தமிழகத்தில் அகதிகள் முகாமில் உள்ள
இலங்கைத் தமிழர்களுக்கு
‘இரட்டை குடியுரிமை’ வழங்குக!
தமிழகத்தில் அகதிகள் முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை பெற்றுத் தர வேண்டும் என மத்திய, மாநில அரசுகளையும், ஐக்கிய நாடுகள் சபையையும் இடதுசாரிகள் பொதுமேடை வலியுறுத்தியுள்ளது.
இலங்கையில் நடைபெற்ற போரில் முள்ளிவாய்க்கால் பகுதியில் இனப் படுகொலை செய்யப்பட்ட ஈழத் தமிழர்களின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி இடதுசாரிகள் பொதுமேடை சார்பாக தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் எதிரே நடைபெற்றது.
இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளர் துரை.மதிவாணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள், ஈழத் தமிழர்களை படுகொலை செய்த சிங்கள இனவெறி அரசாங்கத்தை, இராணுவத்தை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை வழங்க வேண்டும், தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்,
ஈழப் போரின்போது காணாமல்போன பல்லாயிரக் கணக்கான சிறுவர், சிறுமியர், பெண்கள், முதியவர்கள், ஆண்களைப் பற்றிய உண்மை நிலவரத்தை உலகிற்கு தெரியப்படுத்த வேண்டும், சிங்களவர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்விடங்கள் மீட்கப்பட வேண்டும், தமிழர்கள் குடியேற்றப்பட வேண்டும்,
தமிழ்நாட்டில் அகதிகள் முகாமில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர்களை சுதந்திரமாக வாழ வைக்க வேண்டும், அவர்களுக்கு இரட்டைக் குடியுரிமைப் பெற்றுத் தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இந்நிகழ்ச்சியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் வெ.சேவையா, மாநகர துணைச் செயலாளர் ஆர்.பி.முத்துக்குமரன், முள்ளிவாய்க்கால் இலக்கிய முற்ற தலைவர் பேராசிரியர் வி. பாரி, மக்கள் அதிகாரம் மாவட்டச் செயலாளர் தேவா, தமிழ்த் தேச மக்கள் முன்னணி மாவட்டச் செயலாளர் அருண்சோரி, விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சி மாவட்ட தலைவர் சேவியர், ஆதித் தமிழர் இளைஞர் பேரவை பொறுப்பாளர்கள் பிரேம்குமார் நிவாஸ், சிவா உள்ளிட்டோர் கலந்து கொண்டு தமழீழத்திற்கும், தமிழர்களுக்கும் ஆதரவாக இருப்போம், அவர்களின் சுயஉரிமையைப் பெற துணை நிற்போம் என உறுதி ஏற்றனர்.