாங்க போராடும் ரசிகானிடம் 300 கோடி ஊதியம் வாங்குவதாக வெட்கமில்லாமல் பிதற்றிக் கொள்ளும் கதாநாயகன்களை வைத்து படம் எடுத்தால்,  பிரம்மாண்டத்தைக் காட்டிதானே ரசிகனிடம் பணத்தை கறக்க முடியும்?

பெருமுதலாளிகளின் சூதாட்டமாக திரைத் துறை மாறிவிட்ட சூழலில், தொழிலாளர் வர்க்கப் போராட்டத்தில் முன்னணிக் களப் போராளியாக திகழும் ஒருவர் திரைப்படத்தை இயக்கி, அத்திரைப்படம் திரையரங்குகளில் வெளிவருவது அவ்வளவு எளிதான காரியமல்ல.

‘பேட்டில்’ திரையரங்குகளில் வெளிவந்தது மட்டுமல்ல, சென்னை காசி திரையரங்கில், கிட்டத்தட்ட அவுஸ் புல் காட்சியாக, பெரும் ஆரவாரத்துடன் ரசிகர்கள் காட்சிகளை ரசித்த படமாக முதல் காட்சி ஓடியுள்ளதே படத்தின் பெரும் வெற்றியாக நான் கருதுகிறேன்.

சென்னை, மயிலாப்பூர், விசாலாட்சித் தோட்டம் கலைத்துறைக்கு பலரைத் தந்துள்ளது. திரைத்துறையில் இசையமைப்பாளர் தேவா அவர்களைத் தந்து, தனக்கென்று திரை வானில் தனித்த இடத்தை பிடித்துக் கொண்ட பகுதி என்றால் மிகையாகாது.

விசாலாட்சித் தோட்டத்து செம்மலர் பூங்காவான புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார் இரவு பாடசாலையில் உருவான நாராயணன் பழநி திரை உலகில்  இயக்குநராக கால் பதிந்துள்ளார்.

திரு‌ கே. பாஸ்கரன் அவர்களின் தயாரிப்பில் திரு. நாராயணன் பழநி இயக்கத்தில் வெளிவந்துள்ள‌ ‘பேட்டில்’ திரைப்படம் மக்களின் இயல்பான வாழ்க்கையை தொழிலாளர் வர்க்க அழகியலுடன் வெளிப்படுத்துகிறது.

திரைப்படத்தின் தொழில் நுட்பக் கலைஞர்கள் தொடங்கி இருபால் நடிகர்கள் வரை அனைவரும் ஒரே மனநிலையில் இணைந்து கூட்டாக செயல்பட்டுள்ளதை வெள்ளித்திரையில் உணர முடிந்தது.

தொழில்நுட்பம் சார்ந்த விமர்சனங்களுக்கு செல்லாமல் (அது குறித்த அறிவு எனக்கு இல்லை என்பதே உண்மை) ஒரு இயல்பான பார்வையாளனாக இந்த திரைப்படத்தை நோக்குகிறேன்.

கல்வி ஒரு பெரும் அரசியல் நடவடிக்கை‌. காலம் தோறும் கல்வி ஆளும் வர்க்கத்தின் சிந்தனை ஓட்டத்திற்கு ஏற்பவே இருந்தது. இருக்கிறது.

முதன்முதலில் மக்களிடம் செல்லுங்கள், மக்களிடம் உரையாடுங்கள், மக்களிடம் கற்று, மக்களிடமே அதை வெளிப்படுத்துங்கள் என்ற உரையாடல் கற்றல் முறையை, மக்களின் வாழ்வியல் போராட்டத்தில் இருந்து கற்க வேண்டிய அவசியத்தை புத்தர் அறிமுகப்படுத்தினார்.

புத்தர் தொடங்கி  பாவ்லோ பிரையர் வரை பலரும் முன்வைத்த உரையாடல் கல்விமுறை இன்னும் நமக்கு எட்டாகனியே.

இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் வணிகச் சந்தை கல்வியை சூறையாடத் தொடங்கியது. இருபத்தியோராம் நூற்றாண்டில் பன்னாட்டு நிதிமூலதனத்தின் பிடி வணிகச் சந்தையை இறுக்கிவிட்டது. அதன் பிடியில் கல்வி சிக்கித் தவிக்கிறது. பண முதலாளிகளின் வேட்டைக்காடாக கல்வி நிறுவனங்கள் இன்று செயல்படுவதை அனுபவ ரீதியாக மக்கள் உணர்ந்துள்ளனர்.

உணர்ந்தாலும் ஏதும் செய்ய இயலாதவர்களாக கையறு நிலையில் மக்கள் நிற்கிறார்கள். அரசியலற்றவராகளாக மக்கள் இன்று உள்ளார்கள் என்றால், அத்தகைய மக்கள் திரளை உருவாக்கி சாதனைப் படைத்ததும் வணிக வளாகங்களாக செயல்படும் கல்விக் கூடங்களே.

இந்திய மாணவர் சங்கத்தின் (SFI) காத்திரமான செயல்பாட்டளராக தனது  மாணவர் பருவத்தில்  செயல்பட்ட நாராயணன் பழநி அவர்களின் நெஞ்சில் ஆழப்பதிந்திருந்த பெருங் கோபம், ஒரு திரைப்படமாக வெளிவந்துள்ளது‌.

கூத்தம்பாக்கம் SFI மூகாமில் நாராயணன் தயாரித்து வழங்கிய நாடகம் அன்றைய மாணவர்களை பெரிதும் ஈர்த்தது. இதை பெருமையுடன் அவரின் சகத் தோழர் சி‌. எம். ஏழுமலை இன்றும் நினைவுகூருவார்.

சென்னைப் புதுக் கல்லூரியில் பயின்ற போது, கல்லூரி வாயிலில் கொடிக் கம்பம் நட்டு இந்திய மாணவர் சங்கத்தின் கொடியை ஏற்றியது இன்றும் மாணவர் வரலாற்றில் ஆழப் பதிந்துள்ள செய்தி.

“கூட்டாக செயல்பட்டால் வெற்றியடைய முடியும்”  என்ற இயகங்கவியல் கோட்பாட்டை, மாணவ பருவத்தில் சி.எம். ஏழுமலை, சுதந்திர குமார், நாராயணன் போன்றவர்கள், கற்றுத் தெளிந்தனர். தோழர் க. மாதவ் போன்ற முன்னணி மார்க்சிய ஆசிரியர்கள் தந்த உத்வேகம் இளம் மக்கள் தலைவர்கள் உருவாகும் சூழலை அமைத்துத் தந்தது. தோழர் வே. மீனாட்சிசுந்தரம், தோழர் எஸ். ஏ. பெருமாள் போன்ற மார்க்சிய அறிஞர்கள் இளைஞர்களின் கூர்மையான விமர்சனங்களை விவாதமாக்கி அவர்களின் அறிவை விரிவடையச் செய்தனர்.

அத்தகைய மார்க்ஸ்சிய பட்டறையில் வளர்ந்த நாராயணன் பழநி அவர்கள் தனது கலைத்திறனைப் பயன்படுத்தி சமூக சிக்கலை பேச முற்பட்டிருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

ஒரு பெரும் எரிமலையின் சிறிய தூசியை மட்டும் கருவாக எடுத்து படமாக்கியுள்ளார் இயக்குநர். எரிமலையின் கனமான பகுதிகளை தொடாமல் விட்டாரே என்று கல்வி வணிக நிறுவனங்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொள்ளலாம்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

1970, 80களில் சென்னை நகரத்தின் உழைக்கும் மக்களின் குழந்தைகள் சண்டைக் கலையில் ஆர்வத்துடன் பயிற்சி மேற்கொள்வார்கள். வடசென்னை குத்துச்சண்டைக்கு மிகவும் பிரபலம். தென் சென்னை, வட சென்னை இரண்டு பகுதிகளிலும் விளையாட்டில் பொதுவாக கபடி. தென் சென்னையில் கராத்தே பிரபலமடைந்தது. புரூஸ் லீயின் ‘என்டர் தி டிராகன்’ திரைப்படம் ஒரு காரணமாக இருக்கலாம்.

