அங்குசம் பார்வையில் ‘போகுமிடம் வெகு தூரமில்லை’ திரைப்படம் திரைவிமர்சனம் !
அங்குசம் பார்வையில் ‘போகுமிடம் வெகு தூரமில்லை’ திரைப்படம் திரைவிமர்சனம் – தயாரிப்பு : ’ஷார்க் 9 பிக்சர்ஸ்’ சிவா கிலாரி. டைரக்ஷன் : மைக்கேல் கே.ராஜா. நடிகர்—நடிகைகள் : விமல், கருணாஸ், மேரி ரிக்கெட்ஸ், ஆடுகளம் நரேன், பவன், மனோஜ்குமார், வேலராமமூர்த்தி, தீபா சங்கர், அருள்தாஸ், சார்லஸ் வினோத், ‘டிஃபெண்டர்’ தாமோதர கிருஷ்ணன். ஒளிப்பதிவு: டெமில் சேவியர் எட்வர்ட்ஸ், இசை : என்.ஆர்.ரகுநந்தன், ஸ்டண்ட் : மெட்ரோ மகேஷ், எக்ஸ்கியூட்டிவ் தயாரிப்பாளர் : வெங்கி மகி, தயாரிபு நிர்வாகம் : ராகேஷ் ராகவன், பி.ஆர்.ஓ. : சதீஷ் [ எய்ம் ] .
சென்னையில்அமரர் ஊர்தி டிரைவராக இருக்கும் குமார் [ விமல் ] தாய்-தகப்பனை இழந்து அனாதையாக இருக்கும் கலையழகி[ மேரி ரிக்கெட்ஸ்]யை கல்யாணம் செய்து வாழ்வு கொடுக்கிறார். மனைவியை பிரசவத்திற்கு ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கும் நேரம் பார்த்து, சென்னையில் சாலை விபத்தில் மரணமடைந்த திருநெல்வேலி களக்காட்டைச் சேர்ந்த பெரும்புள்ளி நாராயண பெருமாள் தேவரின் உடலை எடுத்துச் செல்லும் சவாரி வருகிறது. பிரசவச் செலவுக்கு உதவும் என்பதால், தனது தாத்தா பொறுப்பில் மனைவியை ஒப்படைத்துவிட்டு, நெல்லைக்கு இரவு நேரம் பாடியுடன் புறப்படுகிறார் விமல்.
கன்னியாகுமரியைச் சேர்ந்த தெருக்கூத்துக் கலைஞனான நளினமூர்த்தி [ கருணாஸ் ] நடுவழியில் விமலிடம் லிஃப்ட் கேட்டு ஏறுகிறார். தெருக்கூத்துக் கலை அழிந்ததையும் தெருக்கூத்துக் கலைஞனின் வாழ்க்கை நசிந்ததையும் விமலிடம் சொல்லியபடியே வருகிறார் நளினமூர்த்தி.
கட் பண்ணா.. அங்கே களக்காட்டில் நாராயணப் பெருமாளின் மூத்த தாரத்து மகன் சங்கரபாண்டியனும் [ ஆடுகளம் நரேன் ], இளையதாரத்து மகன் எசக்கியும் [ பவன் ] அப்பாவுக்கு யார் கொள்ளி வைப்பது என்பதில் எதிரும் புதிருமாக நிற்கிறார்கள்.
கட் பண்ணினா.. இங்கே ஒரு காதல் ஜோடிக்கு வண்டியில் அடைக்கலம் கொடுத்து சிக்கலில் மாட்டுகிறார்கள் விமலும் கருணாஸும். அமரர் ஊர்தியில் இருந்த பிணத்தைத் தூக்கிக் கொண்டு போய்விடுகிறது காதல் ஜோடியைத் தூக்க வைத்த கும்பல். அதன் பின் விமலும் கருணாஸும் என்ன செய்தார்கள்? என்பதன் க்ளைமாக்ஸ் தான் இந்த ‘போகுமிடம் வெகு தூரமில்லை’.
சென்னை பாஷை பேசும் மாறுபட்ட கதாபாத்திரம் விமலுக்கு. மனைவியை ஆஸ்பத்திரியில் விட்டுவிட்டு வந்த சோகம், ஆஸ்பத்திரியில் அதிக பணம் கேட்பதாக பொண்டாட்டி போன் பண்ணியதும் வரும் ஆத்திரம் என நன்றாகவே நடித்திருக்கிறார் விமல். காதல் ஜோடியைக் காப்பாற்ற போராடும் ஒரு ஸ்டண்ட் சீன் மட்டுமே விமலுக்கு. இவரின் மனைவியாக வரும் மேரி ரிக்கெட்ஸும் ஓகே தான்.
படத்தில் டாப் ஸ்கோரர் என்றால் அது கருணாஸ் தான். கூத்துக் கலைஞனான தனது வாழ்க்கை அல்லாடினாலும் சக மனிதனுக்கு உதவினால் நாம் தேவதை போல றெக்கை கட்டிப் பறக்குற மாதிரி கிடைக்கும் சந்தோஷம் பற்றி சிலாகித்துச் சொல்வதாகட்டும், திருநெல்வேலியை நெருங்கும் போது அவர் எடுக்கும் முடிவாகட்டும், கம்பீரமாக நின்றுவிட்டார் கருணாஸ்.
திருநெல்வேலி களக்காட்டில் பவனுக்கும் ஆடுகளம் நரேனுக்குமிடையே நடக்கும் முட்டல்—மோதல், போலீஸ் ஸ்டேஷன் பஞ்சாயத்து, ஜமீன் வேலராமமூர்த்தியின் உறுமல் இந்த வகையில் இருபது நிமிட சீன்களை வெட்டியெறிந்திருந்தால் படத்தின் லெவலே வேற.
இரவிலும் பகலிலும் தேசிய நெடுஞ்சாலைகளில் டெமில் சேவியர் எட்வர்ட்ஸின் கேமரா சிறப்பாகவே இயங்கியிருக்கிறது. என்.ஆர்.ரகுநந்தனின் இசையும் வெகு சிறப்பு.
சக மனிதனுக்கு உதவும் பேரன்புக்கு இணையாக இந்த உலகில் எதுவும் இல்லை என்பதை அழுத்தமாக சொன்னதற்காக டைரக்டர் மைக்கேல் கே.ராஜாவுக்கு சபாஷ்.
—மதுரைமாறன்