பக்கவாத நோயிலிருந்து நம்மை காத்துக் கொள்ளும் வாழ்வியல் முறைகளில் மனதை பாதுகாக்கும் பயிற்சி பற்றி இந்த வாரம் பார்ப்போம்.
இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் மன அமைதி என்பது பலரது வாழ்க்கையில் இல்லாமலேயே போய்விட்டது என்பது மிகவும் வருந்தத்தக்க உண்மை. நம்முடைய மனமானது எப்போழுதும் எதையாவது யோசித்து கொண்டே இருக்கிறது. கடந்த காலத்தின் வெறுப்புகள், தோல்விகள், அவமானங்கள் மற்றும் நண்பர்களினால் நமக்கு ஏற்பட்ட ஏமாற்றங்கள் இவற்றை சுமந்தும், எதிர்காலத்தில் எப்படி இருக்க போகிறோமோ! என்ற பயத்துடனும் இருப்பதனால் நாம் இந்த நிமிடத்தை வாழ மறந்து விடுகிறோம். நமக்கு எது நடந்தாலும் அது வாழ்வின் ஒரு அனுபவமே. அனைத்தையும் கடந்து செல்வதே நமது வாழ்வு என்பதை உணர மறந்து விடுவதே அனைத்து மன உளைச்சலுக்கும் காரணம். இந்த மனப் போராட்டங்களே பல்வேறு வியாதிகளுக்கு முக்கியமாக, பக்கவாத நோய் மற்றும் மாரடைப்புக்கு வித்திடுகிறது.
பணத்தை கொடுத்து வாங்க முடியாத விலைமதிப்பற்றது காலம் மட்டுமே!. எது எப்படியோ, உயர்வோ, தாழ்வோ இந்த நிமிடம் நாம் உயிருடன் இருப்பது மட்டுமே உண்மை என்பதை உணர்ந்து, இந்த கணத்தில் நாம் என்ன வேலை செய்கிறோமோ அதில் கவனம் வைத்து வாழ்ந்தால் மன உலைச்சலை தவிர்க்கலாம். உண்ணும் போது கவனத்தை உணவிலும், நடக்கும் போது கவனத்தை நம் உடல் மீதும், வேலை செய்யும் போது வேலையின் மீதும் கவனத்தை வைத்து சிதறும் நமது எண்ண அலைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.
Dr. அ.வேணி MD., DM (NEURO)
மூளை நரம்பியல் நிபுணர்.
இவ்வளவு அறிவியல் வளர்ச்சிகள் உள்ள இந்த 21-ஆம் நூற்றாண்டிலும் மனம் நம் உடலில் எங்கு உள்ளது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. நம் எண்ணங்கள் எங்கிருந்து வருகிறது என்பது புரியாத புதிரே. அருகில் இருக்கும் நம் குழந்தைகளிடம் சிறுகுழந்தையாய் மாறி விளையாடாமல் ஃபேஸ்புக், வாட்ஸ்-அப் மூலம் பல ஆயிரம் மைல்கள் கடந்து இருக்கும் முகமே தெரியாத நபருடன் எண்ணங்களை பறிமாறுகிறோம். அவர்களின் பதிலுக்காக மனஉளைச்சலுடன் காத்திருக்கிறோம். ஒரு நாளைக்கு தோராயமாக 60,000 எண்ணங்கள் நம்முள் வந்து செல்கின்றன என்றால் நம்ப முடிகிறதா? ஆனால், இதில் 60 சதவிகிதத்திற்கு மேல் தேவையற்ற எண்ணங்களே!..
எனவே, நமது எண்ணங்களை நாம் கவனிக்க வேண்டும். தேவையற்றவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கப் பழக வேண்டும். நான் கூறும் இந்த எண்ணங்களை கவனிக்கும் செயல் கடினமான ஒன்றே!. ஆனால் செய்யக் கூடியதே.
மன அமைதி பெருவதற்கு அடுத்து நாம் செய்ய வேண்டியது தியானம் (Meditation). தியானம் செய்யும் போது நம் மூளையில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்னவென்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. தியானத்தின் போது மூளையின் அதிர்வலைகளின் வேகம் குறைகிறது; ஞாபக திறனுக்கான இடம் அதிமாக தூண்டுப்படுகிறது; எந்த ஒரு செயலையும் சரியான கோணத்தில் பார்க்கும் திறனும்; திட்டமிடும் திறனும்; பக்குவத்துடன் செயல்படும் திறன் மற்றும் முடிவெடுக்கும் திறனும் நம் மூளையில் அதிகரிக்கிறது என்று FMRI (Functional Magnetic Resonence Imaging) மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
தியானம் செய்வதில் பல்வேறு முறைகள் உள்ளது. அதில், ஏதாவது ஒரு முறையை கற்று அதை அன்றாட வாழ்வில் 15 நிமிடங்கள் தினமும் செய்வதற்குப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு தினமும் தியானம் செய்து, நம் எண்ணங்கள் மீது கவனம் செலுத்த ஆரம்பித்தால் மனஅமைதி கிட்டும். அமைதியான மனமே அழகான ஆரோக்கியமான வாழ்வுக்கு வழி வகுக்கும்