பல தலைமுறைகளாக சமூக ஒடுக்குமுறை, கல்வி மறுப்பு ஆகியற்றுக்குள்ளாகிய உழைக்கின்ற மக்களின் வாழ்வியலில் பொருளாதார நெருக்கடி கூடுதல் சவாலாகும். இத்தகையச் சூழல், உழைக்கின்ற மக்களின் குழந்தைகளை பெரும் பாதிப்பிற்கு உள்ளாக்கியது.

அதன் விளைவு, ஏதோ ஒரு வளர்ச்சி குறைபாடு குழந்தைகளிடம் காணப்படும். அந்த குறைபாட்டை களைய பெற்றோர் பெரும் முயற்சி மேற் கொள்வார்கள். தங்களுக்கு தெரிந்த, தாங்கள் கேள்விப்பட்ட, தங்களுக்கு கூறப்பட்ட அறிவுரை ஆகியவற்றைக் கொண்டு, தங்களால் முடிந்த அனைத்தையும் செய்து பார்ப்பார்கள்‌.

அத்தகைய சூழலில் வளர்ந்த ஒரு தொழிலாளியின் மகனின் வாழ்க்கைப் போராட்டமே கதைக்களம்.

பேச்சு வராத நிலையில் இருந்து வேகமாக பேசும் ஆற்றல் பெறும் குழந்தை, மாணவப் பருவத்திலேயே கராத்தே வீரனாகிறான்.

புரூஸ் லீ படம் பார்த்தவர்களுக்கு நன்சாகூ (Nunchaku) கொண்டு சண்டையிடத் தெரிந்தால், நன்சாகூ சூழற்றுபவன் அருகில் யாரும் நெருங்க முடியாது என்பதை புரிந்திருப்பார்கள்.

எந்த ஆயுதமும் இல்லாமல் கை, கால் முடக்கும் கராத்தே அடி கொடுக்க பயிற்சி மேற்கொண்டவர்கள், பலரை ஒரே நேரத்தில் எதிர்கொள்ள முடியும்.

பாடும் திறன், சண்டைப் பயிற்சி ஆகிய இரண்டும் பெற்ற வாலிபன் காதல் வயப்படுவதும், காதலியின் பணியிடத்தில் ஏற்படும் சிக்கலில், காதலிக்காக களமிறங்க வேண்டிய சூழலுமே கதையின் போக்கு.

தனியார் பள்ளி என்றால் பெரிய கேட். பள்ளி வேலை நேரத்தில் பூட்டிக்கிடக்கும் கேட், மாலையில் திறக்கும் போது, நுழைய முடியாமல் அதற்கு வெளியே நின்று, தனது  குழந்தை வருகிறாத என்று எட்டிப் பார்ப்பதில் ஐஏஎஸ் , ஐபிஎஸ் அதிகாரிகள் தொடங்கி, அவர்களின் வாகன ஓட்டுநர் வரை அனைவருக்கும் மகிழ்ச்சியும் பெருமையும்.  இத்தகைய சமத்துவத்தை வேறு எங்கெல்லாம் காண முடியும் என்பதை அவரவர் அனுபவம்தான் சொல்லவேண்டும்.

