எம்ஜிஆரின் வித்தியாசமான அனுபவம்…
இந்தி எதிர்ப்பு சிறுபிள்ளைத்தனமானது. பெரியார் பைத்தியக்காரன். தமிழ் மக்களின் தலைவரையும், தமிழர்களின் போராட்டத்தையும் இப்படித்தான் விமர்சித்திருந்தார் முன்னாள் பிரதமர் நேரு.
தி.மு.க. தலைவர்களின் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. முன்னாள் பிரதமர் நேருவிற்குக் கடும் கண்டனத்தைப் பதிவு செய்ய விரும்பிய அண்ணா 1958 ஜனவரியில் நேரு தமிழகம் வரும்போது தன் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் பிரதமர் நேருவிற்குக் கருப்புக்கொடி காட்டவேண்டும் என்று அறிவித்தார்.
சுதாரித்துக்கொண்ட காங்கிரஸ் அரசு திமுகவின் முன்னணி தலைவர்களை முதல் நாளே கைது செய்தது.
சினிமா கலைஞர்களை எவரையும் கைது செய்யவில்லை. முக்கியமாக எம்ஜிஆர் மற்றும் எஸ்எஸ்ஆர் போன்று வெளியில் இருந்து போராட்டத்திற்கான வேலைகளைச் செய்து வரும் வேளையில் விடியற்காலையில் எம்ஜிஆர் வீட்டுக் கதவு தட்டப்பட்டபோது, கண்களைக் கசக்கியபடியே கதவைத் திறந்தார் எம்ஜிஆர்.
எதிரே காவலர்கள் முன்னெச்சரிக்கையாகக் கைது செய்கிறோம் என்று கூறியதும், எம்.ஜி.ஆர் குளித்துவிட்டு அவர்களுடன் புறப்பட்டார். சைதாப்பேட்டை காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
நாற்காலியில் அமரவைக்கப்பட்ட எம்.ஜி.ஆர், அங்கிருந்த காவலர்களிடம் நிறைய கேள்விகள் கேட்டுப் பதில்களைப் பெற்றார்.
போலீஸ் ஜீப் மத்தியச் சிறையை நோக்கிப் புறப்பட்டது. முதல்மாடி, முதல் வகுப்பு சிறை உள்ளே நுழைந்தார் எம்.ஜி.ஆர். ஒட்டடை சூழ்ந்த அறை துருப்பிடித்த ஜன்னல் கம்பிகள், அழுக்கு தோய்ந்த தரை. இரண்டு மண்சட்டிகள், மூட்டைபூச்சியின் துர்நாற்றம், அழுக்கு திணிக்கப்பட்ட மெத்தை, வாசலை எட்டிப்பார்த்தார் எம்.ஜி.ஆர்.
காவலர் சகிதம் எஸ்.எஸ்.ஆர் அழைத்து வரப்பட்டார். இருவருக்கும் ஒரே அறை. மண்சட்டிகளைப் பார்த்ததுமே எஸ்எஸ்ஆருக்கு குமட்டியது. அப்போது எம்.ஜி.ஆர். இங்கேயாவது நாம் இரண்டே பேர்தான்.
மற்ற அறைகளை நினைத்துப் பாருங்கள் என்றார் எம்.ஜி.ஆர். எஸ்எஸ்ஆருக்கு அதன்பின் பேச்சே வரவில்லை. சரியாக மதியம் 12 மணிக்கு சாப்பாடு வந்தது. அலுமினியத் தட்டில் சாதம், அதன்மேல் கொஞ்சம் குழம்பு, ஓரத்தில் காய்கறி, சமாளித்துச் சாப்பிட்டு முடித்தனர்.
மண்பானையிலிருந்து தண்ணீரை டப்பாவைக் கொண்டு மொண்டு குடித்தார் எம்.ஜி.ஆர். இருவரும் பேசிக்கொண்டே இருந்தனர்.
மாலை 4.30 மணிக்குச் சாப்பாடு வந்தது. அதுதான் இரவு சாப்பாடு என்றனர் காவலர்கள். சரியாக 6 மணிக்குக் கதவைப் பூட்டினர் காவலர்கள். இரவு முழுக்கக் கொசுக்கடியில் கழிகிறது. விடிந்தது. காலைக்கடன்களை முடித்துவிட்டு வந்தார் எம்.ஜி.ஆர். ஆனால் எஸ்எஸ்ஆர் திணறிப்போய் விட்டார்.
நிலமையைப் புரிந்து கொண்ட எம்.ஜி.ஆர் ஒரு யோசனை சொன்னார். இனிமேல் சிறை சாப்பாடு வேண்டாம் நம்மைப் பார்க்கவருபவர்கள் கொண்டு வந்து கொடுக்கும் பழங்களைச் சாப்பிட்டுக் கொள்ளலாம்.
காலை சாப்பாட்டு பிரச்சனை இருக்காது. சிறையில் இருக்கும் மற்றத் தலைவர்களைப் பார்ப்பதற்கு அனுமதி இருந்ததால், பகல்பொழுது சுலபமாகக் கழிந்தது. இரவு நேரத்தில்தான் இருளோடு போராட வேண்டி இருந்தது. ஐந்து நாட்கள் கழித்து விடுதலை செய்யப்பட்டார்கள். வித்தியாசமான அனுபவமாக இருந்தது
எம்.ஜி.ஆருக்கு கட்சிக்காக எம்.ஜி.ஆர். சிறை சென்றவரில்லை என்பவர்களுக்கு இது ஒரு சரித்திரச் சான்றாக இன்று வரை வாழ்கிறது.
– ஹரிகிருஷ்ணன்