காத்திருப்போர் பட்டியலில் டி.எஸ்.பி. … ஆயுதப்படைக்கு இன்ஸ்பெக்டர் … திருப்பத்தூரில் அதிகாரிகளை பந்தாடிய அரசியல் !
”எதிர்க்கட்சி போராட்டத்திற்கு ஆதரவாக செயல்பட்டதால் தான் டிஎஸ்பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்” என்றும்; இல்லையில்லை ”ஆளுங்கட்சி புள்ளிகளுக்கும் மாமூல் போலீஸ்களுக்கும் எதிராக செயல்பட்டதால்தான் இந்த நடவடிக்கை என்றும் பட்டிமன்றமே பரபரக்கிறது, திருப்பத்தூரில்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து, கடந்த டிசம்பர் 30-ந்தேதி திருப்பத்தூர் தாலுக்கா அலுவலகம் முன்பாக அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுத்த நிலையில், ஒன்றுகூடிய அதிமுகவினர் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற அரசு பேருந்தை சிறைபிடித்துள்ளனர். இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆனாலும் தடையை மீறி தாலுக்கா அலுவலகம் முன்பு ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுகவினர் திரண்டு மாஜி மந்திரி வீரமணி தலைமையில் ஆர்பாட்டம் நடத்தினர்.
அப்போது கைது செய்ய வந்த போலீசார்களுக்கும் அதிமுகவினர்களுக்கிடையே தள்ளுமுள்ளும் சலசலப்பும் ஏற்பட்டது. அதிமுகவினர் திரள்வதை தடுக்க உளவுத்துறை போலீசார்கள் தகவல்கள் கொடுத்தும் திருப்பத்தூர் டி.எஸ்.பி. எஸ். ஜெகநாதன் காதில் வாங்காமல் அதிமுகவினர் போராட்டத்திற்கு ஆதரவாகவே செயல்பட்டதாக தலைமைக்கு தகவல்கள் பறந்தன.
இதனையடுத்து வடக்கு மண்டல டி.ஐ.ஜி. அஸ்ராகர்க் உத்தரவின் பேரில் மாவட்ட எஸ்.பி. ஸ்ரேயா குப்தா விசாரணையில் இறங்கினார். இதன்பிறகே, ஜனவரி-2 அன்று டி.எஸ்.பி. காத்திருப்போர் பட்டியலுக்கும் திருப்பத்தூர் நகர இன்ஸ்பெக்டர் ஜெயலெட்சுமி ஆயுதப்படைக்கும் மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், டி.எஸ்.பி.யாக ஜெகநாதன் வந்த பிறகு மாமூல் போலீஸ்களுக்கு தடையாக இருந்ததாகவும்; தனது சர்க்கிளுக்குள் இருக்கும் விடுதிகள், மணல் மாஃபியாக்கள், பட்டாசு கடைகள், கள்ள லாட்டரி விற்பணையாளர்கள் போன்ற பலவகையான போலீஸ் மாமூல்களுக்கு “ஆப்பு” வைத்ததாலேயே, டி.எஸ்.பி.க்கு சரியான தகவல்களை வழங்காமல் அவரை சிக்கலில் மாட்டிவிட்டதாக போலீசு வட்டாரத்தில் சொல்கிறார்கள்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
மேலும், ஆளுங்கட்சி முக்கிய புள்ளிகளுக்கு எதிராக அதிரடி காட்டியதற்காகவும்தான் இந்த நடவடிக்கை என்பதாகவும் ஒரு பேச்சு உலவுகிறது. அதிமுக ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் டி.எஸ்.பி. மற்றும் இன்ஸ்பெக்டருக்கு எதிராக எடுக்கப்பட்டிருக்கும் இந்த நடவடிக்கை திருப்பத்தூர் போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
– மணிகண்டன்.