பள்ளிக்குள் என்ன நடந்தது, குழந்தை ஏன் முகம் வாடி வருகிறது, எதையும் பேச குழந்தை ஏன் தயங்குகிறது, அப்படியே பேசினாலும், அதன் பேச்சில் ஒரு குற்றம் கண்டு பிடித்து, குழந்தையையே குற்றவாளி ஆக்குவது,

இத்தகைய சூழலில், குழந்தையின் பார்வையில் இருந்து என்றைக்காவது ஒரு பள்ளிக் கூடத்தின் செயல்பாட்டை கவனித்து இருக்கிறோமா? நம் மனசாட்சியிடம் நாமே கேட்க வேண்டிய கேள்வி.

மேற்கத்திய நாடுகளில் புகழ்பெற்ற மைக்கேல் ஜாக்சன் தொடங்கி, சென்னையின் புளியந்தோப்பு பழநி வரை உழைக்கின்ற மக்களின் வாழ்வியலை  இசையாக நம் கண் முன்நிறுத்திய ஆளுமைகளின் வாழ்க்கைப் போராட்டம் அவ்வளவு எளிதானதல்ல.

அதே போன்றதொரு போராட்டம் தான் கதாநாயகனின் ராப் இசை பயணம்.  தனது கனவு நனவாகையில் காதலி மூலம் சந்திக்க நேரிடும் இன்னோரு போராட்டம்.

இவை இரண்டிலும் சினிமாத்தனம் இல்லாத, விரசமில்லாத கதை நகர்வு இயக்குநரின் சமூகப் பொறுப்பை காட்டுகிறது.

ராப் பாடகன் திடிரொன சண்டையிட்டு தப்பிக்க முடியுமா? படத்தின் முற்பகுதியில், வீட்டில் மாட்டியுள்ள ஒரு புகைப்படத்தை கதாநாயகிக்கு கதாநாயகனின் அம்மா காட்டும் காட்சியின் மூலம் விடை கிடைக்கிறது.

பெரும் பணக்காரராக வேண்டும் என்ற கனவுடன் வாய்ப்பு தேடும் மேட்டுக் குடித்தன்மையுடன் வாழும் ஒரு குடும்பத்துடன், தொழில் ரீதியாக பயணம் செய்ய நேரிடும் போது ஏற்படும் இயல்பான அன்பு, தோழமை, சண்டை ஒவ்வொன்றிலும், உண்மையான விவரங்களை மட்டுமே காட்சிப்படுத்தியுள்ளதன் மூலம், ஒவ்வொரு தொழிலையும் ஆழ்ந்து கவனித்து, அதன் போக்கை உள்வாங்கி, தனது படைப்பில் இயக்குநர் வெளிப்படுத்தியுள்ளார் என்பதை நம்மால் உணர முடிகிறது.

ஆத்திரத்தில் செய்வதறியாமல், அளவிற்கு அதிகமாக குடித்துவிட்டு, தொழில் ரீதியாக தோழமையுடன் பழகும் பெண்ணுடன், ஆணாதிக்க திமிரை கதாநாயகன் காட்ட முற்படும் இடத்தில், எந்த வகையிலும் பதற்றப்படாமல் அவன் யார் என்பதை அவனுக்கு அத்த பெண் உணர்த்தும் காட்சி இயக்குநருக்கு இருக்கும் பெண்ணியப் பார்வையை வெளிப்படுத்துகிறது.

இந்த காட்சி இயக்குநர் மீது பெரும் மதிப்பை ஏற்படுத்திய‌து. பேட்டில் திரைப்படத்தின் மிகச் சிறந்த காட்சியாக இந்த காட்சி எனது மனதில் பதிந்தது.

1982ம் ஆண்டு இலண்டன் பக்கிங்காம் அரண்மனையில் அரசியின் படுக்கை அறைக்குள் இரவில் நுழைந்து, படுக்கை ஓரம் அமர்ந்திருந்த இளைஞரை, இரண்டாம் எலிசபெத் மகாராணி பதற்றமடையாமல் கையாண்டதை யாரும் மறந்துவிட முடியாது. அந்த நபர் குற்றவாளியாக கைது செய்யப்படாமல் மனநல ஆலோசனைக்கு அனுப்பப்பட்டார் என்பதை அறிவோம்.

