விஜய் பிரஸ் மீட்டும் நிருபர் பட்டாபியின் கேள்வியும் !
தமிழகத்திலேயே மிகப் பெரிய பேசு பொருளாகி இருப்பது முதல்வர் விஜய் பத்திரிகையாளர்களை சந்திப்பதில்லை என்பது தான். ஏன் அவர் இப்படி நடந்து கொள்கிறார் என்பதற்கான காரண காரியங்கள் அவருக்கே வெளிச்சம்.
ஆனால் அப்படியான விஜய் 20 ஆண்டுகள் முன்பு நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் நான் பங்கேற்றுள்ளேன்.
அப்போது அவர் நடித்த திரைப்படங்களை விநியோகஸ்தர்கள் வாங்குவதில்லை என்று போர்க்கொடி தூக்கியிருந்தனர். அதாவது அவர் படங்கள் கதை, நடிப்பு, வசனம், ஸ்டைல் எல்லாமே ஒரே மாதிரி உள்ளது. திரையிட்டால் சீக்கிரமே பெட்டிக்குள் போய் விடுகிறது. ஆனால் அதற்கு சம்பந்தமில்லாத ரேட் (கோடிகளில்) பட பூஜையின் போதே வாங்கி விடுகிறார்கள். இதனால் விநியோகஸ்தர்கள் கை நஷ்டப் படுகிறார்கள். கடன்சுமையில் மீட்டர் வட்டிக் கும்பலிடம் சிக்கி தத்தளிக்கிறார்கள்.
இப்படியான இக்கட்டான சூழல் வந்த போது பாபா படத்திற்கு வாங்கின பணத்தை ரஜினிகாந்த் திருப்பிக் கொடுத்தார். அது போல மற்றவர்கள் யாரும் செய்வதில்லை. அந்த வகையில் நாங்கள் அதிக பாதிப்பு அடைவது நடிகர் விஜய் திரைப்படங்களால்தான் என்பதுதான் அவர்கள் போர்க்கொடிக்கான காரணம் என்று என் நினைவில் உள்ளது.
இதற்காக சென்னை கோடம்பாக்கம் முதல் கோவை கோபாலபுரம் (இங்குதான் கோவை – திருப்பூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் அதிகம் உள்ளனர்) வரை அல்லோலப்பட்டது. முதல் நாள் இது சம்பந்தமாக அறிக்கை வெளியிட்டு பத்திரிகையாளர் சந்திப்பையும் நடத்தினார் திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம். அப்போது அவர் விஜய் நடிப்பு ஒவ்வொரு படத்திலும் ஒரே மாதிரியாக இருப்பதாகச் சொல்லி உதாரணங்களை குறிப்பிட்டார்.
அதற்கு அடுத்த நாள் S.A. சந்திரசேகர் மகனுக்கு ஆதரவாக கோவை ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பிரஸ் மீட் தந்தார். அதில் விநியோகஸ்தர், தியேட்டர் உரிமையாளர்கள் குறித்து பல்வேறு விமர்சனங்கள் சொன்னார்.
அன்று மாலையே அதே ஓட்டலில் விஜய்யும் பத்திரிகையாளர்களை சந்தித்தார். கேள்விகள் பலமாக இருந்தது. பதில்கள் வழக்கம் போல் விஜய்யிடம் மென்று மென்று முணு முணுப்பாகவே வந்தது ஞாபகம் உள்ளது. ஆனால் எந்தக் கேள்வியும், பதிலும் என் மனதில் நிற்கவில்லை.
ஆயினும் Win TV நிருபர் பட்டாபி ஏதோ ஒரு கேள்வியை கேட்டார். அநேகமாக அது ஒரு துடுக்குத் தனமான கேள்வியாக இருந்ததாக நினைவு.
அதற்கு விஜய் முகம் மாறியது. சரியாக பதில் சொல்லவில்லை. தொடர்ந்து பட்டாபியிடம் துணைக் கேள்வி. கூடவே மற்ற பத்திரிகையாளர்களிடம் சரமாரி கேள்விகள். ஒன்றிரண்டுக்கு ஓரிரு வார்த்தைகளில் பதில் கொடுத்து விட்டு பிரஸ் மீட்டை முடித்துக் கொண்டார் விஜய்.
அவர் அந்த மீட்டிங்கிலிருந்து வெளியேறும்போது நிருபர் பட்டாபியைத் தாண்டித்தான் செல்ல வேண்டியிருந்தது. அப்படி செல்லும் போது பட்டாபியை நெருங்கி நின்றார் விஜய்.

ஒரு கை நீட்டி பட்டாபி நெஞ்சில் ஒற்றை விரலை வைத்து அழுத்தி ஏதோ முணு முணுத்தார். அவர் முகத்தில் எந்த ஒரு உணர்ச்சியும் தெரியவில்லை.
ஆனால் பட்டாபி முகம் ஒரு மாதிரி பேயரைந்த மாதிரி ஆனது. விஜய் சென்ற பிறகு நாங்கள் ஓரிருவர் பட்டாபியை சூழ்ந்து கொண்டு ‘விஜய் என்ன சொன்னார்? என்ன சொன்னார்’ என்று கேட்டனர்.
அப்படிக் கேட்டவர்களில் நானும் ஒருவன். பட்டாபி விஜய் சொன்னதாகச் சொன்னது இன்று வரை எனக்கு மறக்கவில்லை.
அப்படிப்பட்ட பதிலுக்குரிய விஜய் CM ஆவார் என்று நாங்கள் யாரும் நினைத்திருக்கவில்லை. அவரும் கூட நினைத்திருக்க மாட்டார்.
அதற்குப் பிறகு இன்று வரை கூட விஜய் பிரஸ் மீட் கொடுத்த மாதிரி என் நினைவில் இல்லை.
சரி, விஜய் பட்டாபியிடம் என்ன சொன்னார் என்பதுதானே நீங்கள் கேட்கும் கேள்வி. அதை அன்றைய தினம் பிரஸ்மீட்டில் பங்கேற்ற பத்திரிகையாளர்கள் கமெண்ட்டில் சொன்னால் நன்றாக இருக்கும்.
அதை விட அந்த நிருபர் பட்டாபியே இப்போது சொன்னால் மிகப் பொருத்தமாக இருக்கும்.
– கா.சு. வேலாயுதன்






Comments are closed, but trackbacks and pingbacks are open.