புத்தாண்டு தொடக்கத்திலேயே பட்டாசு விபத்து – 6 பேர் உடல் சிதறி பலி 2 பேர் காயம் ! சாத்தூர் சோகம் !
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே வீரார்பட்டி பஞ்சாயத்து பொம்மையாபுரம் கிராமத்தில் நாக்பூர் உரிமம் பெற்று 87-க்கும் மேற்பட்ட அறைகளுடன் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுடன் சிவகாசியைச் சேர்ந்த பாலாஜி என்பவருக்கு சொந்தமான சாய்நாத் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இன்று காலை 10 மணி அளவில் தொழிலாளர்கள் வழக்கம்போல் பணிக்கு வந்து பணிகள் நடைபெற்று வந்தது.
அப்போது மூலப்பொருள் கலக்கும் அறையில் மூலப்பொருள் உராய்வின் காரணமாக திடீரென வெடி விபத்து ஏற்பட்டு 4 அறைகள் தரைமட்டமானது. உடனடியாக விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு இடிபாட்டுக்குள் சிக்கியவர்களின் உடலை மீட்டு சிவகாசி மற்றும் விருதுநகர் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் வீரார்பட்டி, செட்டிகுருச்சி, அருப்புக்கோட்டை, பகுதியைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேல்முருகன்(54), நாகராஜ் (37), கண்ணன் (40), சிவக்குமார்(56), மீனாட்சிசுந்தரம்(46), காமராஜ் (54) ஆகிய 6 நபர்களும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகி உள்ளனர்.
மேலும், காயமடைந்த 2 நபர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக வச்சகாரப்பட்டி காவல் நிலையத்தில் ஆலை உரிமையாளர்கள் பாலாஜி, சசிபாலன், மேலாளர் தாஸ், போர்மேன் பிரகாஷ் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து முதல் கட்ட விசாரணையில், உரிமையாளர் பாலாஜி கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் இந்த பட்டாசு ஆலையை விலைக்கு வாங்கியுள்ளதாகவும்; மூலப்பொருள் கலவை செய்யும் பணிக்காக புதிய தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டதாகவும்; போதிய அனுபவம் இல்லாததாலும் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சொல்லப்படுகிறது.
மேலும், இந்த விபத்து குறித்து முழுமையான காரணம் அறிய விசாரணை குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
”2025 ஆம் ஆண்டில் விபத்து இல்லாத பட்டாசு ஆலைகளை உருவாக்குவோம்” என மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் முன்னிலையில் தொழிலாளர்கள், உறுதிமொழி எடுத்துக் கொண்டு உரிய பாதுகாப்பு ஆலோசனை வழங்கப்பட்ட நிலையில், தற்போது புதிய ஆண்டு முதல் மாதத்திலேயே பட்டாசு விபத்து ஏற்பட்டு 6 பேர் பலியாகி உள்ள சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.
— மாரீஸ்வரன்.