இந்தியாவில் கலை உலகத்தில் பிரபலமடையும் பெண்களை இழிவாக, தனிமனித ஒழுக்கம் இல்லாதவர்களாக சித்தரிக்கும் போக்கு உள்ள சூழலில், ஒரு இசை நிறுவனத்தின் நிர்வாகி ஒருவர், ஆணுக்கு நிகராக‌ அனைத்தையும் செய்யும் கதாபாத்திரம், சுய ஒழுக்கத்தில் நெருப்பைப் போல், யாரும் தவறான நோக்கத்திற்கு தனது உடலை பயன்படுத்திவிட முடியாத அளவில் வாழ்வதை இயக்குநர் சிறப்பாக காட்சிப் படுத்தியுள்ளது மிகப் பெரும் சிறப்பு. ஆண் – பெண் சமத்துவம், சரிநிகர் வாழ்க்கை ஆகியவை எந்த வகையிலும் ஒழுக்கக் கேட்டிற்கு வழிவகுக்காது என்ற இயல்பான உண்மையை இயக்குநர் மிக அழகாக பதிவு செய்துள்ளார்.

பெண்ணியம் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளும் அனைவரும் இந்த காட்சியை ஆய்விற்கு உட்படுத்த வேண்டும். ஏன் இத்தகையச் சிந்தனை மக்களுக்கு இல்லாமல் போனது என்ற கேள்வியை எழுப்ப வேண்டும்.

கதாநாயகனின் திடீர் பாலியல் வன்முறையால் பதற்றமடையாதது மட்டுமல்ல, அவனுக்கு, அவன் யார் என்பதை உணர்த்தி, தனது நிறுவனத்திற்கு பொருளாதார ரீதியில் பெரும் நஷ்டம் ஏற்படும் என்று தெரிந்தும், கதாநாயகனை அவனின் காதலியை காண அனுப்புவது உண்மையான தொழிலாளர் வர்க்க பெண்ணிய குணாதிசயம்.

உலகெங்கும் கருப்பு தோல் கொண்ட மக்கள் பெரும் துயரத்திற்கு உள்ளாகி உள்ளனர். கடுமையான உழைப்பு, தோலை மேலும் கருப்பாக்கும். தொழிலாளர் வர்க்கத்தின் துயரங்களை பிரதிநிதிப்படுத்தும் நிறமாக கருப்பு அமைந்துவிட்டது.

கதாநாயகனுக்கு சிக்கலை உணர்த்துகிறது கருப்பு. எதற்கு கருப்பு நிறத்தில் (WhatsApp Display Photograph) உனது  செயலியில் படத்தை வைத்திருக்கிறாய் என்று கதாநாயகன் கேட்கிறார். தனது துயரத்தை கூறும் கதாநாயகி, படத்தின் இறுதி காட்சியில் துயரத்திற்கு தீர்வு சிவப்புதான் என்பதை சிவப்பு துப்பட்டா எடுத்து அணிவதில் வெளிப்படுத்துகிறார்.

பகத் சிங் தன்னை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் கொல்லுவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு, ஒரு புத்தகம் வாசித்துக் கொண்டிருந்தார். சிக்கலுக்கு தீர்வு எந்த தத்துவம் வழங்கும் என்பதை தான் மிகவும் நேசித்த இந்திய இளைஞர்களுக்கு உணர்த்தியது அந்த இறுதி வாசிப்பு.  புத்தகத்தின் மூலம் இறுதியாக தோழர் லெனின் அவர்களுடன் தோழர் பகத் சிங் உரையாடினார் என்பதே  இந்திய இளைஞர்களுக்கு தோழர் பகத் சிங் தெரிவித்த செய்தி. அனைத்து வகையான துயரங்களுக்கும் சோவியத் புரட்சியை வழிநடத்திய தத்துவமே திர்வு என்பது வரலாறு உணர்த்தும் பாடம்.

பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு
பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு

தோழர் பகத் சிங் வரலாற்றை வாசித்ததின் வெளிப்பாடாக, படத்தின் இறுதி கட்டத்தில், சிவப்பு உடையுடன் ஆளும் வர்க்கத்தூடன் கதாநாயகி விவாதிக்கும் காட்சி முலம், போராடும் இளைஞர்களுக்கு சரியான திசை வழியைக் காட்டுகிறார் இயக்குநர் நாராயணன் பழநி.

கறுப்பு துப்பாட்டா அணிய தொடங்கிய கதாநாயகியின் உடையானது முழுவதுமாக சிவப்பாக மாறுகிறது. சிவப்பு உடையில் கதாநாயகி அரசின் தலைமையுடன் விவாதிக்கும் காட்சியே நாராயணன் பழநி முன்வைக்கும் அரசியல்.

இந்த படத்தின் இசையமைப்பாளர், படப்பதிவாளர், படத் தொகுப்பாளர், உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்கள், பாடலாசிரியர் உள்ளிட்ட பல்வேறு பங்களிப்பு செய்தவர்கள் அனைவரும் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பு, நேரம், வசதி ஆகியவற்றை கொண்டு மிகச் சிறந்த பங்களிப்பை படத்திற்கு வழங்கி உள்ளனர்.

கதாநாயகன், கதாநாயகி உட்பட நடிகர்கள் அனைவரும் நல்ல திறமைசாலிகள் என்பதை நிரூபித்துள்ளனர். ஒவ்வொரும் கதாபாத்திரமாகவே மாறியுள்ளது நடிப்பு ஆற்றலின் வெளிப்பாடு.

சமூகத்திற்கு ஒரு நல்ல திரைப்படத்தைத் தந்தோம் என்ற மனநிறைவை தயாரிப்பாளர் பெறும் வகையில் படம் உருவாகி உள்ளது. திரைப்படத்தின் தயாரிப்பாளர் திரு‌ கே‌. பாஸ்கரன் அவர்கள் இருபத்தியோராம் நூற்றாண்டில் பேசப்படும் மிக முக்கியமான படத்தை தயாரித்துள்ளோம் என்ற கர்வம் கொள்ளலாம்.

இயக்குநர் இமயம் பாரதிராஜாவிற்கு, “நமது முதல் படத்தில் ஒரு காட்சியிலாவது  நாம் நடிக்க வேண்டும்”  என்ற ஆசை இருந்தது. ‘கிழக்கே போகும் இரயில்’ திரைபடத்தில் கடைசி காட்சியில் ரயில் புறப்பட மணியடிக்கும் ஸ்டேஷன் மாஸ்டராக நடித்து இருப்பார்.

பல்வேறு திறன்கள் கொண்ட திரு. நாராயணன் பழநி அவர்களுக்கு அதே ஆசை இருந்துள்ளது.   தனது இயக்கத்தில் வெளி வரும், தனது முதல் படத்தில், ஒரு பாடல் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளராக ஒரு காட்சியில் நடித்து விட்டார்.

என் அருமை தமிழ் மக்களே, பாரதிராஜா தொட்ட சிகரத்தைத் தாண்டி, தமிழ்த் திரையுலகில் வானத்தை தொட அனைத்து வகையான திறமைகளும் பெற்ற இயக்குநர் நாராயணன் பழநி அவர்களின் முதல் படம் முழு வெற்றி.

இந்த படத்தின் அனுபவத்தில் இருந்து, இன்னும் பல சிறப்புகளை, அவரின் அடுத்தடுத்த படங்களில் நாம் எதிர்பார்க்கலாம்.

 

பு. பா‌. பிரின்ஸ் கஜேந்திர பாபு

பொதுச் செயலாளர்,

பொதுப் பள்ளிக்கான மாநில மேடை

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.