பக்கவாதத்திற்கான இயற்பியல் (பிசியோதெரபி) சிகிச்சை முறை
பக்கவாதத்திற்கான இயற்பியல் (பிசியோதெரபி) சிகிச்சை முறை பற்றி இந்த வாரம் பார்ப்போம்.
மூளையின் கட்டளையை ஏற்றே நமது கை, கால்கள் இயங்குகின்றன. மூளையில் இரத்தக் குழாய் அடைப்போ அல்லது கசிவோ ஏற்பட்டால் அந்த பகுதி செய்ய வேண்டிய வேலைகளை செய்யமுடிவதில்லை. எனவே நோயாளிக்கு உடலில் உள்ள எலும்புகள், சதைகள் மற்றும் நரம்புகள் அனைத்தும் நன்முறையில் இருந்தாலும், மூளை கட்டளைகளை பிறப்பிக்காததால் கை கால்கள் செயல்பட மறுக்கின்றன. இந்த செயல்படாத கை கால்களை நாமாக அசைத்து பயிற்சி செய்வது தான் இயற்பியல் சிகிச்சை முறையாகும்.
அதாவது செயல் படாத மூளை பகுதியை இயற்பியல் சிகிச்சையின் உதவியினால் தூண்டி செயல்பட வைக்க முயற்சிப்பதே இப்பயிற்சியின் நோக்கமாகும்.
உதாரணத்திற்கு ஒருவரின் வலது கையில் உள்ள எலும்பு உடைந்து கையில் கட்டு கட்டப்பட்டிருக்கும்போது, வலது கை செய்யும் வேலையையும் சேர்த்து இடது கை செய்ய முயற்சி செய்கிறது. என்னதான் இடது கை நன்முறையில் இருந்தாலும் வலது கை செய்யும் அனைத்து வேலைகளையும் இடது கையால் சிறப்பாக செய்யமுடிவதில்லை.
இதே போலத்தான் நாமும் இயற்பியல் சிகிச்சையின் உதவி கொண்டு செயல்படாத மூளையை தூண்டும் போது, அருகில் உள்ள நல்ல மூளைப் பகுதி தூண்டப்பட்டு செயல்படாத கை, கால்களை ஓரளவுக்கு சரி செய்ய முயற்சியினை மேற்கொள்ளும். எனவே தான் இயற்பியல் சிகிச்சை முறையை எவ்வளவு விரைவாக தொடங்குகிறோமோ, அவ்வளவு விரைவாக முன்னேற்றத்தை எளிதில் நாம் பெற முடியும்.
எனவே 24 மணி நேரத்திற்குள் இயற்பியல் சிகிச்சை முறையை தொடங்க வேண்டும். இயற்பியல் சிகிச்சை முறைகளில் நோயாளியின் அறிகுறிகளின் தன்மைக்கேற்றவாறும், பாதிப்பின் தன்மைக்கேற்றவாரும் சில மாற்றங்கள் செய்யப்படுகிறது.
இயற்பியல் சிகிச்சையின் முறைகள்;
1. Active Physiotherapy (இயற்பியல் சிகிச்சை நிபுணரின் ஆலோசனைப் படி நோயாளி தானாக பயிற்சி மேற்கொள்வது)
2. Passive Physiotherapy (இயற்பியல் சிகிச்சை நிபுணர் நோயாளியின் கை iகால்களை இயக்குவது)
இப்படி கை, கால்களை இயக்குவது மட்டும்தான் இயற்பியல் சிகிச்சை என்று நினைத்துவிட வேண்டாம். Neuro Rehabilitation சிகிச்சையில் ஒரு சிறிய பகுதியே இது. பேச முடியாதவர்களுக்கு பேச்சுப் பயிற்சியும், தள்ளாடி நடப்பவர்களுக்கு Co-ordination பயிற்சியும், நுரையீரலை நன்கு இயங்கச் செய்ய மூச்சுப் பயிற்சியும், மூளையைத் தூண்டும் இசைப்பயிற்சியும், தனது வேலைகளை தானாகவே செய்து கொள்வதற்கான பயிற்சியும், மற்றவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான பயிற்சியும் இயற்பியல் சிகிச்சையில் அடக்கம்.
இயற்பியல் சிகிச்சையினால் ஏற்படும் நன்மைகள்;
பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டோருக்கு மிக விரைவில் இயற்பியல் சிகிச்சை செய்ய வேண்டும். ஏனென்றால் பலவகையான பயிற்சிகள் செய்யும் போது உடலின் இரத்த ஓட்டம் சீராகி தசைகளின் பாதிப்பு பெறுமளவு குறையும். மேலும் பாதிக்கப்பட்ட தசைகள் இயல்பு நிலையை அடைய உதவுகிறது. நோயாளி தன் வேலைகளை பிறர் உதவி இல்லாமல் தானே செய்து கொள்வதற்கும் உதவும். பயிற்சிகள் செய்வதால் இரத்த ஓட்டம் சீராகி இரத்த குழாய்களில் அடைப்பு தடுக்கப்படும்.
நிணநீர் செயல்பாடுகள் அதிகரித்து கால்வீக்கம் வராமல் தடுக்கப்படும். முழுமையான பயிற்சிகள் செய்வதால் தசையில் உள்ள நரம்புகள் தூண்டப்பட்டு மூளையின் செயல்பாடு அதிகரிக்கும். மூச்சு பயிற்சியினால் சுவாசம் சீராகி மூளைக்கு தேவையான பிராணவாயு கிடைக்கும். தசை இறுக்கம் குறைந்து தோற்ற மாறுபாடு சீராகிறது.
இயற்பியல் சிகிச்சையின் போது கவனிக்க வேண்டியவைகள் பற்றி அடுத்த வாரம் பார்ப்போம்.