ஆதிக்க சாதி – ஆணாதிக்க வன்மம் : பட்டியலின பெண் ஊராட்சித் தலைவருக்கு நேர்ந்த அவலம் !
ஆதிக்க சாதி – ஆணாதிக்க வன்மம் : பட்டியலின பெண் ஊராட்சித் தலைவருக்கு நேர்ந்த அவலம் !
சாதிய வன்மத்தோடும் ஆணாதிக்கத் திமிரோடும் பஞ்சாயத்துத் தலைவியான தன்னை பணி செய்யவிடாமல் இடையூறு செய்துவரும் ஆதிக்க சாதியைச் சேர்ந்த துணைத்தலைவர் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கியிருக்கிறார், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகேயுள்ள ஜம்புத்துறைக்கோட்டையின் ஊராட்சி மன்ற பெண் தலைவர் பவுன்தாய் காட்டுராஜா.
இதற்கு முன்னதாக, மாவட்ட ஆட்சியரை சந்தித்து, பவுன்தாய் காட்டுராஜா மீது ஊழல் குற்றச்சாட்டை சுமத்திய துணைத்தலைவர் சிவராமனுக்கு பதிலளிக்கும் விதமாக, தற்போது பத்திரிகையாளர்களை சந்தித்த பவுன்தாய் உண்மையில் நடந்தது என்னவென்பதை விவரித்திருக்கிறார்.
“நான் பட்டியலின பெண் தலைவர் என்பதாலேயே, இதே பகுதியின் ஆதிக்க சாதி வகுப்பைச் சேர்ந்த துணைத்தலைவர் சிவராமன் பதவியேற்கும் நாளிலேயே சாதிய மனோபாவத்துடன் தலைவர் அமரும் சீட்டை விட சற்று உயரமான இருக்கையை கொண்டுவந்து போட்டு அதில்தான் அமருவேன் என்று பிரச்சினை செய்தார். தனது ஆட்களுடன் வந்து அவ்வப்போது கெட்ட வார்த்தைகளில் பேசி தகராறு செய்வார். அவரது தொந்தரவுகள் தொடரவே இது குறித்து போலீசில் நான் அளித்த புகாரின் பேரில் துணைத்தலைவர் சிவராமன் உள்பட 6 பேர் மீது வன்கொடுமைத் தடுப்புச்சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதனால், மேலும் ஆத்திரமுற்ற சிவராமன், ஊராட்சி தலைவரான எனது செயல்பாட்டை முடக்கும் நோக்கத்தில் சுகாதார பணியாளர்களின் சம்பளம் முதல் சாலை,தெரு,விளக்கு குடிநீர் வழங்கல் உள்ளிட்ட அடிப்படை பணிகளுக்குக் கூட கையெழுத்திடாமல் காலம் தாழ்த்தி பல்வேறு குடைச்சல்களை கொடுத்து வந்தார்.
ஒரு கட்டத்தில் இத்தகைய செயல்பாடுகள் அவரது பதவிக்கு ஆபத்தாக முடியும் என்ற நிலையில் அதிகாரிகளின் ஆலோசனையின்பேரில், கடந்த மூன்றரை ஆண்டுகளாக 36-மன்ற உறுப்பினர் கூட்டம் மற்றும் கடைசியாக நடந்த இந்த மாதம் மே1- கிராமசபைக் கூட்டம் வரை 18-கிராமசபை கூட்டங்களிலும் கலந்து கொண்டு அலுவலக கோப்புகளில் கையெழுத்திட்டு வந்திருக்கிறார்.
இந்நிலையில், என்மீது வேண்டுமென்றே ஆதாரமற்ற ஊழல் குற்றச்சாட்டை சுமத்தி வருகிறார். ஊராட்சியில் அனைத்து அரசு திட்ட பணிகளும் அனைத்து வார்டு உறுப்பினர்கள்,வட்டார வளர்ச்சி அலுவலர் மாவட்ட அதிகாரிகள் உட்பட அனைவரும் நேரடி பார்வையில் தான் செய்யப்பட்டு வருகிறது. அரசின் நலத்திட்டங்கள் முதல் அத்தியாவசிய அடிப்படை பணிகள் வரை அரசு உயரதிகாரிகளுக்கு தெரியாமல் எதுவும் செய்ய முடியாது. அப்படியிருக்கையில் சாதிய வன்மம் தீராத சிவராமன் அடிப்படை ஆதாரம் இன்றி ஊழல் புகார் கூறி வருகிறார்.
ஏற்கனவே துணைத் தலைவர் சிவராமன் மீது காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரை திரும்ப பெற வலியுறுத்தி பலர் மூலம் தூதுவிட்டு வந்தார். அதனை திரும்ப பெற நான் மறுத்துவிட்ட நிலையில், தற்போது அவதூறு பரப்பும் வேலையைத் தொடங்கியுள்ளார்.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக அரசும் உரிய நடவடிக்கை எடுத்து பெண் ஊராட்சி மன்ற தலைவர்கள் சுதந்திரமாக செயல்படவும்,பட்டியலின பெண் தலைவர் உரிய பாதுகாப்புடன் பணி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார், பவுன்தாய் காட்டுராஜா.
வாய்கிழிய சமூகநீதி பேசும் தமிழகத்தில், அதுவும் தி.மு.க.வைச் சேர்ந்த பெண் ஊராட்சித் தலைவருக்கே இதுதான் கதியெனில், ஆதிக்க சாதியின் பிடியில் சாமானியனின் நிலை பற்றி சொல்வதற்கில்லை!
ஜெ.ஜெ.