மாநில அரசின் சத்துணவுத் திட்டத்துக்கு போட்டியாக PM POSHAN திட்டத்தை திணிப்பதா?
மாநில அரசின் சத்துணவுத் திட்டத்துக்கு போட்டியாக PM POSHAN திட்டத்தை திணிப்பதா? செப்டம்பர்-5 ஆசிரியர் தினத்தன்று தமிழகத்தில் எங்கும் இல்லாத வகையில், தன்னிச்சையாக பெரம்பலூர் மாவட்டத்தில் மட்டும் PM POSHAN (MDM) திட்டத்தின் கீழ் தனியாரிடமிருந்து நிதிதிரட்டி பள்ளி மாணவர்களுக்கு தலைவாழை விருந்து படைக்கப்போவதாக, அம்மாவட்ட நிர்வாகமும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளும் அறிவித்திருப்பதற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார், ஐபெட்டோ வா.அண்ணாமலை.
” தலைவர்கள் பிறந்தநாள் என்றால் சர்க்கரைப் பொங்கல் போடுவார்கள் இதுதான் நடைமுறையாகும். தமிழ்நாட்டில் பயிலும் பிள்ளைகள் என்ன அநாதை ஆசிரமத்திலா தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். தமிழ்நாடு அரசு அன்றாடம் பசித்தடையை போக்கி வருகிறது என்பதை உணராதவர்களா பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆட்சியர் அலுவலர்கள்.” என்பதாக கேள்வி எழுப்புகிறார், அவர்.
இந்த விவகாரம் தொடர்பாக, அவர் விடுத்துள்ள அறிக்கையில், “மதிப்புடையீர் வணக்கம். தாங்கள் தலைமைச் செயலாளராக பொறுப்பேற்ற பிறகு மாணவர்கள் கல்வி நலனில் அக்கறை காட்டி வருகிறீர்கள். இரண்டாண்டு காலமாக கல்லூரியில் சேர முடியாமல் தவித்தவர்களை அடையாளம் கண்டு கல்லூரியில் சேர்வதற்கான முயற்சி மேற்கொண்டு வருகிறீர்கள். நெஞ்சம் நெகிழ வரவேற்றுப் பாராட்டுகிறோம்.
சர்வப்பள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் ஆன்மா இவர்களை ஒருபோதும் மன்னிக்காது..!
முன்னாள் குடியரசுத் தலைவர் இந்தியாவிற்கு பெருமையை தேடித் தந்தவர் சர்வப்பள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள் பிறந்த நாள் செப்டம்பர் 5. அவர் பிறந்த நாள் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியா முழுவதும் ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பு செய்து வருகிறார்கள்.
பெரம்பலூர் மாவட்டத்தில் மட்டும் PM POSHAN (MDM) திட்டத்தின் கீழ் சமூக நல ஆணையர் அவர்களின் நேர்முக கடிதம் மற்றும் பெரம்பலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் அறிவுரையின் படி மக்களிடம் நன்கொடையினைப் பெற்று தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் தலைவாழை இலையில் “நல்விருந்து” வழங்க வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்கள். நெஞ்சு பொறுக்குதில்லையே.?
தமிழ்நாட்டில் பெரம்பலூர் மாவட்டத்தில் மட்டும் PM POSHAN திட்டம் என்று தொடங்க முயற்சி செய்கிறார்கள்.
தமிழ்நாட்டில் காலை உணவு திட்டத்தை மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களால் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. நண்பகலில் சத்துணவு திட்டம் தொடர்ந்து சிறப்பாக நடைபெற்று வருகிறது. தலைவர்கள் பிறந்தநாள் என்றால் சர்க்கரைப் பொங்கல் போடுவார்கள் இதுதான் நடைமுறையாகும். தமிழ்நாட்டில் பயிலும் பிள்ளைகள் என்ன அநாதை ஆசிரமத்திலா தங்க வைக்கப் பட்டுள்ளார்கள். தமிழ்நாடு அரசு அன்றாடம் பசித்தடையை போக்கி வருகிறது என்பதை உணராதவர்களா பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆட்சியர் அலுவலர்கள்.
எந்தப் பெருமையினையும் விரும்பாத ஒரு உயர்ந்த மனிதர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள் ஆவார். குடியரசுத் தலைவர் பதவிக்கு பெருமையை தேடித் தந்தவர். அவர் பிறந்த நாளில் நன்கொடையினை பெற்று உணவு வழங்கச் சொல்வது அவரின் கொள்கைக்கு களங்கம் கற்பிக்கின்ற செயல்பாடாகும்.
பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பள்ளிக்கல்வித்துறையால் எந்த உத்தரவும் வராமல் தன்னிச்சையாக இப்படி நடந்து கொள்வது முறையற்ற செயலாகும். உடனடியாக இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடுவதை நிறுத்திக் கொள்ளுமாறு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.
PM POSHAN திட்டத்தில் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு நன்கொடையினை பெற்று உணவு வழங்குவதை நம்மால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. தாங்கள் உடனடியாக தலையிட்டு சமூக நல ஆணையர், பெரம்பலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் இவர்களுக்கு அறிவுரை வழங்குமாறு தமிழக ஆசிரியர் கூட்டணியின் சார்பிலும் ஐபெட்டோ அகில இந்திய அமைப்பின் சார்பிலும் கேட்டுக் கொள்கிறோம்.
மதிப்புமிகு பள்ளிக்கல்வித் துறை செயலாளர் அவர்களும், மதிப்புமிகு பள்ளிக்கல்வி இயக்குனர் அவர்களும், மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களும் பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு அறிவுரை வழங்க வேண்டுமாய் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். போட்டி உணவுத் திட்டத்தை திணிக்க வேண்டாம்.” என்பதாக அந்த அறிக்கையின் வாயிலாக வேண்டுகோள் விடுத்திருக்கிறார், ஐபெட்டோ வா.அண்ணாமலை.
– அங்குசம் செய்திப்பிரிவு.