நியோமேக்ஸ் : அவசர செய்தி! ஜூலை – 10 : புகார் கொடுக்க இதுதான் கடைசி வாய்ப்பு !
நியோமேக்ஸ் | அவசர செய்தி ⚠️ ஜூலை – 10 புகார் கொடுக்க இதுதான் கடைசி வாய்ப்பு !
நியோமேக்ஸ் வழக்கு விவகாரத்தில், பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் தரப்பில் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில், இறுதி வாய்ப்பாக ஜூலை-10 ஆம் தேதி வரையில் புகார் அளிப்பதற்கான வாய்ப்பை வழங்கியிருக்கிறது, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.
வழக்கின் தொடக்க காலத்தில், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் யாருடைய அச்சுறுத்தல் இன்றி சுதந்திரமாக புகார் அளிப்பதை உத்தரவாதப்படுத்த பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசாரே மனு மேளாக்களை நடத்தினார்கள். அதனை தொடர்ந்து பல்வேறு வாய்ப்புகளை நீதிமன்றம் வழங்கியும், நியோமேக்ஸ் நிறுவனத்தின் மிரட்டல், நைச்சியமான பேச்சு, மாற்று தீர்வு முறைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் புகார் அளிக்க முன்வராமல் இருந்தனர்.
இன்னும் சொல்லப்போனால், ”புகார் கொடுத்தால் இன்கம்டாக்ஸ் அமலாக்கத்துறை கேள்வி எழுப்பும். வருமானத்துக்கு கணக்கு காட்ட வேண்டி வரும். பெரும் தொகையை அபராதமாக போட்டுவிடுவார்கள்.” என்றெல்லாம் இன்றுவரையில், பூச்சாண்டி காட்டி வரும் சம்பவங்களும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. கோடிகளில் முதலீடு போட்டவர்களையெல்லாம் திருச்சியில் ஹோட்டல் ஒன்றில் சந்திப்பை நடத்தி, மாற்று தீர்வு திட்டங்களை சொன்ன சம்பவங்களும் நடைபெற்றது.

தற்போது, நீதியரசர் பரதசக்ரவர்த்தி நியோமேக்ஸ் வழக்கை முன் நகர்த்தி செல்லும் போக்கை கண்டு, அடுத்தடுத்து பிறப்பிக்கப்ப்படும் உத்தரவுகளையடுத்து நீதிமன்றத்தின் செயல்பாடுகளில் நம்பிக்கை கொண்டு, பலரும் புகார் கொடுக்க முன்வந்திருக்கிறார்கள்.
ஆனாலும், நீதிமன்றத்தின் கடைசி வாய்ப்பு என்பதாக, கடந்த 2025 ஆம் ஆண்டில் அக்-10 என்பதாக தீர்மானிக்கப்பட்ட நிலையில், அதன் பின்னர் புகார் கொடுக்க முன்வந்தாலும் புகாரை அதிகாப்பூர்வமாக ஏற்க முடியாத நிலை நீடித்து வந்தது. அப்போதும் சிலர் ஆனது ஆகட்டும் என்று பதிவு தபாலில், மின்னஞ்சல் வழி புகாரை அனுப்பி வைத்திருந்தனர். நல்வாய்ப்பாக, அத்தகைய புகார்கள் தற்போது ஏற்கப்பட்டிருக்கிறது.
இதன் தொடர்ச்சியாகவே, இந்த வாய்ப்பை தற்போது நீதிமன்றம் வழங்கியிருக்கிறது. இதுவே, இந்த வழக்கில் இறுதி வாய்ப்பு என்பதாக கறாராக குறிப்பிட்டுத்தான் இந்த வாய்ப்பையும் வழங்கியிருக்கிறார், நீதியரசர் பரதசக்ரவர்த்தி.
புகாரை பதிவு செய்வது எப்படி?
சிறப்பு விசாரணை அதிகாரி (நியோமேக்ஸ்),
பொருளாதாரக் குற்றப்பிரிவு அலுவலகம்,
க.எண்: 4/425 ஏ, சங்கரபாண்டியன் நகர்,
பார்க் டவுன்,
தபால்தந்திநகர் விரிவாக்கம்,
மதுரை – 625017
என்ற முகவரியில் நேரில் புகார் அளிக்கலாம்.
அல்லது இதே முகவரிக்கு விரைவுத்தபாலில் புகாரில் அனுப்பி வைக்கலாம். தற்சமயம் தொழில் நிமித்தமாக வெளிமாநிலம் அல்லது வெளிநாடுகளில் தங்கியிருப்பவர்கள் அங்கிருந்தபடியே Eowmadurai2@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு புகாரை அனுப்பி வைக்கலாம்.
புகார் அனுப்பி வைப்பதற்கென்று தனியே பார்மேட் என்று எதுவுமில்லை. உங்களுடைய முழுமையான முகவரி, தொலைபேசி எண், தங்களது முதலீட்டு விவரங்களை பதிவு செய்துவிட்டு, வாய்ப்பிருந்தால் ஏஜெண்டு பற்றிய விவரங்களையும் குறிப்பிட்டு புகார் கடிதம் எழுதினாலே போதுமானது. புகாருடன் மறக்காமல், உங்களுடைய ஆதார் நகல், முதலீடு செய்த பாண்டு / பத்திரங்களின் நகல்கள், வாய்ப்பிருந்தால் உங்களது வங்கி கணக்கின் முகப்பு பக்கத்தின் நகல் ஆகியவற்றை இணைத்து அனுப்பி வைக்க வேண்டும்.
புகாரை பதிவு செய்வது பற்றிய கூடுதல் விவரங்கள் சந்தேகம் ஏதுமிருப்பின், பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசின் உதவி எண்கள் 9080381065 | 8778245559 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
– அங்குசம் புலனாய்வுக்குழு.







Comments are closed, but trackbacks and pingbacks are open.